About Me

2021/04/14

துடுப்பில்லாத் தோணிகள்

 


 இலக்கது இல்லாது இயங்கிடும் வாழ்வினில்/

இரணமே துரத்துகின்றது இன்னலுக்குள் வீழ்த்தி/

உழைப்பைத் தேடி ஊருக்கு வெளியே/

உலாவுகையில் இழக்கின்றனர் உறவுகளின் அருகாமையை/


கல்வியைச் சுமக்கும் கரங்களில் சுமைகள்/

கசக்குவார் தொழிலாளிகளாக கருக்குவார் வருங்காலத்தை/

பெண்மையைக் கசக்கி பெருவலிக்குள் திணிக்கும்/

பொல்லாத மாந்தரால் பெருந்துயரில் மங்கையும்/


பெற்ற பட்டத்துக்குள் பொருந்தாத உழைப்பு/

பெற்றாலும் ஏற்கார் பொழுதுகளை வளமாக்கார்/

முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்தின் வளங்களே/

முயன்றிடாமல் புறந்தள்ளுவார் முகாமிடும் சந்தர்ப்பங்களை/


அடுத்தவர் தயவுக்காக அல்லலுடன் காத்திருந்து/

அலைக்கழிவார் வீணாக அடைந்திடுவார் சிறுமைதனை/

நிலையில்லா மனதோடு நிதமும் அலைந்தே/

நிற்கின்றனர் நிர்க்கதிக்குள் துடுப்பில்லாத் தோணிகளாக/


ஜன்ஸி கபூர்  - 13.11.2020

இராணி மங்கம்மாள்

 


அடுப்பூதும் பெண்ணென்றே அடக்கினார் பெண்மைதனை/

அடிமைத்தளை அறுத்தே அரசாண்டாள் மங்கம்மா/

ஆண்களின் கரந்தனில் ஆட்சியெனும் மரபுடைத்தே/

அணிந்தாள் மகுடமும் அலங்கரித்தாள் சிம்மாசனமும்/


கணவன் இறப்பில்  காணவேண்டும் உடன்கட்டை/ 

கட்டாய மரபினையும்  காரிகை யுடைத்தே/

காத்தாள் நாட்டை  கணவர் தடமொற்றி/


தாயின் அறிவுரைகளைத்  தங்கமகனும் ஏற்றே/

தரணியை ஆள்கையில்  தவித்தானே நோயினில்/

தன்னுயிரும் நீத்தே விண்ணேகையில் துணையவள்/

தானும் பறந்தாள் தன் துணையுடனே/


மதுரையும் ஆண்ட  மங்கையிவள் தினமும்/

மக்களும் செழித்திட மாண்போடு ஆண்டாளே/

மதிநுட்ப செயல்கள் மலைபோல் குவிந்திட/

மங்கள முரசினில்  மகிழ்வுற்றதே மாநகரும்/


பேரனும் முடிசூட்ட  போர் நுட்பங்களால்/

பேராட்சி புரிந்தே பெருவெற்றியும் கண்டாள்/

போரில்லாச் சூழலே  பேருவகை என்பதை/

பொருத்தியே மனதினில்  மதித்தாளே மதங்களை/


பாசனசாலைகள் கோயில்களென  பாரதத்தில் சிறந்திடவே/

பாதைதனைக் காட்டிய  பாவைதானே மங்கம்மா/

தர்மசாலைகளை அமைத்தே தானமும் புரிந்தாள்/

தந்திரோபாய யுத்திகளால் தன்படைக்கும் வழிகாட்டினாள்/


முகாலயர்களின் இன்னல்கண்டும் முகமது சுளிக்காதே/

முன்னின்று விரட்டினாள் நாயக்கர் படைதனை/

மதிநுட்பம் தந்திரங்களால் மன்னர்களை வென்றே/

மங்கம்மாவும் கண்டாள் மாண்பான வெற்றிகளையே/


வறட்சி போக்க  வடிவமைத்தாள் குளங்களை/

வளங்கள் பெருகவே  வரம்புகளும் உயர்ந்தனவே/

சத்திரங்களும் கல்விச்சாலைகளுமென சமுதாயப் பணியிலும்/

சளைத்திடா இராணியிவள் சமுகத்தின் ஏணிதானே/


இதயங்களில் உயர்ந்தே  இமயமாக மிளிர்ந்தவள்/

இரக்கமில்லாப் பேரனால்  இறக்கினாள் மணிமுடியை/

இறக்கையில் ஊமையாய் இவ்வுலகையும் நீத்தாள்/

இராணி மங்கம்மா  இராச்சியங்களின் சொப்பனம்தான்/


அறிவின் ஒளியாய் அழகின் சுடராய்/

ஆணுக்கு நிகராய் அவனிக்கும் தலைமையாய்/

அணிந்திட்ட பொறுமையால் அடையாளமுமானாள் நமக்கும்/ 


சரித்திர நாயகியின்  சாதனைகள் என்றும்/

சரியாதே நானிலத்தில் சப்தங்கள் ஓயாதே/

மங்காது வாழ்வாள் மக்கள் மனங்களில்/

மங்கம்மா என்றுமே மகத்தான இராணியவள்/


ஜன்ஸி கபூர் - 4.11.2020

வண்ணக் காதல்

 

 

 பசுமை நினைவுகளின் இதமான அணைப்பினில்

பரவுகின்றதே மகிழ்வும் தேகமும் சிலிர்த்திட

கொஞ்சும் விழிகளின் காதல் பார்வையில்

பஞ்சு மேனியும் நாணத்தில் சிவக்கிறதே 

 

தழுவுகின்ற சிறகினில் உரசுகின்ற தென்றலும் 

மஞ்சள் முகத்திலே முத்தங்களைப் பொறிக்கையில் 

வட்டக் கருவிழிதனில் மொய்த்திருக்கும் அன்பினைச்

சூடுகின்றதே கனவும் சூழுகின்றதே வனப்பும் 

 

இரகசியச் சந்திப்பில் இசைகின்ற உயிர்களில் 

இரேகைகளாகப் படிகின்றதே ஊடற் சுகமும் 

இதயம் குளிர்கின்றதே உதயத்தின் அலைவினில் 

இரசிக்கின்றேன் வண்ணங்களைத் தெளிக்கின்ற காதலையே 

 

ஜன்ஸி கபூர் - 30.09.20

 

அன்னப் பெடையே நாணமேனோ

 


பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்/

பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே/


கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்/

கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்/


கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்/

சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்/


சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்/

பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்/


விரலும் தீண்டா மென் காதலால்/

உரசினேன் உன்றன் உயிரினை அன்பே/


சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே/

ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ/


ஜன்ஸி கபூர் - 14.10.2020