About Me

2021/04/13

யாரோ கிசுகிசுத்தார்

 

 
இருள் தொலைகின்ற நிலவுப் பயணத்தில்
அலைப் புன்னகையினை ரசித்தபடி தழுவுகின்ற
ஈரக் காற்றின் இதமான வருடலில்
ஓராயிரம் கனவுகளை உயிர்ப்பிக்கின்ற ஆசைகளுடன்
நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணமொன்று
செல்ல வேண்டுமென்று யாரோ கிசுகிசுத்தார்

முற்றுப் பெறாத கடலலைத் துடிப்பினைப் போல
ஒருவரை ஒருவர் அன்பினால் பற்றி
வெற்றிட வாழ்விற்குள்ளும் உயிர்ப்பினை நிரப்பி
அடுத்தவர் விழித் தேடலுக்குள் விரிகின்ற
அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென
நமதான பயணம்பற்றி யாரோ கிசுகிசுத்தார்

துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி
கள்ளத்தனமாக விழிகளில் வைத்திருக்கின்ற உன்னுடன்
இசைகின்ற எனது இதயத் துடிப்பொலிகளையும்
ஏந்திக் கொண்டே அலைகின்ற அலைகளில்
நீ நனைகின்ற போதெல்லாம் 
நுரைப் பூக்களால் உனக்கு மாலையிட்டு
கரை தொட்டிடாத நீண்ட பயணத்தில்
உன்னிழலுடன் ஒன்றிக்கிடக்க மனம் ஏங்குகின்றது

ஏன்தானோ இக்காலம் இன்னும் வரவில்லை
இன்னும் என் பணிகள் உள்ளனவோ

ஆதவன் சிறகசைத்து மெல்லக் கீழிறங்குகையில்
நீயும் எனது எதிர்பார்ப்பிற்கு கைவிலங்கிட்டு
பிரிய ஆயத்தமாகின்றாய் பிரியமனமின்றி நானும்
தொலைக்கின்றேன் உன்னை மறைகின்றாய் அந்திக்குள்

விண்ணுக்கே முகவரியாகி மின்னும் உன்னை
நினைவூட்டுகின்றன குறையொளியில் கண்ணுக்குத் தெரிகின்ற
கரையை நாடுகின்ற கடல்ப் பறவைகள்

நீ ஒளிந்து கொண்டிருக்கின்ற தொலைப்புள்ளியின்
முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கின்றேன்
அடுத்தவர் அறிந்திடாத நமக்கிடையிலான தூரம்
எமக்கு மட்டும் தானே தெரியும் 
வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.

ஜன்ஸி கபூர் - 26.12.2020

 
Kesavadhas
ஜன்ஸி கபூர் 
மிகவும் ரம்மியமான வர்ணனை பாலுமகேந்திரா காமிரா போல் நம்மைச்
சூழலுக்குள் கொண்டு நிறுத்துகிறது!
இருள் தொலைகிறது!
நிலவுப் பயணம்!
அலைப் புன்னகையை ரசித்தபடி தழுவும் ஈரக்காற்று!
இதமான வருடல்!
ஓராயிரம் கனவுகள் உயிர்பிக்கின்றன ஆசைகளை!
நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணிக்க யாரோ கிசுகிசுத்தார்!
நமதான
பயணத்தைக் குறித்தும் யாரோ கிசுகிசுத்தார்;
அன்பினால் பற்றி
வெற்றிட வாழ்வுள் உயிர்ப்பை நிரப்பி
அடுத்தவர் விழித்தேடலுக்குள் விரிகின்ற
அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென நமதான பயணம் குறித்து யாரோ கிசுகிசுத்தார்!
உன்னிழலில்🔥ஒன்றிக் கிடக்கவே மனம் ஏங்கியது!
ஏன்தானோ இன்னும் இக்காலம் வரவில்லை!
விண்ணிற்கு முகவரியானாய்
தொலைப்புள்ளி முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கிறேன்!
நமக்கிடையேயான தூரம் நமக்கு மட்டுமே தெரியும்!
இந்தக் கவிதையில் எல்லாமே வெளிச்சத்தில் தான் சொல்லப் பட்டிருக்கிறது!
ஆனால் அந்த அழகான மதுரச மயக்கும் வர்ணனைகள் கவிதைக்கு ஓர் இருண்மை தருவதோடு
வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது!
உளம் கொண்ட வர்ணனை வரிகள்
துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி
கள்ளத்தனமான விழிகளில் வைத்திருக்கின்ற
உன்னுடன் இசைகின்ற
எனது இதயத் துடிப்பொலிகள்
ஏந்தி அலையும் அலைகளில்
நீ நனைகிற போதெல்லாம்
நுரைப்பூக்களால் உனக்கு மாலையிட்டு
கரைதொட்டிடாத நீண்ட பயணத்தில்
உன்னிழலுடன் ஒன்றிக் கிடக்க மனம் ஏங்குகிறது!
விண்ணுக்கே முகவரியான உன்னை நினைவூட்டும் கடல்பறவைகள்!
வாழ்த்துகள் கவிஞரே!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!