அடி வானின்
அழகின் உதயம்
படிகின்றது மனதில்
பரவசப் பேரொளியாக
விடிகின்ற பொழுது
விரிக்கின்ற நம்பிக்கைகள்
மடி தவழ்கின்றன
மகிழ்வையும் ஏந்தியபடி
இரவு கரைந்து
இரக்கத்தின் ஊற்றாகி
வற்றிய வாழ்வும்
வசந்தமாகப் பூக்கட்டும்
தொற்றின் தொல்லை
தொலைவில் கலைந்தே
பற்றாகட்டும் ஆரோக்கியம்
பரவசம் நமதாக
வியர்வையின் விளைச்சலால்
விமோசனம் வரலாறாக
துயரின் நிழலுக்குள்
துளிர்க்கட்டும் மகிழ்வும்
பகைமைகள் மறந்த
பண்பான உறவுகளின்
புன்னகை தேசத்தில்
புலரட்டும் விடியல்
ஜன்ஸி கபூர் - 29.04.2021


No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!