சிந்துகின்ற வெள்ளொளி படர்ந்திடும் பந்தலிலே
சிதறிக் கிடக்கின்ற அஞ்சனமும் பேரழகே
வெண்மேகத் தாவணிக்குள் மறைத்திடும் முகமதைக்
காண்போரும் கண்படுவாரே எழில் கண்டே
காற்றும் உதைத்திடாத உருளைப் பந்தைக்
காட்டியே சோறூட்டுவாரே அன்பின் அன்னையும்
ஆழ்கடலும் பொங்கியே உமிழ்ந்திட்ட நுரைக்குள்
விசும்பும் மேனியினை நனைத்தே மகிழ்ந்திடுமே
பூமிப் பசிக்கு பரிமாறப்பட்ட தோசையைப்
பகிர்ந்திடுமோ சிறகடிக்கும் வான் பறவைகள்
சிதறிய விண்மீன்களின் ஒளி விளக்கினை
சிதைத்திடுமோ ஆதவனின் மறை விரிகதிரும்
இருண்ட காட்டினில் அலைந்திடும் தேவதையை
இதய அன்பால் வாழ்த்திடுமே அல்லியும்
ஆகாய வீதியில் யாரெறிந்தார் வெள்ளியை
அண்ணார்ந்து பார்க்கையில் அதிசயிக்கிறதே விழிகள்
ஜன்ஸி கபூர் - 21.09.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!