About Me

2021/04/13

மலர்கள் பேசுமா

 

மாலைப் பொழுதின் சோலை வெளிதனில்/

மெல்ல நடக்கின்றேன் சில பொழுதுகளில்/

ஒலி சிந்தாத மௌனத் துடிப்புக்களாக/ 

களிப்பேற்றுகின்றன மலர்கள் மழலை மொழியில்/


மலர்கள் பேசுமா ஆறறிவின் தேடலது/  

நிசப்த வெளிக்குள் ரசிக்கின்றேன் மலர்மொழியை/

வார்த்தைகள் உதிர்க்காத ஒவ்வொரு அசைவும்/

கோர்க்கின்றதே உயிருக்குள் இதமான நேசிப்பை/


சேர்க்கின்றேன் நானும்  செவியைத் திறக்கின்றேன்/

அவை பஞ்சு இதழ்களின் கெஞ்சல்கள்/


நெஞ்சம் ஈர்த்திடும் கொஞ்சும் மொழியினுள்/ 

வஞ்சி என் விழிகளும் மயங்குகின்றனவே/

மௌனச் சந்தம் இசையாக வருடுகின்றதே/

மெல்லிய அசைவும் மொழியாக உயிர்க்கின்றதே/  


தென்றல் விரல்கள் பூமேனியைத் தழுவுகையில்/

வெட்கத்தில் ஒளிகின்ற ஓசையும் இசையே/

சிறகடிக்கும் பூச்சிகளின் அமிர்தக் காதலும்/

உயிர்க்கின்ற பிணைப்பின் ஒலியும் மொழியே/


சூரிய விடியலின் சந்தனக் குளிப்பும்/

உதிர்க்கும் கூதலும் அழகிய மொழியே/

பனித்துளிகள் அணைக்கையில் உணர்ந்திடும் நாணமும்/

இனித்திடும் உணர்வுக்குள் மொழியாகிப் பூக்குமே/


ஜன்ஸி கபூர் - 13.10.20

பொறுமை

 


வாழ்க்கை என்பது நீண்ட தேடல். நகர்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் எமது எதிர்பார்ப்பினை மீறிய ஏதோ ஒன்று எம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன. எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான சமநிலை குழும்பும்போது ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் எம்மை நிலைகுலைய வைக்கின்றது. மனம் தடுமாறும்போது பொறுமை எல்லை மீறுகின்றது. அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அறிவை விட உணர்ச்சிகளுக்கே முதலிடம் கொடுக்கின்றோம். அவ்வாறான பொறுமையை இழந்து அல்லல்படுகின்ற சந்தர்ப்பங்களில் நான் என் பொறுமையை இழக்கவில்லை. உணர்ச்சிகளின் உத்வேகம் மரண எல்லை வரை நிறுத்தியிருக்கின்றது. ஆனாலும் சுதாகரித்தவாறே அந்த நிலைகளைக் கடந்திருக்கின்றேன். கடந்து கொண்டுமிருக்கின்றேன். இன்று நான் கடைப்பிடித்த அந்த பொறுமை எனக்கு பல வெற்றிகளைக் குவித்திருக்கின்றது என்பதே யதார்த்தம். 

இலக்குகளை நோக்கிய என் பயணத்தை புரிதலுடன் கடந்திருக்கின்றேன். அகதி எனும் போர்வைக்குள் இளமைக் காலம் அனைத்தையும் கரைத்து வாழ்க்கையுடன் போராடிய போதும் கடைப்பிடித்த பொறுமை இன்று இரண்டு தசாப்தங்களின் பின்னர் எனது தாயக பூமியில் ஓர் தலைமைத்துவ அதிகாரியாக உயர்த்தியிருக்கின்றது. எவ்வாறான துன்பச் சூழ்நிலை என்னை அணைக்கின்றபோது இறைவனைத் தியானிப்பேன். மனம் இலேசாகி அதைக் கடப்பதற்கான பொறுமை ஆட்கொள்கின்றது.

