............
காலெண்டர் கதறலில் மண்
சிவந்துதான் போனது அது
கண்ணீர் ஈரலிப்பில் கரைந்துதான்
போனது !
முள்ளிவாய்க்கால்
முட்கள் தேசத்தின் படிக்கட்கள் !
குருதி விரல்களால்
வருந்தி எழுதப்பட்ட சரித்திரம் !
உயிர் பூக்களின் குரல் வளைகளில்
மூச்சு பிடுங்கப்பட்ட நாள்!
கண்ணீர் கசிவில்
மனித அவலங்கள் நசிந்த நாள்!
குண்டுகள் பிளந்த தேகங்கள்
பிண செண்டுகளாய் விழித்தன
தோட்டாக்களும் பீரங்கிகளும்
உரக்க வாசித்தன மரணங்களை!
கிழிந்து போன தேகங்களும்
ஊனங்களும் இன்னும்
விழித்திரையில் மங்கா விம்பங்களாய்
பயணிக்கின்றன பத்து வருடம் தொட்டு !
உடமைகளும் உறவுகளும்
தொலைவாகி போனதில்........
துயரங்களின் சாம்ராச்சியத்தில்
மனம் அமிழ்ந்து போனது!
யுத்த தராசில்
பாவங்கள் எடை கூடின!
உடைந்த கனவுகளில்
அழுகை முகம் திறந்து பார்த்தது!
வெள்ளை கொடிகளில்
உள்ளம் சிதைந்த குருதி கறைகள்!
தீப்பிழம்பின் ஓசையில்
வாழிடம் கருகிப் போனது!
இழந்த வலி நீள்கையில்
எல்லையில் உணர்விழந்த உயிர்கள் !
இன்றுவரை தேடலில் தான்
காணாமல் போனவர்களாய் !
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!