About Me

2021/04/13

தந்தையின் தாலாட்டு

 






அன்புத் தூளியிலே 
அணைத்த கரங்களுக்குள்/ 
தாய்மையைக் கண்டேனே 
தந்தையும் தாலாட்டுகையில்/

இரவின் மடியினில் 
இதமான துயிலினை/
இரசித்த நினைவுகள் 
இன்பத்தின் உயிர்ப்பில்/

வீரத்தின் சாயலை 
நாமத்தில் நினைவூட்டி/
விருப்புடன் கற்றிடவே  
விதையுமானார் வாழ்வினிலே/

பாசத்தை ஒலியாக்கி 
பாதைக்குள் வழிகாட்ட/
சிந்திய வாசனை 
குன்றவில்லையே நெஞ்சுக்குள்/

ஜன்ஸி கபூர் - 18.12.2020

திசை மாறிய பறவைகள்



விழிகளின் மொழியினில் மலர்ந்த காதல்
விதியின் சிறையினில் முடங்கியதே தானாய்
சதி செய்ததோ எதிர்பார்ப்பும் நம்பிக்கைகளும்
சகதிக்குள் மூழ்கியதே எதிர்கால வனப்பும்

புரிந்துணர்வு காணாத துணைகளின் கரங்கள்
வரிகளில் எழுதின விவாகரத்தெனும் முடிவினை
அடுத்தவர் பார்வையில் ஆயிரம் குற்றங்கள்
அனலின் பிம்பத்தில் இல்லறத்தின் சொப்பனங்கள்

ஓர் கூட்டின் அன்றில் பறவைகள்
திசை மாறின  உறவும் அறுந்ததனால்
வசை பாடக் காத்திருப்போர் ஏளனத்தில்
இசைந்ததுவே இணை பிரிந்த இதயங்கள்

பிரிவின் எல்லைகளைத் தொடுகின்ற முரண்பாடுகள்
பிள்ளைகளின் வனப்பினையும் வருத்துமே நிதமும்
அலைகின்ற அல்லலுக்குள் அகப்படுகின்ற ஊடல்கள்
சிதைகின்றனவே சிறப்பற்ற வாழ்வின் முடிவினாலே

ஜன்ஸி கபூர் - 22.12.2020

விதியின் விளையாட்டு



உணர்வினில் கலந்த 
உறவின் பிணைப்புக்கள்/
உதிர்ந்தன யுத்தத்தில் 
உயிரும் துடித்திட/
உதிரம் நனைந்த 
உக்கிர விம்பங்கள்/
உறவாடுதே இன்னும் 
உயிர்ப்பின்றிய பொழுதுகளுடன்/

கனவுகள் கருகின 
கண்ணீருக்குள் தடங்களே/
கலக்கத்தின் நிழலிலே 
கலந்ததே எதிர்காலமும்/
கற்களும் முட்களும் 
கண்மணிக்குள் பாதையிட/
கற்பனைகளும் சரிந்தன 
கதறல் ஒலிதனில்/

அல்லலைச் சுமக்கின்ற 
அகதி வாழ்வால்/
அகிலத்தில் தரிப்பிடமின்றி 
அலைகின்றோம் வலியுடனே/
தாயகம் துறந்த 
தவிப்பின் போராட்டத்தில்/
தரிக்கின்றதே நினைவுகள் 
தள்ளாடுதே எதிர்பார்ப்புக்கள்/

ஜன்ஸி கபூர்
 

நதியில்லா ஓடம்

 


கனாக்கள் உயிர்க்காத கண்களின் வலிதனை/

கண்ணீரும் சொல்கையில் கன்னங்களும் கதறுதே/

தொலைக்கின்றேன் வசந்தங்களை தொல்லையாக வறுமையே/

நிலையில்லா உலகினில் நிம்மதியும் தொலைவிலே/ 


வற்றிய கரையில் பற்றுடன் காத்திருக்கின்ற/

ஒற்றைக்கால் கொக்காகி வீணாகிறதே எதிர்பார்ப்புக்கள்/

சுற்றிப் படர்ந்தே சுமையாகின்ற துரோகங்கள்/

எட்டி உதைக்கையில் எரிகின்றேன் நெருப்பிலே/


முடிவுறுத்தாத ஆசைகள் முகம் காட்டுகையில்/

துக்கங்களை ஏந்தித் துடிக்கின்றதே ஏக்கங்கள்/ 

விடிவில்லா எதிர்காலம் விழுகின்ற பூமியில்/

அலைகின்றதே வாழ்வும் நதியில்லா ஓடமாகி/


ஜன்ஸி கபூர் -5.12.2020