------------------------------------------------------------------------
ஜன்ஸி கபூர் - 16.11.2020
------------------------------------------------------------------------
ஜன்ஸி கபூர் - 16.11.2020
அன்றாட வாழ்வின் அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்)
----------------------------------------------------------------------------------------------------
தெளிவான பகுத்துணரக்கூடிய அனைவராலும் ஏற்கக்கூடிய கொள்கைகளை வகுத்து அதன்வழியில் வாழ்ந்து காட்டிய எம் பெருமானாரின் ஒவ்வொரு செயல்களிலும் முன்மாதிரித் துளிகள் நிரம்பிக் காணப்படுகின்றன.
ஒட்டுமொத்த முழு சமுகத்திற்கு முழுமைபெற்ற முன்மாதிரி என அகில உலகத்தைப் பரிபாலித்து தன் அதிகாரத்திற்குள் அதனை வைத்து இயக்குகின்ற அல்லாஹ் தஆலா சாட்சி பகிர்ந்து நற்சான்றிதழ் வழங்கியுள்ளான்.
அல்லாஹ் சொல்லுகிறான்.
'அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது."
'நிச்சயமாக நபியே நீர் நற்பண்புகளுக்குச் சொந்தக்காரர்'
என அல்லாஹ் தஆலா வின் நற்சான்றினைப் பெற்ற எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து பார்ப்போமானால், அவர் வாழ்ந்து காட்டிய ஆத்மீக, லௌகீக துறைகள் உட்பட அனைத்து துறைகளிலும் அழகிய முன்மாதிரிகள் தெரிகின்றன. அவற்றிலிருந்து நாம் பின்பற்றவேண்டிய சிறந்த வாழ்வியல் நெறிகள் காணப்படுகின்றன.
'நான் உங்களுக்கு இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன், அவைகளைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். அவைதான் அல்-குர்ஆன்,, அல்-ஹதீஸ்' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
எனவே,நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில் அவர் காட்டிச் சென்ற நல்வழி மனித குலத்துக்கு இன்று மிகவும் அவசியமாகும்.
இன்றைய உலகின் போக்கினை ஈடுசெய்யக்கூடிய மருந்தாக நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிகள் காணப்படுகின்றன. பகுத்தறிவுடன் அனைவரும் விரும்பக்கூடியதான தெளிவான கொள்கைகளை வகுத்து, அதன் வழியில் வாழ்ந்து காட்டியவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள்.
மறுமை வாழ்வை அடைவதை நோக்காகக் கொண்டு வாழ்வில் அநாவசியமான ஆடம்பரங்களிலிருந்து நீங்கி உளத்தூய்மையுடன் வாழ்வதற்கே இஸ்லாம் வழிவகுத்துள்ளது. எம் பெருமானார் (ஸல்) அவர்களும் அவ்வாறே வாழ்ந்து காட்டினார்கள்.
எம் பெருமானார் ஸலாமை அதிகம் அதிகமாகப் பரப்பினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா!. அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். அது உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 93.
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கிடையே அன்பு காணப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் சொல்லும் ஸலாம் இப்பண்பை வளர்க்கின்றது.
மனிதனின் பலவீனம் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. எனவே நாவடக்கம் என்பது நமது தனித்துவத்தைப் பேண உதவுகின்றது. எமது பெருமானார் (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட நாவடக்கம் நாம் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரியாகும்.
"மனிதன் உடலில் நாவு, மர்மஸ்தானம் இந்த இரண்டு உறுப்புகளும் அபாயகரமான பலவீனமான இடங்கள். இங்கிருந்து தாக்குதல் நடத்துவது ஷைத்தானுக்கு எளிதானது. பெரும்பாலான பாவங்கள் இந்த இரண்டு உறுப்புக்களிலிருந்துதான் ஏற்படுகிறது. எவராவது ஷைத்தானின் தாக்குதல்களிலிருந்து அவ்விரண்டையும் காப்பாற்றிக் கொண்டால் அவரது தங்குமிடம் சுவனமாகவே இருக்கும் என்பதுக்கு நான் பொறுப்பு"
என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அதுமாத்திரமின்றி ஒருவர் பற்றிய அவதூறுகளின் பரப்புகையும் அவரிடம் காணப்படவில்லை.
"என் தோழர்களில் எவரும் யாரைப்பற்றியும் என்னிடம் எந்த குறையும் சொல்ல வேண்டாம் நான் உங்கள் அனைவர்களையும் தூய்மையான உள்ளத்தோடு சந்திக்க விரும்புகிறேன்"
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அவ்வாறே பொய் பேசாமையும் அவரிடம் காணப்பட்ட அழகிய முன்மாதிரியான குணமாகும்.
