About Me

2021/04/13

பொறுமை

 


வாழ்க்கை என்பது நீண்ட தேடல். நகர்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் எமது எதிர்பார்ப்பினை மீறிய ஏதோ ஒன்று எம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன. எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான சமநிலை குழும்பும்போது ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் எம்மை நிலைகுலைய வைக்கின்றது. மனம் தடுமாறும்போது பொறுமை எல்லை மீறுகின்றது. அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அறிவை விட உணர்ச்சிகளுக்கே முதலிடம் கொடுக்கின்றோம். அவ்வாறான பொறுமையை இழந்து அல்லல்படுகின்ற சந்தர்ப்பங்களில் நான் என் பொறுமையை இழக்கவில்லை. உணர்ச்சிகளின் உத்வேகம் மரண எல்லை வரை நிறுத்தியிருக்கின்றது. ஆனாலும் சுதாகரித்தவாறே அந்த நிலைகளைக் கடந்திருக்கின்றேன். கடந்து கொண்டுமிருக்கின்றேன். இன்று நான் கடைப்பிடித்த அந்த பொறுமை எனக்கு பல வெற்றிகளைக் குவித்திருக்கின்றது என்பதே யதார்த்தம். 

இலக்குகளை நோக்கிய என் பயணத்தை புரிதலுடன் கடந்திருக்கின்றேன். அகதி எனும் போர்வைக்குள் இளமைக் காலம் அனைத்தையும் கரைத்து வாழ்க்கையுடன் போராடிய போதும் கடைப்பிடித்த பொறுமை இன்று இரண்டு தசாப்தங்களின் பின்னர் எனது தாயக பூமியில் ஓர் தலைமைத்துவ அதிகாரியாக உயர்த்தியிருக்கின்றது. எவ்வாறான துன்பச் சூழ்நிலை என்னை அணைக்கின்றபோது இறைவனைத் தியானிப்பேன். மனம் இலேசாகி அதைக் கடப்பதற்கான பொறுமை ஆட்கொள்கின்றது.

நாம் தனித்திருப்பதில்லை. பிறரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களால் ஏற்படுகின்ற குறைகள் தவறுகளையும் உடனே சுட்டிக்காட்டும்போது முரண்பாடுகள் எழுகின்றது. அக்கணங்களில் அவற்றை பொறுமையுடன் தாங்கி பின்னர் ஏற்ற தருணங்களில் அவர்கள் புரியும்படியாக வெளிப்படுத்துவேன்.

பொறுமையை நாம் இழக்கும்போதுதான் சினம் நம்மையே எரிக்க ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் வாக்குவாதங்களும் சண்டைகளும் மூழ்க ஆரம்பிக்கின்றது. இவற்றைத் தவிர்க்க பொறுமை உதவுகின்றது. நம்மை நாமே பொறுமையுடன் கட்டுப்படுத்தினால் மிகப் பெரிய பொக்கிஷமான நிம்மதியும் அமைதியும் நமக்குச் சொந்தமாகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பொறுமையென்பது அவசியமான உணர்வு. பொறுமைக்குள் நம்மை உள்ளடக்கும்போது அடுத்தவருக்காக விட்டுக் கொடுக்கின்றோம். விட்டுக்கொடுப்பும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றன. 

'பொறுத்தார் பூமியை மட்டுமல்ல உறவுகளையும் ஆளலாம்'

ஜன்ஸி கபூர் - 13.10.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!