About Me

2021/04/14

இராணி மங்கம்மாள்

 


அடுப்பூதும் பெண்ணென்றே அடக்கினார் பெண்மைதனை/

அடிமைத்தளை அறுத்தே அரசாண்டாள் மங்கம்மா/

ஆண்களின் கரந்தனில் ஆட்சியெனும் மரபுடைத்தே/

அணிந்தாள் மகுடமும் அலங்கரித்தாள் சிம்மாசனமும்/


கணவன் இறப்பில்  காணவேண்டும் உடன்கட்டை/ 

கட்டாய மரபினையும்  காரிகை யுடைத்தே/

காத்தாள் நாட்டை  கணவர் தடமொற்றி/


தாயின் அறிவுரைகளைத்  தங்கமகனும் ஏற்றே/

தரணியை ஆள்கையில்  தவித்தானே நோயினில்/

தன்னுயிரும் நீத்தே விண்ணேகையில் துணையவள்/

தானும் பறந்தாள் தன் துணையுடனே/


மதுரையும் ஆண்ட  மங்கையிவள் தினமும்/

மக்களும் செழித்திட மாண்போடு ஆண்டாளே/

மதிநுட்ப செயல்கள் மலைபோல் குவிந்திட/

மங்கள முரசினில்  மகிழ்வுற்றதே மாநகரும்/


பேரனும் முடிசூட்ட  போர் நுட்பங்களால்/

பேராட்சி புரிந்தே பெருவெற்றியும் கண்டாள்/

போரில்லாச் சூழலே  பேருவகை என்பதை/

பொருத்தியே மனதினில்  மதித்தாளே மதங்களை/


பாசனசாலைகள் கோயில்களென  பாரதத்தில் சிறந்திடவே/

பாதைதனைக் காட்டிய  பாவைதானே மங்கம்மா/

தர்மசாலைகளை அமைத்தே தானமும் புரிந்தாள்/

தந்திரோபாய யுத்திகளால் தன்படைக்கும் வழிகாட்டினாள்/


முகாலயர்களின் இன்னல்கண்டும் முகமது சுளிக்காதே/

முன்னின்று விரட்டினாள் நாயக்கர் படைதனை/

மதிநுட்பம் தந்திரங்களால் மன்னர்களை வென்றே/

மங்கம்மாவும் கண்டாள் மாண்பான வெற்றிகளையே/


வறட்சி போக்க  வடிவமைத்தாள் குளங்களை/

வளங்கள் பெருகவே  வரம்புகளும் உயர்ந்தனவே/

சத்திரங்களும் கல்விச்சாலைகளுமென சமுதாயப் பணியிலும்/

சளைத்திடா இராணியிவள் சமுகத்தின் ஏணிதானே/


இதயங்களில் உயர்ந்தே  இமயமாக மிளிர்ந்தவள்/

இரக்கமில்லாப் பேரனால்  இறக்கினாள் மணிமுடியை/

இறக்கையில் ஊமையாய் இவ்வுலகையும் நீத்தாள்/

இராணி மங்கம்மா  இராச்சியங்களின் சொப்பனம்தான்/


அறிவின் ஒளியாய் அழகின் சுடராய்/

ஆணுக்கு நிகராய் அவனிக்கும் தலைமையாய்/

அணிந்திட்ட பொறுமையால் அடையாளமுமானாள் நமக்கும்/ 


சரித்திர நாயகியின்  சாதனைகள் என்றும்/

சரியாதே நானிலத்தில் சப்தங்கள் ஓயாதே/

மங்காது வாழ்வாள் மக்கள் மனங்களில்/

மங்கம்மா என்றுமே மகத்தான இராணியவள்/


ஜன்ஸி கபூர் - 4.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!