About Me

2021/04/21

இன்பத்தமிழ்

மொழிகளின் தாயென 
     மொழிந்தனரே ஆன்றோரும்/
வழியெங்கும் படர்ந்ததே 
     நறுஞ்சுவைக் காப்பியங்கள்/

தொன்மைக்கே மகுடமாம் 
     தமிழினை நானும்/
தொட்டேன் நாவினில் 
     தொப்புள்க்கொடி உறவினாலே/

மென்மையும் வன்மையும் 
      ஒத்திசையும் சந்தங்களாய்/
மெருகேறுகின்றன வார்த்தைகளும் 
     அமிர்தத்தில் நனைந்தபடி/

இலக்கணமும் இலக்கியமும் 
     இதயத்துடிப்பினில் இணைந்தே/
இன்பத்தோடு பரப்புகின்றதே 
     இளைய தலைமுறைகளுக்கே/

நல்லெழுத்துக்களால் நவின்றிடும் 
     எண்ணங்களின் உயிர்ப்பினால்/
நவீனமும் வியக்கின்றதே 
     சொற்சுவையின் தித்திப்பில்/

சங்கத்தால் வளர்ந்தே 
     சரித்திரமாக நீண்டு/
அங்கத்தின் அடையாளமுமாகி 
     அகத்தினை அணைக்கின்றதே/

ஜன்ஸி கபூர் 


வண்ணக்குடை

 


வண்ணக்குடை/

பல நிறங்களில் விரிகின்றது/
வாசிக்கும் ஆற்றல்/

ஜன்ஸி கபூர்


கடிகாரம் உணர்த்தும் பாடம்

 

தேடல்மிகு வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும்/
தேடிக் கலக்கிறதே கடிகார முட்கள்/
நாடிப் பற்றிடுவோம் அதன் பண்புகளை/
ஓடிவிடுமே துயரும் செழித்திடுமே வாழ்வும்/

முன்னோக்கிச் செல்லுகின்ற முட்களைப் போல்/
முன்னேற்றம் கண்டே மகிழ்ந்திடலாம் செயல்களில்/
குறித்த ஒழுக்கினில் சுற்றும் கடிகாரம்போல்/ 
பற்றிடுவோம் நாமும் கலாசார விழுமியங்களை/

மின்கலம் இன்றியே இயங்கிடுமோ இதுவும்/
வேண்டுமே நமக்கும் ஊக்கத்துடனான உழைப்பும்/
தாமதிக்கும் நிமிடங்கள் நழுவுமே வெற்றிகள்/
தரணியின் உயிர்ப்புக்கும் இதுவோர் அடையாளமே/

 ஜன்ஸி கபூர் - 23.10.2020
 

பொன்னாடு

 


பண்பாட்டின் விழுதுகள் பற்றிடும் நாட்டினில்

எண்ணத்தின்  கலைகளும் இசைந்திடும் வனப்போடு

பண்ணும் பரதமும் அசைத்திடும் மண்ணை

விண்ணும் போற்றிடும் உழவுக்கும் உயிர்கொடுத்தே


ஆய கலைகளும் அரங்கேறிடும் மடிதனில்

தேயாத ஈகையில் விருந்தோம்பலும் உயிர்த்திடுமே

ஓயாத கரகோஷத்தில் சல்லிக்கட்டின் வீரமும்

வாயாரப் புகழுமே பாரம்பரியக் கலைகளும்


ஏட்டறிவின் ஆற்றலும்  வளமாக்குமே வளங்களை 

நட்ட பயிரெல்லாம் சிரித்திடுமே உழவுக்குள் 

வள்ளுவன் குரலாய் ஒலித்திடும் தேனாட்டில்

உள்ளத்தின் உயர்வால் பண்பாடும் வாழ்ந்திடுமே


ஜன்ஸி கபூர்