About Me

2021/04/21

சுமைதாங்கி

 


சுட்டெரிக்கும் வெயில் சுற்றும் மேலாடையாக/
சுடும் தரைக்கு நிழலே செருப்பாக/
சுறுசுறுப்பே மூலதனமாம் முதுகேற்றும் சுமைக்கே/
சுகம் மறந்த சுமைதாங்கி இவளே/
சுமக்கின்றாள் உறவுகளை சுற்றமும் போற்றிட/

உள்ளத்தின் வலிமை உழைக்கும் முயற்சியும்/
உதறிடாத தன்னம்பிக்கை உணர்ந்த வாழ்க்கை/
உயர்த்துமே உன்னையும் ஊக்கமும் வெல்லுமே/
வறுமை  சுமக்கும் வலியும் பறந்தோட/
வருமே உனக்குமோர் வசந்தமான எதிர்காலம்/ 


ஜன்ஸி கபூர் 

வீர மங்கை

அடுக்களை விதியென்று ஆக்கிய மானிடர்/
அதிசயத்து விழிபிதுங்க அரசாளும் பெண்ணிவள்/
காற்றும் அதிர்ந்திடும் காரிகை வீரத்திலே/
தூற்றும் பகைதனை துணிவோடு வேரறுக்க/

பறக்கின்றாள் புரவியினில் பாவையும் முழக்கத்தோடு/
சிறக்கின்றாள் புவியினில் சிரிக்கின்றாள் தாய்மையுடன்/
கையேந்தும் வாளினில் கைதியாவர் பாவிகளே/
கைப்பற்றும் ஆணவத்தில் கரைந்திடுவார் கலக்கத்துடனே/

வலிமையோடு வலியகற்றும் வல்லமைமிகு பெண்ணாய்/
வம்சம் துளிர்த்திட வழிதனைப் படைப்பாளே/

ஜன்ஸி கபூர்  

நாடோடி வாழ்க்கை

பிறப்பும் இறப்பும் வெட்ட வெளிதனில்/
சனநடமாட்டத் தளங்களே வாழ்க்கைக் கூடங்களாக/
எல்லையின்றிப் பறக்கின்ற சுதந்திரப் பறவைகள்/
நாகரிகம் தொலைத்த பழங்குடிகளே இவர்கள்/

இயற்கைக்குள் இசைந்த வாழ்க்கைப் பயணத்தில்/
இணைக்கிறதே வாழ்வியலும் போராட்டங்களைத் தினமும்/
எளிமையான வாழ்வுதனை எழுதுகின்ற விதியால்/
ஏக்கங்களைச் சுமக்கின்றனர் கனவுகளை உதிர்த்தபடியே/

நானிலத்தின் விரிகோடுகள் இணைக்கின்ற பயணத்திலே/
நாற்புறமும் சொந்தங்கள் உதிர்கின்றனவே வாழ்வியலில்/
கருவோர உயிர்ப்பும் தெருவோரம் உதிப்பதனால்/
வருத்துகின்றதே எதிர்காலமும் சிதைக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/

திசையறியாத இறக்கைதனைப் பற்றிடும் நகர்வில்/
வசையும் இசைக்காதே சொத்தில்லா வாழ்க்கைக்கே/
அன்பினைப் பற்றிடும் மானுடச் சிற்பங்களாக/
அகிலத்தில் விதைக்கப்படுகின்றனர் தனிமைதனை இரசித்தபடி/













குடைகளாகும் மரங்கள்தானே  கூடுகளாகிக் காக்குதே/
விடையில்லாத போராட்டங்களே முகவரியாகும் வாழ்க்கையிலே/
கொட்டும் மழைதனில் கரைந்திடாத் தேகமே/
தொட்டுக் கொள்ளுதே கொளுத்தும் வெயிலையும்/

எல்லையும் பிரித்திடாத் தேசத்தில்தானே தினமும்/
எழிலோடு பூக்கின்றோம் பழங்குடி நாமென்றே/
உதிரும் ஏக்கமெல்லாம் பூக்கின்றதே கனவென/
உவகையின்றியே பயணிக்கின்றோம் அவலத்தினை யேந்தியே/

நானிலப் பயணத்திலே தன்மானம் காத்தே/
நற்குடியாகிப் பரவுகின்றோம் சொந்தங்களும் இன்றியே/
தெருவோர வாழ்க்கையும் தொல்லைதானே எமக்கே/
வருந்தினாலும் சிறக்கின்றோமே எதிர்பார்ப்புக்களையும் சுமந்தே/ 

திசையறியாமலே பறந்தே தானே உயிர்க்கின்றோம்/
திரும்பும் இடமெல்லாம் அணைக்குதே இயற்கையும்/
அன்பினை நேசித்தே ஆளுகின்றோம் இதயத்தையே/
அகிலத்திலே விளைகின்றோம் நாடோடி மக்களாகி/

ஜன்ஸி கபூர்
 

வரமென வந்த தேவதைகள்

 

அன்பைக் குலைத்து உயிரில் படர்ந்து/
இன்பத்தின் இதமாக உயிர்த்த மழலையே/
தாய்மைக்குள் உனை இழைத்தே மகிழ்ந்தேன்/
துளிர்த்தாய் நீயென் நிழலுக்குள் அழகாய்/

தவழ்ந்தாய் மடி தந்ததோ மலர்கள்/
தாங்கியதோ தென்றலும் செல்ல நடையினில்/
தங்க விரல்கள் வரைந்திடும் கோலங்கள்/
அங்கத்தில் பதிக்கின்ற அற்புத முத்திரைகள்/
 
யாழும் உன்றன் மொழிக்குள் இசைந்ததோ/
பஞ்சு மேனியும் நிலவுக்குள் ஒளிந்ததோ/
நெஞ்சத் தூளியிலே ஆடிடும் சொர்க்கமே/
கொஞ்சிடும் அன்பினில் சுவைத்தேனே ஆனந்தம்/

உணர்வுக்குள் பூத்திடும் பூ மழையே/
உணர்கின்றேன் உனையே எந்தன் தாய்மைக்குள்/
ஊரார் மலடியெனத் தூற்றாமல் எனக்குள்/
வேரோடினாய் எனைத் தாங்கிடும் விழுதென/

இல்லறச் சோலைக்குள் ஏந்தினேன் பாசத்தில்/
இதயமும் சிரிக்குதே உறவின் பிணைப்பிலே/
வாழ்வின் வரமென வந்த தேவதைகள்/
வம்சத்தின் பெருமைதனை காத்திடும் செல்வங்கள்/

ஜன்ஸி கபூர்