About Me

2021/04/14

மேகங்களோடு

 

சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை
தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்
காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை
தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்
வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை
நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை
தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்
காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது
மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை

கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்
வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது
மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே
மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன

வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது
வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை
மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன
பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்

பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்
தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை
ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் இசைவாக்கம்
நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்
அவை கடந்து செல்கையில் இணைகின்றன
உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்
கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்

மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்
கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்
கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்
ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்

பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது
இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை
அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற
ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

விண்ணை நோக்கியதாக வீழ்கிறது என்பார்வை  
மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்

ஜன்ஸி கபூர் - 6.11.2020
--------------------------------------------------------------- 
 Kesavadhas
--------------------------------------------------------------- 
ஜன்ஸி கபூர் சிறகுகளை உதிர்த்தவாறே
நகரும் மேகங்கள்
விரல்களால் வருடும் வானம்
காற்றின் முடிச்சுகளால் சிறைப்பட்டிருந்த மேகம் தன் இதழ்களால் அவிழ்க்கிறதாம் வானம்
வான்துளைகளுக்குள் தன்முத்தங்களால் நிரப்புகிறதான் மேகம்
பயணிக்கும் மேகங்களை வானும் தன்னிதழ்களால் ஈரப்படுத்துகிறது வானம்!
இஃது வானமும் மேகமும் கொண்ட காதலின்பம்!

இதுதான் நவீன கவிதை!

இயல்பான நிகழ்வுகளின் மீது இயல்பான கற்பனை உணர்வுகள்!
தோற்ற மெய்ப்பாடுகள்!
கீற்றுமின்னல் முழக்கும் இசை மங்களகரமாக ஒலிக்கிறது
நாணி மேகங்கள் தம்மை கருங்கூந்தலுக்குள் ஒளித்து மொய்க்கும் நாணத்துடன் நனைந்து அலைகின்றன!

பூமிக்கும் வானுக்குமிடையிலான அந்தரிக்ஷத்தில் தொங்கிக் கொண்டிருப்பினும் விழுவதில்லை மேகம்!
ஈர்ப்பின் காந்தமது!

மேகங்களுக்காக பொழிவிற்காக ஏங்கும் உயிர்களை சலனமற்ற குளங்களை நிலத்தின் வரை கோடுகளை கடந்து செல்கையில் இந்தவரிகளில் மேகங்களின் மீதான ஜீவன்களின் காதலை உணர முடிகிறது!

இது ஒரு வித்தியாசமான அனுபவ விவரிக்கை!

கவலையுடன் எட்டிப் பார்க்கும் மேகங்கள்!
கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்!
ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்!
மனிதர் விலங்குகள் பறவைகளுக்கு தொண்டையிலிருந்து கூக்குரல் எழும்பும்!
இங்கே கருகிய வயல்களும் வறண்ட குளங்களும் தேகங்களின் முழுமையால் கூக்குரலிடுகின்றன!
இயல்பு நவிற்சி உயர்வு நவிற்சி யாகி வித்தியாசமாக மிகவும் அற்புதமாக ஒலிக்கிறது!
நல்லதொரு கவிமழையில் நனைந்தெழுந்தேன்!
வாழ்த்துகள் கவிஞரே!

 

வாசிக்க வழிதேடு

 

வறுமைச் சுழியில்  வாழ்கின்ற மானிடர்க்கும்/
விழிக்கனாக்களின் ஏக்கமாக  வீழ்கின்றதே பெருஞ்செல்வம்/
துரத்தும் துன்பங்கள் நம்மை வருத்திடும்போது/
தரிக்கின்ற  பெருநிழலாய் நமக்கிங்கே கல்விக்கரை/
                                                                        
வாழ்வியலின் பண்பாடு வாசிப்பின் மேம்பாடு/
வாழ்கின்ற வாழ்வினில் வழிகாட்டுமே நூலறிவு/
வாட்டிடும் அறியாமையை விரட்டிடும் உலகறிவும்/
வனப்பாகும் நம்மாற்றல் வாசிப்போம் பூரணமடைய/

யாசித்து வாழ்ந்தாலும் போற்றுகின்ற வாசிப்பால்/
நேசிக்குமே நல்லுலகும் நெருங்கிடும் வல்லமையும்/

உதரப் பசி உறுத்தும் போதிலும்/
உணர்வின் தாகமும் தீர்க்குமே நற்புத்தகங்கள்/
குப்பிவிளக்கின் ஒளிர்வுக்குள் குடியிருந்த மேதைகள்/
குவலயத்தின் வரலாறும் மறந்திடாச் செல்வங்கள்/

அறிவுத் தாகமெடுத்தால் அடங்கிடுமோ தேடற்பசியும்/
அண்டத்தைப் பிளக்கும் விஞ்ஞானமும் விருப்பாகும்/
எண்ணத்தின் வார்ப்பினை எழுதிடும் விரல்களும்/
ஏற்றிடும் கற்பனைகள் எழிலாகும் காவியங்களாய்/
                                                                              
பெற்றிடும் அறிவு போக்கிடும் துயரை/
போற்றிடும் அகிலம் ஏற்றிடுவோம் நலன்களை/
தற்றுணிவும் தன்னம்பிக்கையும் தன்னையாள வலுவாகும்/
தன்னிகரில்லாச் செல்வமும் தடமாகும் தரிசனத்தில்/

எதிர்காலம் சிறந்திட எமக்கான அடையாளம்/
எக்காலமும் நம்மைத் தொடர்கின்ற கல்வியே/

ஜன்ஸி கபூர் - 02.11.2020

உயிரின் ஒலியா


 

நுதலும் இதழும் அழகாகப் பிணைந்தே

நுகர்கின்றதே விழிகளும் காதலைச் சுகமாக

இதய மகிழ்வில் இசையும் அன்பும்

இறக்கை விரிக்கும் உயிரினை வருடி


அணைப்பில் தழுவும்ஆனந்தச் சிலிர்ப்பு

அடங்குமோ காற்றும் விலக்கா நெருக்கமிது

உயிரின் ஒலியினில் உணர்வின் துடிப்புக்கள்

உவகை மனங்களின் உல்லாசத் தூறல்கள்


சங்கமிக்கும் ஆசைகள்வரைந்திடும் கோலங்கள்

சந்திக்கத் துடிக்கின்றனவோ மங்கல மேடைதனில்


ஜன்ஸி கபூர் - 01.11.2020


காதலெனும் நதியினிலே

 

காதலெனும் நதியினிலே 
காத்திருந்தேன் தவிப்புடனே/
காலமெல்லாம் களித்திருக்க 
கனிந்திருக்கே அன்புதானே/

பருவத்தின் துடிப்பினிலே 
படருதே ஆசைகளே/
இருவரும் படகுகளாய் 
இனிமைக்குள் உலாவவே/

வெண்பனியாய் மூடுகின்ற
உன்றன் தழுவலுக்குள்/
வெட்கம் விரித்தே 
சாய்கிறேன் மெதுவாக/

கனவுக்குள்ளும் மிதக்கிறே 
நினைவாகிப்  பூக்கிறே/
நனவுக்குள்ளும் சிரிக்கிறே 
நிழல்கூட நடக்கிறே/

இல்லறக் கரையினில் 
இன்பமாக ஒதுங்குகையில்/
இழுக்கிறே வம்புக்குள்ளே 
இதயமதைக் கொஞ்சித்தானே/

உணர்வுகள் ஊஞ்சலாட 
உயிரும் வருட /
உள்ளத்தின் அசைவுக்குள்ளே 
உறவாகி வாழுறே/

ஜன்ஸி கபூர் - 15.11.2020