About Me

2020/09/21

நிலா

 

சிந்துகின்ற வெள்ளொளி படர்ந்திடும் பந்தலிலே

சிதறிக் கிடக்கின்ற அஞ்சனமும் பேரழகே

வெண்மேகத் தாவணிக்குள் மறைத்திடும் முகமதைக்

காண்போரும் கண்படுவாரே எழில் கண்டே 


காற்றும் உதைத்திடாத உருளைப் பந்தைக்

காட்டியே சோறூட்டுவாரே அன்பின் அன்னையும்

ஆழ்கடலும் பொங்கியே உமிழ்ந்திட்ட நுரைக்குள்

விசும்பும் மேனியினை நனைத்தே மகிழ்ந்திடுமே 


பூமிப் பசிக்கு பரிமாறப்பட்ட தோசையைப்

பகிர்ந்திடுமோ சிறகடிக்கும் வான் பறவைகள்

சிதறிய விண்மீன்களின் ஒளி விளக்கினை

சிதைத்திடுமோ ஆதவனின் மறை விரிகதிரும்


இருண்ட காட்டினில் அலைந்திடும் தேவதையை

இதய அன்பால் வாழ்த்திடுமே அல்லியும்

ஆகாய வீதியில் யாரெறிந்தார் வெள்ளியை

அண்ணார்ந்து பார்க்கையில் அதிசயிக்கிறதே விழிகள்

ஜன்ஸி கபூர் - 21.09.2020

    




மனித நேயம்

மனதை வருடுகின்ற

---- மனிதநேயப் பேரொளியில்/

மகிழுமே உறவுகள்

---- மலருமே கூட்டுறவும்/


உள்ளத்தின் அன்பே

---- உணர்வின் மொழியாம்/

உயிரில் நனைந்தே

---- உரித்திடும் துயரத்தை/


இளகிய இதயத்தில்

---- இரங்கிடும் துன்பத்தில்/

இசைந்திடும் வாழ்க்கையே

---- இவ்வுலகத்தின் மேன்மையே/


ஜன்ஸி கபூர் - 21.09.2020





சிசுக்கொலை

பெண்ணழிப்பும் பெருஞ்சாபமே மானுட வாழ்விலே/

இன்னுயிர் அழித்திடும் இழி செயலதே/

கற்ற கல்வியும் சுவீகரித்த நாகரிகமும்/

கள்ளிப்பால் பிழிந் தூற்றுகின்ற கலியுலகில்/

அழுகின்றதே விழி திறக்காத சிசுவும்/

பழி வேண்டாமே காத்திடுவோம் பெண்மையினை/


ஜன்ஸி கபூர் - 21.09.2020




 


சிந்தனை செய் மனமே

சிந்தனை செய்தல் பகுத்தறிவின் ஆளுகை/

நிந்தனையை விலக்கிடும் தாரக மந்திரம்/

மாற்றத்தின் மூலவேர் மனதின் அலாரம்/

ஏமாற்றம் வீழ்த்திடும் சக்தியின் ஆதாரம்/ 

 

வருடுகின்ற கனவுகள் கண்ணாடிச் சிதறல்கள்/

வருந்துமே மனமும் எதிர்பார்ப்பின் உடைவில்/

தேடிய பொருளும் அழிவின் ஆழிக்குள்/

நாடிய செல்வமாக அரணாகும் அறமே/ 


ஒளிர்கின்ற தன்னம்பிக்கை ஒழித்திடும் சோர்வினை/

களிப்பின் இசைவினில் கலியும் கழறுமே/

இலக்கில்லா செயலுக்குள் இல்லையே வெற்றியும்/

இணைகின்ற கூட்டுறவில் இதயமது வலிமையில்/


சுற்றிடும் பூமிக்குள் பற்றிடும் பந்தங்கள்/

வெட்டினாலும் சிதைந்திடாத உன்னத உறவுகள்/

அற்ப பூமிக்குள் அனலெடுக்கும் ஆசைகள்/

அவலப் பிழம்பினுள் எதிர்காலம் புதைத்திடும்/


உதட்டின் தீ உருக்கிடுமே உயிரை/

உன்னத தேகத்தினுள் துளையிடுமே மரணம்/

உயிரை உருக்கும் துயரைப் பிடுங்க/

உள்ளத்தில் உறைந்திருக்கு அற்புத எண்ணங்களே/


ஜன்ஸி கபூர் - 21.09.2020