About Me

2019/05/22

மே 18

மே 18
............
Image result for முள்ளிவாய்க்கால்

காலெண்டர் கதறலில் மண்
சிவந்துதான் போனது அது
கண்ணீர் ஈரலிப்பில் கரைந்துதான்
போனது !

முள்ளிவாய்க்கால்
முட்கள் தேசத்தின் படிக்கட்கள் !
குருதி விரல்களால்
வருந்தி எழுதப்பட்ட சரித்திரம் !

உயிர் பூக்களின் குரல் வளைகளில்
மூச்சு பிடுங்கப்பட்ட நாள்!
 கண்ணீர் கசிவில்
மனித அவலங்கள் நசிந்த நாள்!

குண்டுகள் பிளந்த தேகங்கள்
பிண செண்டுகளாய் விழித்தன
தோட்டாக்களும் பீரங்கிகளும்
உரக்க வாசித்தன மரணங்களை!

 கிழிந்து போன தேகங்களும்
ஊனங்களும்  இன்னும்
விழித்திரையில் மங்கா விம்பங்களாய்
பயணிக்கின்றன பத்து வருடம் தொட்டு !

உடமைகளும் உறவுகளும்
தொலைவாகி போனதில்........
 துயரங்களின் சாம்ராச்சியத்தில்
மனம் அமிழ்ந்து போனது!

 யுத்த தராசில்
பாவங்கள் எடை கூடின!
உடைந்த கனவுகளில்
அழுகை முகம் திறந்து பார்த்தது!

 வெள்ளை கொடிகளில்
உள்ளம் சிதைந்த குருதி கறைகள்!
 தீப்பிழம்பின் ஓசையில்
வாழிடம் கருகிப் போனது!

 இழந்த வலி நீள்கையில்
எல்லையில் உணர்விழந்த உயிர்கள் !
இன்றுவரை தேடலில் தான்
காணாமல் போனவர்களாய் !

- Jancy Caffoor -
 

2019/05/21

மாம்பழம்

Image result for mango sri lanka


விடுமுறை பொழுதொன்றின் காலை விடியலுடன் பொழுதும் குளிர்மையுடன் கலந்து கொண்டிருந்த நேரம் அது. தங்கை மகளை மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக முச்சக்கர வண்டியில் நானும் அம்மாவும் சென்று கொண்டிருந்தோம். காற்றின் சுகத்தில் லயித்தவாறு பார்வையை வெளி காட்சிகளில் வீசிக்கொண்டு வந்தேன்.  பார்வைப் புலத்தில்  குவியலாக வீழ்ந்த மாம்பழம் சிந்தையை வசீகரித்தது.

இப்போது மாம்பழ சீசன்தான். வீதி ஒரங்களில் குவியலாக ஆங்காங்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் கூட,  இந்த குண்டு மாம்பழங்களின்  நிறமும் அழகும் வாயூறவைத்தது, 

"நல்ல மாம்பழங்கள்"

மெதுவாக அம்மாவும் நானும்  சொல்லிக்கொண்டோம். எப்படியாவது அதனை வாங்கி செல்ல வேண்டும் எனும் தீர்மானம் நெஞ்சில் ஆணி அறைந்தது. பிள்ளையை வகுப்பில் விட்டு விட்டு வீடு திரும்பும் போது வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கையில் காசு கொண்டு வரவில்லையே! உண்மை பொறி தட்டியது. ஆட்டோகாரர் நன்கு அறிந்தவர். குடும்ப பழக்கம். மெதுவாக அவரிடம் சொன்னேன்.

"காக்கா மாம்பழம் வாங்க வேணும். வீட்டை வந்ததும் தாரேன் பணம் இருக்குமா?"

புன்னகைத்தார். தன் பணப்பையை திறந்து நான் கேட்ட  500 ரூபாய் பணத்தை எண்ணி தந்தார். வாங்கி கொண்டேன். வாகனம் சிறு கதியோடு ஓடி அந்த மாம்பழம் விற்கும் ஆச்சியின் கடை அருகில் நின்றது. இறங்கி மாம்பழத்தை கையில் எடுத்தேன். குண்டு குண்டான கறுத்த  கொழும்பான். விலை கேட்டேன். சொன்னார்.
"குறையுங்கோ ஆச்சி" என்றேன். 5.00 ரூபாய் குறைத்தார். என் அம்மாவோ "இன்னும் குறையுங்கோ" என்ற போது அந்த ஆச்சிக்கு  கோபம் வந்தது. இதை விட குறைக்க முடியாது. சினத்தார்.

