ஓர் ஆணும், பெண்ணும் மனம் பொருந்தி வாழ்வதற்காக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான ஒப்பந்தமே திருமணமாகும். சமயங்கள் போதிக்கும் இந்த ஒழுக்க வாழ்வியல் மிகச் சிறந்த வரம். சமூக அங்கீகாரம் பெற்ற, வம்சம் வளர்க்கும் இந்த விழுமியம் காக்கும் ஒப்பந்தத்தில் ஆணும், பெண்ணும் மானசீகமாக இணைக்கப்படும் போதே இல்லறம் நல்லறமாக போற்றப்படுகிறது. முன், பின் அறியாத அல்லது அறிந்த இரு உறவுகள் தமக்காக, தமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் இந்த இல்லற அறத்தையே சமூகம் அங்கீகரிக்கிறது. உறவினால் இருவர் இணைந்து குடும்பமாகி பிள்ளைகள் எனும் விழுதுகளையும் அமைத்து வாழும் போது அந்த வாழ்க்கை பல்வேறு எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் ஆசை, கனவுகளையும் அரவணைத்து செல்கிறது. குடும்பம் எனும் கோபுரம் அமைக்கப்படும் போது பிள்ளைகள் தூண்களாகி, பெற்றோர்களை தாங்கி நிற்பது நல்ல குடும்பத்தின் லட்சணமாகிறது.
கணவன், மனைவி என்போர் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து அன்புடன் வாழும் அந்த வாழ்க்கையின் அழகில் எதிர்காலம் ஒளிமயமாகிறது. சிறந்த குடும்பத்தின் ஒவ்வொரு நகர்வும் ஆனந்தத்தின் தித்திப்போடு செல்லும் என்பதில் ஐயமில்லை. பொறுமையும், அமைதியும், எதையும் தாங்கும் மனமும் கிடைக்கப் பெறும் மணம் கால ஓட்டத்திலும் தேயாத நறுமணம்தான்.
தம்பதியர் தமது சுயநலம் களைந்து, ஈருடல், ஓருயிராக தம்மை மாற்றி வாழாதபோது அக்குடும்பத்தின் நம்பிக்கையும் சிதைவடைந்து விடுகிறது. ஆசை, கனவுகளுடன் தன் எதிர்காலத்தை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ ஒப்படைத்து வாழும் துணைக்கு, தான் நம்பி இருப்போர் விசுவாசமாக இல்லாத போது, நம்பிக்கைத் துரோகியாக மாறும் போது வாழ்வின் பெறுமதி கேள்விக்குறியாகி விடுகிறது. வாழ்க்கை பொய்க்கும் போது எதிர்காலமே இருண்டு விடுகிறது. ஒருவரோடு ஒருவர் பொருந்தி பல்லாண்டு காலம் வாழ்வோம் என்று உறுதி பூண்டு இடையில் முரண்பாடுகளால் குடும்பத்தை, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைக்கும் ஆணோ, பெண்ணோ உணர்வுகளை சிதைக்கும் மிருகமே!
தம்மைச் சார்ந்திருப்போர் நலன் பேணாத யாருமே மனித நேயத்தை தொலைத்தவர்களே! பண்புகள் அற்றோரிடம் பணம் இருந்தாலும் கூட, அவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்களே! உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தனது தவறுகளை குறைத்துக் கொள்ளவும், தனது வாரிசுகளை இப்பூமியில் நிலை நிறுத்தவும் இறைவன் செய்த ஏற்பாடான இந்த திருமணத்தின் அர்த்தம் உணர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல சமூகத்தின் தோற்றுவாய்களாக தம்மை உருவேற்றிக் கொள்கின்றார்கள்.
திருமணம் ஓர் பண்பாட்டின் வெளிப்பாடு ஒவ்வொரு சமயத்தினரது திருமண முறைகள் வேறுபட்டாலும் கூட, ஆண், பெண் எனும் இறை படைப்பின் உருவங்களோ, குருதி நிறமோ, உணர்வுகளோ வேறுபடுவதில்லை. மரணம் வாழ்வின் எல்லையைக் குறுக்கி விட்டாலும் கூட, நாம் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு இந்த சமூக கண்ணாடியில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். வாழ்தலும் ஒரு கலையே! இல்லறப் பள்ளியில் இணைந்த அனைவரும் தமது குறைபாடுகள் களைந்து முரண்பாடுகளின் வேரறுத்து நறுமணம் வீசும் மலர்களாக தம்மை மாற்றி கொள்ள வேண்டும்.
வாழுங்கள் சிறப்பாக!
உங்களால் ஒரு சமூகம் உயிர்ப்போடு பின்னால் வரும் உங்கள் வாழ்வின் மெய்யியலைக் கற்றுக்கொள்ள!!
திருமணம் வெறும் சடங்கல்ல................................. வாழ்வியல்!
-Jancy Caffoor- 20.05.2019
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!