"ஒரு தாய் தன் மகனை இங்கே வா நான் உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைப்பதைக் கண்ட நபியவர்கள் அப்பெண்ணிடம் உன் மகனுக்கு ஏதாவது தருவதாக் அழைத்தாயே ஏதும் கொடுக்கிறாயா? எனக்கேட்க, ஆம் பேரித்தம்பழம் என அப்பெண் கூறினார். அதற்கு நபியவர்கள் அப்படி எதுவும் கொடுக்க வில்லையானால் பொய் சொன்ன குற்றம் உன் மீது எழுதப்படும் என்றார்கள்.
(ஹதீஸ் அபூ தாவூது 4339.)
அவ்வாறே அடுத்தவரின் பொருள் சொத்துக்களுக்கு ஆசைப்படாதவராகவே அண்ணல் நபியவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
'சின்னஞ் சிறுவராக இருந்த நபியின் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் ஸதகா பேரித்தம் பழங்களில் ஒன்றை தங்களின் வாயில் போட்ட பொழுது அதைக்கண்ட நபியவர்கள் துப்பு துப்பு என துப்ப வைத்து ஸதகா பொருளை நாம் சாப்பிடக்கூடாது எனத் தெரியாதா என்றார்கள்.
(புகாரி 1396)
அவ்வாறே வியாபாரத்தில் ஏமாற்று மோசடி என்பவற்றையும் வெறுத்தார்கள்.
"நபி(ஸல்) அவர்கள் உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்றார்கள். ஸஹிஹ் முஸ்லிம் 102:
நற்குணத்தில் நபி பெருமான் சிறந்தவர் என்பதை அல்லாஹ் தஆலாவை சாட்சி பகிர்கின்றான். அதனால்தான் அவரை இவ்வுலகின் இறுதித் துதுவராக நியமித்தான்.
மக்களின் குணங்களை சீர்படுத்துவதும் அவர்களுக்குள் இருக்கும் தீய குணத்தின் வேர்களைப் பிடுங்கி விடுவதும் நற்குணங்களை உருவாக்குவதும் தான் அண்ணல் நபியின் நோக்கமாக இருந்தது. நாமும் நமது குணப் பண்புகளை சீர்படுத்தி நல்வாழ்விற்குள் நுழைவது அவசியமாகும்.
மேலும் நாயகம் (ஸல்) கண்ணியத்திற்குரிய தலைவராக இருந்தும்கூட பதவிநிலை பெருமை அவரிடம் இருக்கவில்லை. அரசியல்சார் எக்காரியத்தை ஆற்றுவதாக இருந்தாலும் தம்முடன் கூட இருப்போரின் ஆலோசனையைக் கேட்டறிவார்கள். மக்களோடு மக்களாக நின்று துல்ஹஜ் பிறை பத்தாம் நாளன்று தங்களின் ஒட்டகத்தின் மீது அமர்ந்த நிலையில் பெரிய ஜம்ராவுக்கு கல் எறிந்தார்கள்.
அவர்களின் சகிப்புத் தன்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பண்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாருடைய தூதுக்குழுவின் தலைவரை நோக்கி (பாராட்டும் வகையில்) கூறினார்கள் உம்மிடம் அல்லாஹ்விற்கு விருப்பமான இரு குணங்கள் உள்ளன. அவை சகிப்புத்தன்மையும் (உணர்ச்சிவசப்படாமை) நிதானமும்தான் என்றார்கள்.
எம் பெருமான் ஸல் அவர்கள சிறந்த ஆசிரியர்ப் பண்புகளைக் கொண்டவராகக் கற்றுக் கொடுத்தார்கள்.
"நபியே நீர் மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்m அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு நாம் அருளினோம்"
. அல் குர்ஆன் 5:67
அல்லாஹ்வின் தூதர் அவர்கள், அவர்களுக்கு அருளப்பட்ட வஹியை (அல் குர்ஆனை) அழகிய முறையில் மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அது மாத்திரமின்றி தனது வாழ்கையையும் அல் குர்ஆனிய வாழ்கையாக வாழ்ந்து காட்டினார்கள். செருப்பணிவது முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்துக்குமான வழிகாட்டல்களை நபிகளார் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
கல்வி கற்பதை ஆர்வமூட்டி மாணவர்களை அமைதியாக செவி தாழ்த்தி கேட்க வைத்தார்கள். மாணவர்கள் மறந்து விடாது சரி வரக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே விடயத்தை மூன்று முறை மீட்டிக் கூறுதல் உரத்த குரலில் கற்பித்தல் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காக சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு பதிலைக் கற்றுக் கொடுத்தல் மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமைகளைக் கூறிக் கற்றுக் கொடுத்தல் போன்ற பல நடைமுறைகளைக் கைக்கொண்டு மாணவர்களுக்கு அறிவைப் புகட்டிக் கொடுத்தார்கள்.