"அம்மா பாவம் விடுங்கோ காலை கைவிசேடம் நாம்தான் போல்"

அம்மாவை மௌனியாக்கி  விட்டு, மாம்பழங்களை என் கையில் உள்ள பணத்திற்கேற்ப தெரிவு செய்தேன். பணம் கை மாறியது. மிகுதி பத்து ரூபாய்!நானோ பெருந்தன்மையுடன் வேண்டாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றேன். அந்த ஆச்சியோ  சிறிது யோசனையின் பின்னர்

"வேண்டாம் பிள்ளை பத்து ரூபாய்க்கு ஒரு மாம்பழம் தரேன்"

 என்று அருகில் உள்ள பெட்டி திறந்து வில்லாட் மாம்பழம் தந்தார்.
Mango
சிறு தொகை பணமாயினும் அதன் பெறுமதியை மதித்த அந்த மாம்பழம் விற்ற ஆச்சி என் மனதில் உயர்ந்துதான் போனார்.

"சுரண்டல்" எனும் பெயரில் பணம் படைத்தவர்கள் பணத்தை ஏப்பம் விடும் போது அந்த ஏழை ஆச்சியின்  நேர்மையாக பணம் உழைக்கும் நினைப்பு என்னை கவர்ந்தது.

"ஆச்சி நாளைக்கும் வாரேன் "என்றவாறு மன நிறைவோடு ஆட்டோவில் ஏறினேன்.


-Jancy Caffoor-

2019/05/20

திருமணம்



Image result for திருமணம் பற்றிய ஹதீஸ்

ஓர் ஆணும், பெண்ணும் மனம் பொருந்தி வாழ்வதற்காக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான ஒப்பந்தமே திருமணமாகும். சமயங்கள் போதிக்கும் இந்த ஒழுக்க வாழ்வியல் மிகச் சிறந்த வரம். சமூக அங்கீகாரம் பெற்ற, வம்சம் வளர்க்கும் இந்த விழுமியம் காக்கும் ஒப்பந்தத்தில் ஆணும், பெண்ணும் மானசீகமாக இணைக்கப்படும் போதே இல்லறம் நல்லறமாக போற்றப்படுகிறது. முன், பின் அறியாத அல்லது அறிந்த இரு உறவுகள் தமக்காக, தமக்குள்  ஏற்படுத்திக்கொள்ளும் இந்த இல்லற அறத்தையே சமூகம் அங்கீகரிக்கிறது. உறவினால் இருவர் இணைந்து குடும்பமாகி பிள்ளைகள் எனும் விழுதுகளையும் அமைத்து வாழும் போது அந்த வாழ்க்கை பல்வேறு எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் ஆசை, கனவுகளையும் அரவணைத்து செல்கிறது. குடும்பம் எனும் கோபுரம் அமைக்கப்படும் போது பிள்ளைகள் தூண்களாகி, பெற்றோர்களை தாங்கி நிற்பது நல்ல குடும்பத்தின் லட்சணமாகிறது.

கணவன், மனைவி என்போர் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து அன்புடன் வாழும் அந்த வாழ்க்கையின் அழகில் எதிர்காலம் ஒளிமயமாகிறது. சிறந்த குடும்பத்தின் ஒவ்வொரு நகர்வும் ஆனந்தத்தின் தித்திப்போடு செல்லும் என்பதில் ஐயமில்லை.  பொறுமையும், அமைதியும், எதையும் தாங்கும்  மனமும் கிடைக்கப் பெறும் மணம் கால ஓட்டத்திலும் தேயாத நறுமணம்தான்.


