About Me

2021/04/13

ஓவ்வொரு பூக்களுமே

 

ஓவ்வொரு பூக்களும் மகிழ்கின்றதே தினமும்/
உரமாகிப் போகின்ற வாழ்வைத்தான் எண்ணி/
நீராடும் மேகங்களும் மோதுகின்றதே ஒளியோடு/
சீராகப் பொழிந்திடவே இலட்சியம் கொள்ளுதே/

இருள் தொடாமல் விடியல் பிறந்திடுமோ/
இடர் காணாமல் வாழ்வும் தொடர்ந்திடுமோ/
பாறையாக மாறு தடைகளும் தூளாக/
போராட்டம் காணாத வாழ்வுமுண்டோ பாரினிலே/

உள்ளத்தின் வலிமையை உணர்ந்திடு நீயும்/
உடைந்திடும் கண்ணாடியல்ல உணர்வுகளின் கூடது/
விழி மூடினால் காட்சிகள் தோன்றுமோ/
வலிக்குள்ளே வழியுமுண்டு பாதையைத் தேடிடு/

மிதிபடும் மண்ணிலேயே தங்கமும் தலைகாட்டும்/
சதியை உடைத்திடும் சாவியுண்டு சிந்தனைக்குள்/
நதிக்குள் அணையிட்டால் பயிரும் நனைந்திடுமோ/
விதியையும் மதியாலே வென்றிடும் விதையாகு/

வெற்றுப் பாறைக்குள்ளும் வீழ்கின்ற விதைகள்/
முளைப்பதுண்டு இயற்கையின் இதமான அணைப்பினில்/
முடிவு என்பதே முதலின் புள்ளியே/
முயற்சியின் பலனில் முன்னேற்றம் கரங்களிலேயே/

சிரித்திடு துக்கமும் தொலைவினில் பறந்திட/
விரித்திடு சிறகினை வானும் அருகாக/
தரித்திடு இலட்சியத்துள் தடங்கள் வசந்தமாக/
உரித்திடு துக்கத்தை சுமைகள் தூரமாக/

நிலையற்ற வாழ்வில் கலைகள் பூக்கையில்/
விலையற்ற வாசமாக நிம்மதியும் பூக்குமே/
மனமே தேடு உனக்குள் உன்னையே/
மலையும் மடிதருமே உன்னால் சிலையாக/

ஜன்ஸி கபூர் - 22.12.2020
 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!