இளமை பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றிய நம்பிக்கைகள் கனவுகள் தொடர்ச்சியாக உலாவரும். நமக்கு பொருத்தமான தடம் நம் காலடி சேரும் வரை நமது தேடலும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவ்வாறான தேடலுடன் எனது இளமை வெளியில் உலா வந்த காலம் அது.
.
இழந்த பின்னர்தானே அதன் அருமை புரிகிறது. 1990 ஒக்டோபரில் யுத்தம் எங்கள் வீட்டை விழுங்கிய போது வீடு எனது கனவாக இருந்தது. எல்லோரும் இருப்பதற்கு வீடொன்று இருக்கும் போது நாமோ இருப்பிடம் தொலைத்த அகதிகளாக இரண்டு தசாப்தம் அலைந்த காலம் அது!
.
சொந்த வீட்டில் இருக்கும் போது தெரியாத வீட்டின் அருமை இடம் பெயர்ந்த பின்னரே புரிந்தது. ஏக்கம் சுமையாகி மனதை கோரமாக தாக்கியது. பல இடங்களில் பல வருடங்கள் அந்தரித்த வாழ்க்கை எம்மை முழுமையாக ஆட்கொண்டது!
.
பிறப்பிடம் திரும்பும் நாள் வெறும் கனவாகவே மனத்திரையை கவ்விக் கொண்டிருந்தது. சொந்த ஊர் திரும்பும் நாளுக்காக சவால்களுடன் காத்திருந்த போதுதான் 2015 அந்த நாள் நெருங்கியது.!
.
சுவர் எல்லாம் சிதைந்து மயானமாக வெறிச்சோடிக் கிடந்த எங்கள் வீடு காடாக உருமாறி வீடு கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தது. மனதோ கவலையின் கலவையில் திரண்டு கொண்டது. சில நாட்கள் ஓடிய போது உடைந்த வீட்டை கொஞ்சம் கொஞ்சமா சரி படுத்தத் தொடங்கினேன் .
.
அன்றும் கட்டட தேவையின் பொருட்டு குளியலறை கதவுகள் கொள்வனவு செய்வதற்காக குடும்பத்துக்கு தெரிந்த ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தியவாறு வங்கிக்கு சென்று 40000 ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு தாயுடன் நகரிலுள்ள பிரபல காட்சிகூடத்துக்கு சென்றேன். 5000 ரூபாய் புதிய நாணய தாள்கள் என் கைப்பைக்குள் சிறைப்பட்டன
.
கடை ஊழியர் எமது தேவை தொடர்புடைய ஒவ்வொரு பொருள் பற்றியும் தெளிவுபடுத்தி கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ காரனும் எம்மோடு வந்து கொண்டிருந்தான். எமது எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் கிடைத்ததும் அதனை தெரிவு செய்தேன். இருந்தும் இன்னும் சில விடயங்கள் தெளிவில்லாமல் இருக்கவே வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் மேசன்களில் ஒருவனிடம் கதவின் கை பிடி, கதவின் அளவு தொடர்பான தகவலை பெற விரும்பி எனது கைப்பையை அருகில் இருந்த மேசை மீது வைத்தேன். கைப்பை சிப்பை மெதுவாகத் திறந்து கைத்தொலைபேசியை வெளியே எடுத்தேன். மேசனுடன் கதைத்தவாறே கதவு இருக்கும் இடத்திற்கு சென்றேன்
.
சற்று தொலைவில் என் கைப்பை திறந்த நிலையில் அநாதரவாக கிடந்தது . அதன் அருகில் அந்த ஆட்டோகாரன் தனது கைகளை கட்டியவாறு நின்று கொண்டிருந்தான். தொலைபேசி அவசரத்தில் கைப்பையை நான் மூடாதது நினைவுக்கு வந்தது. என்னிடம் பணம் இருந்தாலும் கூட குறித்த பொருட்களை கிரெடிட் கார்டுக்கே கொள்வனவு செய்திருந்ததால், அந்த பணம் மறந்தே போனது. வீட்டுக்கு வந்து இறங்கியதும் இரவில் ஆறுதலாக அமர்ந்து அன்றைய செலவுகளை சரி பார்த்த போதுதான் அந்த பணம் காணாமல் போனது புரிந்தது . நடந்த நிகழ்வுகளை என் நினைவில் ஒவ்வொன்றாக வீழ்த்தி பார்த்த போது நான் வங்கியில் எடுத்த புதிய 5000 ரூபாய் அந்த ஆட்டோ காரன் கையில் இருந்தது நினைவு வந்தது. அந்த ஆட்டோகாரர் பணத்தை களவெடுத்திருந்தது தெரியவந்தது. பணத்தை கவனமா பேணாதது என் தவறுதானே! நிச்சயம் அவனுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கட்டும். மானசீகமா இறைவனிடம் அந்த கள்ளனை, நம்பிக்கை துரோகியை பொறுப்பு கொடுத்தவளாக கண்ணீரில் கரைந்தேன். அந்த அனுபவம் அதன் பிறகான ஒவ்வொரு நாட்களும் பணத்தின் பெறுமதி தொடர்பான பாடத்தை எனக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.
- Jancy Caffoor -
19.05.2019
- Jancy Caffoor -
19.05.2019
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!