மாலைப் பொழுதின் சோலை வெளிதனில்/
மெல்ல நடக்கின்றேன் சில பொழுதுகளில்/
ஒலி சிந்தாத மௌனத் துடிப்புக்களாக/
களிப்பேற்றுகின்றன மலர்கள் மழலை மொழியில்/
மலர்கள் பேசுமா ஆறறிவின் தேடலது/
நிசப்த வெளிக்குள் ரசிக்கின்றேன் மலர்மொழியை/
வார்த்தைகள் உதிர்க்காத ஒவ்வொரு அசைவும்/
கோர்க்கின்றதே உயிருக்குள் இதமான நேசிப்பை/
சேர்க்கின்றேன் நானும் செவியைத் திறக்கின்றேன்/
அவை பஞ்சு இதழ்களின் கெஞ்சல்கள்/
நெஞ்சம் ஈர்த்திடும் கொஞ்சும் மொழியினுள்/
வஞ்சி என் விழிகளும் மயங்குகின்றனவே/
மௌனச் சந்தம் இசையாக வருடுகின்றதே/
மெல்லிய அசைவும் மொழியாக உயிர்க்கின்றதே/
தென்றல் விரல்கள் பூமேனியைத் தழுவுகையில்/
வெட்கத்தில் ஒளிகின்ற ஓசையும் இசையே/
சிறகடிக்கும் பூச்சிகளின் அமிர்தக் காதலும்/
உயிர்க்கின்ற பிணைப்பின் ஒலியும் மொழியே/
சூரிய விடியலின் சந்தனக் குளிப்பும்/
உதிர்க்கும் கூதலும் அழகிய மொழியே/
பனித்துளிகள் அணைக்கையில் உணர்ந்திடும் நாணமும்/
இனித்திடும் உணர்வுக்குள் மொழியாகிப் பூக்குமே/
ஜன்ஸி கபூர் - 13.10.20
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!