ஒவ்வொரு ஆசானும் அண்ணலாரின் முறைகளைப் பின்பற்றினால், எமது மாணவர் சமுதாயம் உயர் சிந்தனைத்திறன் கொண்டவர்களாக மாற்றப்படுவார்கள் என்பது வெள்ளிடைமலை.
இஸ்லாம் அல்லாத அண்டை மக்களுடனும் அன்புடன் நடந்தார்கள். இத்தகைய மனப்பக்குவம் நம் மனிதர்களிடம் இருக்குமானால் இவ்வுலகம் அழகிய சமாதானப் பூஞ்சோலையாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
தங்களிடம் வரும் விருந்தினர்களையும் நாயகமவர்கள் பெரிதும் உபசரிப்பார்கள். முஸ்லிம் அல்லாதாரும் நபியவர்களிடம் விருந்தினர்களாக வருவதுண்டு. அவர்களையும் இன்முகத்துடன் உபசரித்து வந்தார்கள். தங்களுக்கு இன்னல் புரிந்தவர்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னித்து விடுவார்கள். அல்-குர்ஆனும் இதனையே வற்புறுத்துகின்றது.
'யாராவது உமக்கு அநியாயம் செய்து தொல்லை கொடுத்தால் அதைப் பாராட்டாமல் பொறுத்துக் கொள்ளும், நன்மையும் நற்காரியங்களுமே (மக்கள்) செய்யுமாறு நீர் ஏவும்.அறிவில்லாதவர்களிடமிருந்து விட்டு விலகிக்கொள்ளும்'
என திருமறை பகர்கின்றது.
சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு, அமைதியாக இயங்குவதற்குத் தேவையான சமநிலைத் தன்மை கொண்ட மகத்தான சட்டங்களை வழங்கியவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள்.
பெண் இனத்தைக் கண்ணியப்படுத்தி ஆண்களுக்கு நன்மதிப்பை வழங்கியவர் நாயகம் (ஸல்) அவர்களே.
இறுதி ஹஜ்ஜின்போது நிகழ்த்திய பேருரையில்,
'உங்கள் மனைவிகள் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பதுபோல் அவர்களுக்கு உங்கள் மீது உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவிகளை அன்புடனும் அமைதியுடனும் நடாத்துங்கள்.இறைவனுக்குப் பயந்து அவர்களின் உரிமைகளைக் கவனியுங்கள்' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காட்டாது எல்லோரையும் ஒரு முகமாகவே நோக்கி வந்தார்கள். எனினும் ஏழைகளிடம் மிகவும் பரிவு காண்பித்து வந்தார்கள்.
ஒரு சமயம் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கி, 'ஆயிஷாவே! உம்முடைய வாசலிலிருந்து ஓர் ஏழையை ஒன்றும் கொடுக்காமல் திருப்பி விடாதீர், ஒரு பேரீச்சம்பழத் துண்டு கொண்டாவது அவரைத் திருப்தி செய்யும்.
ஆயிஷாவே! ஏழைகளிடம் அன்பு வையும். நீர் அவர்களை உமக்கு அருகாமையில் ஆக்கினால் இறைவனும் உம்மை அவனுக்கு அருகாமையில் ஆக்குவான்' என்று சொன்னார்கள்.
எனவே இவ்வாறு ஒவ்வொரு துறைகளை எடுத்துப் பார்த்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரிகள் காணப்படுகின்றன. அரசியல், பயிற்சியளித்தல், வியாபாரி, தந்தை, கணவன், நீதி செலுத்துபவர், மன இச்சைகளை தியாகம் செய்தல், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வீரர், தலைசிறந்த தலைவர், சங்கைமிக்கவர் என எத்துறைகளை எடுத்து நோக்கினாலும் அவர்களின் முன்மாதிரிகளுக்கான சான்றுகள் கிடைக்கின்றன.
குர்ஆன் ஸூன்னா பற்றி பேசக்கூடிய எம்மிடத்தில் இப்பண்புகள் வரவேண்டும் நாம் முன்மாதிரி சமூகமாக வாழ வேண்டும்.