About Me

2021/04/29

தன்மானம்

 


தன்மானத்தையும் சுரண்டுகின்ற மிகப் பெரிய ஆயுதம் வறுமையே. தன்மானம் இழந்து அடுத்தவரின் புறக்கணிப்பிற்கும் ஆளாகின்ற ஒவ்வொருத்தரின் சோகத்தின் வலி கண்களின் வழியாகிச் செல்கையில் அதனை தனது மொழியாகி உணருமோ உணர்வுகள்.  

நாவிலே பொய்யும் புரட்டும் இயல்பாகவே சரளமாகின்றபோது மெய்யும் மெய்க்குள் மௌனமாக அடங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 29.04.2021


கள்ளிச் செடி

முட்கள் கூட என் கிரீடங்களே

இருந்தும் சாம்ராஜ்யம் மறுக்கப்பட்டிருக்கின்றது எனக்கு

வனப்புக்களால் வசீகரமாகின்றவர்கள் தருகின்ற வலி

தினமும் என் மொழியாகிப் போகின்றது


வீழ்கின்ற ஒவ்வொரு நீர்த் துளிகளுக்குமாக

விரிகின்ற முட்களுக்குள்தானே என் உலகு

விரும்பிப் பார்க்காதோரை திரும்பிப் பார்க்க

விரல் பற்றுகின்றேன் அவாவின் உச்சத்தில்

முட்களின் பாஷைக்கு அவர்கள் செங்குருதிதானே 

நலம் விசாரித்து தொட்டுப் பார்க்கின்றது.  


பாலைவனங்களும் மயானங்களும் என் முகவரியானதில்

வலை விரிக்காத ஏமாற்று உலகு

தொலைபுள்ளியாகி தள்ளியே நிற்கின்றது தினமும்

வறட்சிக்குள்ளும் பசுமையைக் காக்கின்ற என்னை

யாருமே திரும்பிப் பார்ப்பதாக இல்லை. 


முட்களாக திரிபடைந்த மென் மலர்களுக்காக

பட்டுடல் விரிக்காத வண்ணாத்திகளை சபிக்கவில்லை

புறக் கவர்ச்சி தேடும் உலகில்

தோற்றுப் போகின்றது என் மென்மை


இருந்தும் என்  தேடல் நீள்கின்றது  

தூசிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்ற மலர்களின்

மகிமையை பறை சாட்டுமோ பறவைகள்

வெந்தணலைச் சுவைக்காத கவிஞர்களின் கருக்கள்

பூஞ்சோலைகளைத்தானே  எட்டிப் பார்க்கின்றன மோகத்துடன்


இருந்தும் என்னை தினமும் மதிக்காத

ஓட்டகங்களும் வணிகர்களும் கடந்து செல்கையில்

கடும் வெப்பமும் சிதைக்காத அழகு

என்னிடம் இருப்பதாக பெருமிதம் கொள்கின்றேன்  


வறண்ட தேசங்களின் வைரம் நானே

வளர்கின்றேன் பசுமையை உயிர்க்கும் தருவாக


ஜன்ஸி கபூர் - 29.04.2021


கார்கால வானம்

வறண்ட பூமி வரைந்த பிளவுகள்

வறுமைக்  கீறலாய் வாழ்வைச் சிதைக்கையில்

கார்கால வானம் களித்ததே மழையாகி

வயலின் பசுமை வனப்பாகி பூக்கையில் 

இதயமும் மகிழ்ந்ததே இயற்கையின் அழகில்


ஜன்ஸி கபூர் - 29.04.2021

புதிய விடியல்

அடி வானின் 

            அழகின் உதயம் 

படிகின்றது மனதில் 

              பரவசப் பேரொளியாக 


விடிகின்ற பொழுது 

            விரிக்கின்ற நம்பிக்கைகள் 

மடி தவழ்கின்றன 

           மகிழ்வையும் ஏந்தியபடி 


இரவு கரைந்து 

           இரக்கத்தின் ஊற்றாகி 

வற்றிய வாழ்வும் 

          வசந்தமாகப் பூக்கட்டும் 


தொற்றின் தொல்லை 

          தொலைவில் கலைந்தே 

பற்றாகட்டும் ஆரோக்கியம் 

           பரவசம் நமதாக 


வியர்வையின் விளைச்சலால் 

           விமோசனம் வரலாறாக 

துயரின் நிழலுக்குள் 

           துளிர்க்கட்டும் மகிழ்வும் 


பகைமைகள் மறந்த 

         பண்பான உறவுகளின் 

புன்னகை தேசத்தில் 

         புலரட்டும் விடியல் 


ஜன்ஸி கபூர் - 29.04.2021