About Me

2021/04/13

உலக மீட்பரே உடனே வாரும்

 

வலியின் பிடியில் வருந்தும் மானிடர்/
பலியும் ஆகின்றார் படரும் நுண்தீதால்/
இடரும் நீங்கியே இன்பம் கிடைத்திட/
உடனே வாரீர் உலக மீட்போரே/
கலியது நீக்கிடும் கருணையோரே/
வலிமை வாழ்வும் வனப்பாக வாரீரே/

ஜன்ஸி கபூர் - 17.12.2020
 

மார்கழியின் மாக்கோலம்

 

மெல்லிய பனித்தூறல் மேனி வருடுகையில்/
புள்ளிகளும் விரல் தொடுகின்றன பூரிப்பினில்/
மார்கழியின் மாக்கோலம் வாசலிலே பூக்கும்போது/
விடிகாலைப் பொழுதும் புலர்கின்றதே மங்கலத்துடன்/
பண்பாட்டின் கண்ணாடியாக மிளிர்கின்றதே கைவண்ணமும்/
 
ஜன்ஸி கபூர் - 17.12.2020

ஓவ்வொரு பூக்களுமே

 

ஓவ்வொரு பூக்களும் மகிழ்கின்றதே தினமும்/
உரமாகிப் போகின்ற வாழ்வைத்தான் எண்ணி/
நீராடும் மேகங்களும் மோதுகின்றதே ஒளியோடு/
சீராகப் பொழிந்திடவே இலட்சியம் கொள்ளுதே/

இருள் தொடாமல் விடியல் பிறந்திடுமோ/
இடர் காணாமல் வாழ்வும் தொடர்ந்திடுமோ/
பாறையாக மாறு தடைகளும் தூளாக/
போராட்டம் காணாத வாழ்வுமுண்டோ பாரினிலே/

உள்ளத்தின் வலிமையை உணர்ந்திடு நீயும்/
உடைந்திடும் கண்ணாடியல்ல உணர்வுகளின் கூடது/
விழி மூடினால் காட்சிகள் தோன்றுமோ/
வலிக்குள்ளே வழியுமுண்டு பாதையைத் தேடிடு/

மிதிபடும் மண்ணிலேயே தங்கமும் தலைகாட்டும்/
சதியை உடைத்திடும் சாவியுண்டு சிந்தனைக்குள்/
நதிக்குள் அணையிட்டால் பயிரும் நனைந்திடுமோ/
விதியையும் மதியாலே வென்றிடும் விதையாகு/

வெற்றுப் பாறைக்குள்ளும் வீழ்கின்ற விதைகள்/
முளைப்பதுண்டு இயற்கையின் இதமான அணைப்பினில்/
முடிவு என்பதே முதலின் புள்ளியே/
முயற்சியின் பலனில் முன்னேற்றம் கரங்களிலேயே/

சிரித்திடு துக்கமும் தொலைவினில் பறந்திட/
விரித்திடு சிறகினை வானும் அருகாக/
தரித்திடு இலட்சியத்துள் தடங்கள் வசந்தமாக/
உரித்திடு துக்கத்தை சுமைகள் தூரமாக/

நிலையற்ற வாழ்வில் கலைகள் பூக்கையில்/
விலையற்ற வாசமாக நிம்மதியும் பூக்குமே/
மனமே தேடு உனக்குள் உன்னையே/
மலையும் மடிதருமே உன்னால் சிலையாக/

ஜன்ஸி கபூர் - 22.12.2020
 


யாரோ கிசுகிசுத்தார்

 

 
இருள் தொலைகின்ற நிலவுப் பயணத்தில்
அலைப் புன்னகையினை ரசித்தபடி தழுவுகின்ற
ஈரக் காற்றின் இதமான வருடலில்
ஓராயிரம் கனவுகளை உயிர்ப்பிக்கின்ற ஆசைகளுடன்
நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணமொன்று
செல்ல வேண்டுமென்று யாரோ கிசுகிசுத்தார்

முற்றுப் பெறாத கடலலைத் துடிப்பினைப் போல
ஒருவரை ஒருவர் அன்பினால் பற்றி
வெற்றிட வாழ்விற்குள்ளும் உயிர்ப்பினை நிரப்பி
அடுத்தவர் விழித் தேடலுக்குள் விரிகின்ற
அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென
நமதான பயணம்பற்றி யாரோ கிசுகிசுத்தார்

துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி
கள்ளத்தனமாக விழிகளில் வைத்திருக்கின்ற உன்னுடன்
இசைகின்ற எனது இதயத் துடிப்பொலிகளையும்
ஏந்திக் கொண்டே அலைகின்ற அலைகளில்
நீ நனைகின்ற போதெல்லாம் 
நுரைப் பூக்களால் உனக்கு மாலையிட்டு
கரை தொட்டிடாத நீண்ட பயணத்தில்
உன்னிழலுடன் ஒன்றிக்கிடக்க மனம் ஏங்குகின்றது

ஏன்தானோ இக்காலம் இன்னும் வரவில்லை
இன்னும் என் பணிகள் உள்ளனவோ

ஆதவன் சிறகசைத்து மெல்லக் கீழிறங்குகையில்
நீயும் எனது எதிர்பார்ப்பிற்கு கைவிலங்கிட்டு
பிரிய ஆயத்தமாகின்றாய் பிரியமனமின்றி நானும்
தொலைக்கின்றேன் உன்னை மறைகின்றாய் அந்திக்குள்

விண்ணுக்கே முகவரியாகி மின்னும் உன்னை
நினைவூட்டுகின்றன குறையொளியில் கண்ணுக்குத் தெரிகின்ற
கரையை நாடுகின்ற கடல்ப் பறவைகள்

நீ ஒளிந்து கொண்டிருக்கின்ற தொலைப்புள்ளியின்
முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கின்றேன்
அடுத்தவர் அறிந்திடாத நமக்கிடையிலான தூரம்
எமக்கு மட்டும் தானே தெரியும் 
வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.

ஜன்ஸி கபூர் - 26.12.2020

 
Kesavadhas
ஜன்ஸி கபூர் 
மிகவும் ரம்மியமான வர்ணனை பாலுமகேந்திரா காமிரா போல் நம்மைச்
சூழலுக்குள் கொண்டு நிறுத்துகிறது!
இருள் தொலைகிறது!
நிலவுப் பயணம்!
அலைப் புன்னகையை ரசித்தபடி தழுவும் ஈரக்காற்று!
இதமான வருடல்!
ஓராயிரம் கனவுகள் உயிர்பிக்கின்றன ஆசைகளை!
நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணிக்க யாரோ கிசுகிசுத்தார்!
நமதான
பயணத்தைக் குறித்தும் யாரோ கிசுகிசுத்தார்;
அன்பினால் பற்றி
வெற்றிட வாழ்வுள் உயிர்ப்பை நிரப்பி
அடுத்தவர் விழித்தேடலுக்குள் விரிகின்ற
அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென நமதான பயணம் குறித்து யாரோ கிசுகிசுத்தார்!
உன்னிழலில்🔥ஒன்றிக் கிடக்கவே மனம் ஏங்கியது!
ஏன்தானோ இன்னும் இக்காலம் வரவில்லை!
விண்ணிற்கு முகவரியானாய்
தொலைப்புள்ளி முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கிறேன்!
நமக்கிடையேயான தூரம் நமக்கு மட்டுமே தெரியும்!
இந்தக் கவிதையில் எல்லாமே வெளிச்சத்தில் தான் சொல்லப் பட்டிருக்கிறது!
ஆனால் அந்த அழகான மதுரச மயக்கும் வர்ணனைகள் கவிதைக்கு ஓர் இருண்மை தருவதோடு
வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது!
உளம் கொண்ட வர்ணனை வரிகள்
துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி
கள்ளத்தனமான விழிகளில் வைத்திருக்கின்ற
உன்னுடன் இசைகின்ற
எனது இதயத் துடிப்பொலிகள்
ஏந்தி அலையும் அலைகளில்
நீ நனைகிற போதெல்லாம்
நுரைப்பூக்களால் உனக்கு மாலையிட்டு
கரைதொட்டிடாத நீண்ட பயணத்தில்
உன்னிழலுடன் ஒன்றிக் கிடக்க மனம் ஏங்குகிறது!
விண்ணுக்கே முகவரியான உன்னை நினைவூட்டும் கடல்பறவைகள்!
வாழ்த்துகள் கவிஞரே!