விழிகளில் மொய்க்கின்ற அழகுக் காதல்/
தழுவிய துணையின் பிரிவைத் தாங்குமோ/
அழுகையின் ஈரமும் உயிரை நனைக்கையில்/
நழுவுமே துன்பமும் அனலுக்குள் வீழ்த்தி/
அன்பின் தழுவலில் சிலிர்த்திடும் காமத்தில்/
அகலுமோ பெண்மையின் நாணமும் இடமறியாமல்/
அடுத்தவர் அறிவாரோ உள்ளத்தின் உணர்வோட்டத்தை/
ஆருயிரின் பிரிவுத் தவிப்பின் வலியிது/
யாம் பெற்ற காமத் துன்பங்களை/
தாம் அறிந்தால் பரிகசிப்பாரோ தோழியரும்/
என் வலியினைக் கேலிக்குள் வீழ்த்துவோர்/
அன்பனோடு இணைந்திடவே வழியும் கூறுவாரோ/
திரைக்குள் பழித்தோர் வார்த்தைகள் இன்று/
உரைக்கின்றதே செவியினில் நேரலைத் தாக்கமாக/
இரவின் சுழற்சிக்குள் புணர்வும் பிரிவும்/
இயல்பே இதயமுள்ள மாந்தர் வாழ்வில்/
இத்துன்பம் அறியாதோர் இகழ்கின்றீர் எனக்கே/
இதயத்தின் துடிப்பினை உடைக்கின்றீர் வார்த்தைகளில்/
என்றே தனக்குள் உரைக்கின்றாள் தலைவியும்/
எதிரில் இருக்கும் தோழியரின் செவியுமேந்தவே/
ஜன்ஸி கபூர் - 01.10.2020