About Me

2019/05/21

மாம்பழம்

Image result for mango sri lanka


விடுமுறை பொழுதொன்றின் காலை விடியலுடன் பொழுதும் குளிர்மையுடன் கலந்து கொண்டிருந்த நேரம் அது. தங்கை மகளை மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக முச்சக்கர வண்டியில் நானும் அம்மாவும் சென்று கொண்டிருந்தோம். காற்றின் சுகத்தில் லயித்தவாறு பார்வையை வெளி காட்சிகளில் வீசிக்கொண்டு வந்தேன்.  பார்வைப் புலத்தில்  குவியலாக வீழ்ந்த மாம்பழம் சிந்தையை வசீகரித்தது.

இப்போது மாம்பழ சீசன்தான். வீதி ஒரங்களில் குவியலாக ஆங்காங்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் கூட,  இந்த குண்டு மாம்பழங்களின்  நிறமும் அழகும் வாயூறவைத்தது, 

"நல்ல மாம்பழங்கள்"

மெதுவாக அம்மாவும் நானும்  சொல்லிக்கொண்டோம். எப்படியாவது அதனை வாங்கி செல்ல வேண்டும் எனும் தீர்மானம் நெஞ்சில் ஆணி அறைந்தது. பிள்ளையை வகுப்பில் விட்டு விட்டு வீடு திரும்பும் போது வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கையில் காசு கொண்டு வரவில்லையே! உண்மை பொறி தட்டியது. ஆட்டோகாரர் நன்கு அறிந்தவர். குடும்ப பழக்கம். மெதுவாக அவரிடம் சொன்னேன்.

"காக்கா மாம்பழம் வாங்க வேணும். வீட்டை வந்ததும் தாரேன் பணம் இருக்குமா?"

புன்னகைத்தார். தன் பணப்பையை திறந்து நான் கேட்ட  500 ரூபாய் பணத்தை எண்ணி தந்தார். வாங்கி கொண்டேன். வாகனம் சிறு கதியோடு ஓடி அந்த மாம்பழம் விற்கும் ஆச்சியின் கடை அருகில் நின்றது. இறங்கி மாம்பழத்தை கையில் எடுத்தேன். குண்டு குண்டான கறுத்த  கொழும்பான். விலை கேட்டேன். சொன்னார்.
"குறையுங்கோ ஆச்சி" என்றேன். 5.00 ரூபாய் குறைத்தார். என் அம்மாவோ "இன்னும் குறையுங்கோ" என்ற போது அந்த ஆச்சிக்கு  கோபம் வந்தது. இதை விட குறைக்க முடியாது. சினத்தார்.

"அம்மா பாவம் விடுங்கோ காலை கைவிசேடம் நாம்தான் போல்"

அம்மாவை மௌனியாக்கி  விட்டு, மாம்பழங்களை என் கையில் உள்ள பணத்திற்கேற்ப தெரிவு செய்தேன். பணம் கை மாறியது. மிகுதி பத்து ரூபாய்!நானோ பெருந்தன்மையுடன் வேண்டாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றேன். அந்த ஆச்சியோ  சிறிது யோசனையின் பின்னர்

"வேண்டாம் பிள்ளை பத்து ரூபாய்க்கு ஒரு மாம்பழம் தரேன்"

 என்று அருகில் உள்ள பெட்டி திறந்து வில்லாட் மாம்பழம் தந்தார்.
Mango
சிறு தொகை பணமாயினும் அதன் பெறுமதியை மதித்த அந்த மாம்பழம் விற்ற ஆச்சி என் மனதில் உயர்ந்துதான் போனார்.

"சுரண்டல்" எனும் பெயரில் பணம் படைத்தவர்கள் பணத்தை ஏப்பம் விடும் போது அந்த ஏழை ஆச்சியின்  நேர்மையாக பணம் உழைக்கும் நினைப்பு என்னை கவர்ந்தது.

"ஆச்சி நாளைக்கும் வாரேன் "என்றவாறு மன நிறைவோடு ஆட்டோவில் ஏறினேன்.


-Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!