நாம் தனித்திருப்பதில்லை. பிறரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களால் ஏற்படுகின்ற குறைகள் தவறுகளையும் உடனே சுட்டிக்காட்டும்போது முரண்பாடுகள் எழுகின்றது. அக்கணங்களில் அவற்றை பொறுமையுடன் தாங்கி பின்னர் ஏற்ற தருணங்களில் அவர்கள் புரியும்படியாக வெளிப்படுத்துவேன்.

பொறுமையை நாம் இழக்கும்போதுதான் சினம் நம்மையே எரிக்க ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் வாக்குவாதங்களும் சண்டைகளும் மூழ்க ஆரம்பிக்கின்றது. இவற்றைத் தவிர்க்க பொறுமை உதவுகின்றது. நம்மை நாமே பொறுமையுடன் கட்டுப்படுத்தினால் மிகப் பெரிய பொக்கிஷமான நிம்மதியும் அமைதியும் நமக்குச் சொந்தமாகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பொறுமையென்பது அவசியமான உணர்வு. பொறுமைக்குள் நம்மை உள்ளடக்கும்போது அடுத்தவருக்காக விட்டுக் கொடுக்கின்றோம். விட்டுக்கொடுப்பும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றன. 

'பொறுத்தார் பூமியை மட்டுமல்ல உறவுகளையும் ஆளலாம்'

ஜன்ஸி கபூர் - 13.10.2020


காதல்

விழிகளின் அன்பில் இணைந்ததே இதயங்கள்/

இதயங்களின் மொழியாகப் பூத்ததே காதல்/

காதல் நறுமணத்தில் இனித்ததே கனவுகள்/

கனவுகள் விரிந்திட காட்சியெல்லாம் உனதாக/


உனதான நினைப்பினில் மூழ்கின்றேன் தினமும்/

தினமும் எனக்குள் உயிர்க்கின்றாய் இதமாக/

இதமான எதிர்காலம் மலர்ந்திடவே நானும்/

நானும் கையேந்துகிறேன் இறைவனிடம் அருளுக்காக/


ஜன்ஸி கபூர் - 11.10.2020

    



யாம்பட்ட தாம்படாவாறு

 விழிகளில் மொய்க்கின்ற அழகுக் காதல்/

தழுவிய துணையின் பிரிவைத் தாங்குமோ/

அழுகையின் ஈரமும் உயிரை நனைக்கையில்/

நழுவுமே துன்பமும் அனலுக்குள் வீழ்த்தி/

அன்பின் தழுவலில் சிலிர்த்திடும் காமத்தில்/

அகலுமோ பெண்மையின் நாணமும் இடமறியாமல்/

அடுத்தவர் அறிவாரோ உள்ளத்தின் உணர்வோட்டத்தை/

ஆருயிரின் பிரிவுத் தவிப்பின் வலியிது/


யாம் பெற்ற காமத் துன்பங்களை/ 

தாம் அறிந்தால் பரிகசிப்பாரோ தோழியரும்/

என் வலியினைக் கேலிக்குள் வீழ்த்துவோர்/

அன்பனோடு இணைந்திடவே வழியும் கூறுவாரோ/


திரைக்குள் பழித்தோர் வார்த்தைகள் இன்று/

உரைக்கின்றதே செவியினில் நேரலைத் தாக்கமாக/

இரவின் சுழற்சிக்குள் புணர்வும் பிரிவும்/

இயல்பே இதயமுள்ள மாந்தர் வாழ்வில்/


இத்துன்பம் அறியாதோர் இகழ்கின்றீர் எனக்கே/

இதயத்தின் துடிப்பினை உடைக்கின்றீர் வார்த்தைகளில்/

என்றே தனக்குள் உரைக்கின்றாள் தலைவியும்/

எதிரில் இருக்கும் தோழியரின் செவியுமேந்தவே/


ஜன்ஸி கபூர் - 01.10.2020