தம்பதியர் தமது சுயநலம் களைந்து, ஈருடல், ஓருயிராக தம்மை மாற்றி வாழாதபோது அக்குடும்பத்தின் நம்பிக்கையும் சிதைவடைந்து விடுகிறது. ஆசை, கனவுகளுடன் தன்  எதிர்காலத்தை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ ஒப்படைத்து வாழும் துணைக்கு, தான் நம்பி இருப்போர் விசுவாசமாக இல்லாத போது, நம்பிக்கைத் துரோகியாக  மாறும் போது வாழ்வின் பெறுமதி கேள்விக்குறியாகி விடுகிறது. வாழ்க்கை பொய்க்கும் போது எதிர்காலமே இருண்டு விடுகிறது.  ஒருவரோடு ஒருவர் பொருந்தி பல்லாண்டு  காலம் வாழ்வோம் என்று உறுதி பூண்டு இடையில் முரண்பாடுகளால் குடும்பத்தை, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைக்கும் ஆணோ, பெண்ணோ உணர்வுகளை சிதைக்கும் மிருகமே!   
Related image
தம்மைச் சார்ந்திருப்போர் நலன் பேணாத யாருமே மனித நேயத்தை தொலைத்தவர்களே! பண்புகள் அற்றோரிடம் பணம் இருந்தாலும் கூட,  அவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்களே! உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தனது தவறுகளை குறைத்துக் கொள்ளவும், தனது வாரிசுகளை இப்பூமியில் நிலை நிறுத்தவும் இறைவன் செய்த ஏற்பாடான இந்த திருமணத்தின் அர்த்தம் உணர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல சமூகத்தின் தோற்றுவாய்களாக தம்மை உருவேற்றிக் கொள்கின்றார்கள்.

திருமணம் ஓர் பண்பாட்டின் வெளிப்பாடு ஒவ்வொரு சமயத்தினரது திருமண முறைகள் வேறுபட்டாலும் கூட, ஆண், பெண் எனும் இறை படைப்பின் உருவங்களோ, குருதி நிறமோ, உணர்வுகளோ வேறுபடுவதில்லை.  மரணம் வாழ்வின் எல்லையைக்  குறுக்கி விட்டாலும் கூட, நாம் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு இந்த சமூக கண்ணாடியில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். வாழ்தலும் ஒரு கலையே!  இல்லறப் பள்ளியில் இணைந்த அனைவரும் தமது குறைபாடுகள் களைந்து முரண்பாடுகளின் வேரறுத்து நறுமணம் வீசும் மலர்களாக தம்மை மாற்றி கொள்ள வேண்டும்.

வாழுங்கள் சிறப்பாக!

உங்களால் ஒரு சமூகம் உயிர்ப்போடு பின்னால் வரும் உங்கள் வாழ்வின் மெய்யியலைக் கற்றுக்கொள்ள!!

திருமணம் வெறும் சடங்கல்ல................................. வாழ்வியல்! 
Related image

