About Me

2021/04/14

வண்ணக் காதல்

 

 

 பசுமை நினைவுகளின் இதமான அணைப்பினில்

பரவுகின்றதே மகிழ்வும் தேகமும் சிலிர்த்திட

கொஞ்சும் விழிகளின் காதல் பார்வையில்

பஞ்சு மேனியும் நாணத்தில் சிவக்கிறதே 

 

தழுவுகின்ற சிறகினில் உரசுகின்ற தென்றலும் 

மஞ்சள் முகத்திலே முத்தங்களைப் பொறிக்கையில் 

வட்டக் கருவிழிதனில் மொய்த்திருக்கும் அன்பினைச்

சூடுகின்றதே கனவும் சூழுகின்றதே வனப்பும் 

 

இரகசியச் சந்திப்பில் இசைகின்ற உயிர்களில் 

இரேகைகளாகப் படிகின்றதே ஊடற் சுகமும் 

இதயம் குளிர்கின்றதே உதயத்தின் அலைவினில் 

இரசிக்கின்றேன் வண்ணங்களைத் தெளிக்கின்ற காதலையே 

 

ஜன்ஸி கபூர் - 30.09.20

 

அன்னப் பெடையே நாணமேனோ

 


பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்/

பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே/


கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்/

கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்/


கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்/

சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்/


சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்/

பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்/


விரலும் தீண்டா மென் காதலால்/

உரசினேன் உன்றன் உயிரினை அன்பே/


சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே/

ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ/


ஜன்ஸி கபூர் - 14.10.2020

சுயமியால் சுயமிழப்பவர்கள்

 


நயமெனக் கருதி
நஞ்சினைத் தீண்டும்/
நாகரிக மாந்தரின்
நவீன மொழியோயிது/

நிதமும் தன்னை
ரசித்திடும் துடிப்பினுள்/
நீள்கின்றனர் பாதகத்துள்
காண்கின்றனர் புதுவுலகை/

அறிவியல் தேடலின்
அழகில்லாப் பண்பாடு/
அடுத்தவர் கவனமீர்த்தே
அலைகின்றதே நாகரிகமாக/

அனலுக்குள் தடமாகும்
ஆபத்தின் ரசிப்புக்களை/
அணைக்கின்றனர் அலைபேசிக்குள்
ஆசைகளை அரங்கேற்ற/

தடையில்லாச் சுதந்திரம்
தருகின்ற தைரியம்/
தரணிக்குள் பதிவேற்றும்
ஆனந்தச் சிலிர்ப்புக்கள்/

நிறைந்திடும் வாலிபம்
நீள்கின்றதே பாதகத்துள்/
நிழற்பட மாயைக்குள்
வீழ்கின்றனர் விட்டில்களாகி/

சுயமதைத் தொலைத்தே
சுற்றுமிந்த சுயமிகள்/
சுற்றிடும் பூமிக்குள்
சுற்றங்கள் மறந்தே/

பற்றுகின்றனர் ஆவலினால்
பொருந்தாக் காட்சிகளை/
தோற்றே போகின்றனர்
சூழ்ச்சியின் வேட்டைக்குள்/

ஜன்ஸி கபூர் - 02.11.2020

தனிமை

 


மனசேன் முரண்டு பிடிக்கிறது

தனிமையை....

பிறர் ப்ரியங்களை பிய்த்தெறிகிறது

நியாயங்கள் தோற்கும்போதெல்லாம்...

போரிட்ட சொற்கள் ..இப்போ

மெளனத்தில் உடைந்து கிடக்கின்றது...

யதார்த்த அழுக்குகளை

சுத்திகரிக்க பழகிக் கொண்ட வாழ்க்கையின் பக்குவம்....


ஜன்ஸி கபூர் - 14.04.2021