About Me

2021/04/14

வாசிக்க வழிதேடு

 

வறுமைச் சுழியில்  வாழ்கின்ற மானிடர்க்கும்/
விழிக்கனாக்களின் ஏக்கமாக  வீழ்கின்றதே பெருஞ்செல்வம்/
துரத்தும் துன்பங்கள் நம்மை வருத்திடும்போது/
தரிக்கின்ற  பெருநிழலாய் நமக்கிங்கே கல்விக்கரை/
                                                                        
வாழ்வியலின் பண்பாடு வாசிப்பின் மேம்பாடு/
வாழ்கின்ற வாழ்வினில் வழிகாட்டுமே நூலறிவு/
வாட்டிடும் அறியாமையை விரட்டிடும் உலகறிவும்/
வனப்பாகும் நம்மாற்றல் வாசிப்போம் பூரணமடைய/

யாசித்து வாழ்ந்தாலும் போற்றுகின்ற வாசிப்பால்/
நேசிக்குமே நல்லுலகும் நெருங்கிடும் வல்லமையும்/

உதரப் பசி உறுத்தும் போதிலும்/
உணர்வின் தாகமும் தீர்க்குமே நற்புத்தகங்கள்/
குப்பிவிளக்கின் ஒளிர்வுக்குள் குடியிருந்த மேதைகள்/
குவலயத்தின் வரலாறும் மறந்திடாச் செல்வங்கள்/

அறிவுத் தாகமெடுத்தால் அடங்கிடுமோ தேடற்பசியும்/
அண்டத்தைப் பிளக்கும் விஞ்ஞானமும் விருப்பாகும்/
எண்ணத்தின் வார்ப்பினை எழுதிடும் விரல்களும்/
ஏற்றிடும் கற்பனைகள் எழிலாகும் காவியங்களாய்/
                                                                              
பெற்றிடும் அறிவு போக்கிடும் துயரை/
போற்றிடும் அகிலம் ஏற்றிடுவோம் நலன்களை/
தற்றுணிவும் தன்னம்பிக்கையும் தன்னையாள வலுவாகும்/
தன்னிகரில்லாச் செல்வமும் தடமாகும் தரிசனத்தில்/

எதிர்காலம் சிறந்திட எமக்கான அடையாளம்/
எக்காலமும் நம்மைத் தொடர்கின்ற கல்வியே/

ஜன்ஸி கபூர் - 02.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!