-Jancy Caffoor- 20.05.2019

2019/05/19

நம்பிக்கை துரோகம்

இளமை பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றிய நம்பிக்கைகள் கனவுகள் தொடர்ச்சியாக உலாவரும். நமக்கு பொருத்தமான தடம் நம் காலடி சேரும் வரை நமது தேடலும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவ்வாறான தேடலுடன் எனது இளமை வெளியில் உலா வந்த காலம் அது.
.
இழந்த பின்னர்தானே அதன் அருமை புரிகிறது. 1990 ஒக்டோபரில் யுத்தம் எங்கள் வீட்டை விழுங்கிய போது வீடு எனது கனவாக இருந்தது. எல்லோரும் இருப்பதற்கு வீடொன்று இருக்கும் போது நாமோ இருப்பிடம் தொலைத்த அகதிகளாக இரண்டு தசாப்தம் அலைந்த காலம் அது!
.
 சொந்த வீட்டில் இருக்கும் போது  தெரியாத வீட்டின் அருமை இடம் பெயர்ந்த பின்னரே புரிந்தது.  ஏக்கம் சுமையாகி மனதை கோரமாக தாக்கியது. பல இடங்களில் பல வருடங்கள்  அந்தரித்த வாழ்க்கை எம்மை முழுமையாக ஆட்கொண்டது!
.
பிறப்பிடம் திரும்பும் நாள் வெறும் கனவாகவே மனத்திரையை கவ்விக் கொண்டிருந்தது. சொந்த ஊர் திரும்பும் நாளுக்காக சவால்களுடன் காத்திருந்த போதுதான் 2015  அந்த நாள் நெருங்கியது.!
.
 சுவர் எல்லாம் சிதைந்து மயானமாக வெறிச்சோடிக் கிடந்த எங்கள் வீடு  காடாக உருமாறி வீடு கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தது. மனதோ கவலையின் கலவையில் திரண்டு கொண்டது. சில நாட்கள் ஓடிய போது உடைந்த வீட்டை கொஞ்சம் கொஞ்சமா சரி படுத்தத் தொடங்கினேன் .  
.
அன்றும் கட்டட தேவையின் பொருட்டு குளியலறை கதவுகள் கொள்வனவு செய்வதற்காக குடும்பத்துக்கு தெரிந்த ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தியவாறு வங்கிக்கு சென்று 40000 ரூபாய் பணத்தையும்  பெற்றுக் கொண்டு  தாயுடன் நகரிலுள்ள பிரபல காட்சிகூடத்துக்கு சென்றேன். 5000  ரூபாய் புதிய நாணய தாள்கள் என் கைப்பைக்குள் சிறைப்பட்டன 
.
கடை ஊழியர் எமது தேவை தொடர்புடைய  ஒவ்வொரு பொருள் பற்றியும் தெளிவுபடுத்தி கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ காரனும் எம்மோடு வந்து கொண்டிருந்தான். எமது எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் கிடைத்ததும் அதனை தெரிவு செய்தேன். இருந்தும் இன்னும் சில விடயங்கள் தெளிவில்லாமல் இருக்கவே வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் மேசன்களில் ஒருவனிடம் கதவின் கை  பிடி,  கதவின் அளவு தொடர்பான தகவலை பெற விரும்பி எனது கைப்பையை அருகில் இருந்த மேசை மீது வைத்தேன்.  கைப்பை சிப்பை மெதுவாகத் திறந்து கைத்தொலைபேசியை வெளியே எடுத்தேன். மேசனுடன் கதைத்தவாறே கதவு இருக்கும் இடத்திற்கு சென்றேன் 

.
.
 சற்று தொலைவில் என் கைப்பை திறந்த நிலையில் அநாதரவாக கிடந்தது . அதன் அருகில் அந்த ஆட்டோகாரன்  தனது கைகளை கட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.   தொலைபேசி  அவசரத்தில் கைப்பையை நான் மூடாதது  நினைவுக்கு வந்தது. என்னிடம்  பணம் இருந்தாலும் கூட குறித்த  பொருட்களை கிரெடிட் கார்டுக்கே கொள்வனவு செய்திருந்ததால், அந்த பணம் மறந்தே போனது.  வீட்டுக்கு வந்து இறங்கியதும் இரவில் ஆறுதலாக அமர்ந்து அன்றைய செலவுகளை சரி பார்த்த போதுதான் அந்த பணம் காணாமல் போனது புரிந்தது . நடந்த நிகழ்வுகளை என் நினைவில் ஒவ்வொன்றாக வீழ்த்தி பார்த்த போது நான் வங்கியில் எடுத்த புதிய 5000 ரூபாய் அந்த ஆட்டோ காரன் கையில் இருந்தது நினைவு வந்தது. அந்த ஆட்டோகாரர் பணத்தை களவெடுத்திருந்தது தெரியவந்தது. பணத்தை கவனமா பேணாதது என் தவறுதானே! நிச்சயம் அவனுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கட்டும். மானசீகமா இறைவனிடம் அந்த கள்ளனை, நம்பிக்கை துரோகியை பொறுப்பு கொடுத்தவளாக கண்ணீரில் கரைந்தேன். அந்த அனுபவம் அதன் பிறகான ஒவ்வொரு நாட்களும் பணத்தின் பெறுமதி தொடர்பான பாடத்தை  எனக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.

- Jancy Caffoor -
  19.05.2019