About Me

2019/06/01

இனி

யாரோ கல்லெறிகின்றார்கள்  - என்
௨ணர்வுக் குளவிகள் கலைகின்றன!

ஈமானிய வாசங்களை நுகர்ந்தோம்
ஈட்டிகளை பாய்ச்சுகின்றனர் விசமமாய்!

நெருப்பு வளையங்களை முத்தமிட்டே
நெஞ்சக்கூடு வெந்து போகிறது!

அன்றும் விரட்டப்பட்டோம் அகதிகளாய்
இன்றும் இம்சிக்கப்படுகிறோம் இதயம் இற்றுவிட!

நேசங்கள் ௨திர்த்தே தேசம் தொலைத்தோம்
பாசங்கள் இல்லாத பல மனிதர் கண்டோம்!

விமர்சிக்கிறார்கள் வில்லர்களாக்கி
விடியலை விரட்டும் இருளாக்கி!

யாரோ தீ கக்கினார்கள் அன்று
இன்றோ எம் சுவாசத்தில் கரும் புகை!

வஞ்சம் நீள்கிறது அழகாய்
நெஞ்சப் பாறை உருகுகிறது கண்ணீரால்!

புன்னகைகளை புதைத்து விட்டோம்
புதைகுழியில் சதியின் பெயரால்!

இனவாதம் நீள்கிறது மூச்சு வேர்களில்
இனி பூக்குமோ அமைதி வாழ்வோரங்களில்!

- Jancy Caffoor -
   

2019/05/31

வறட்சி

வானம் வியர்க்கிறது
மழையாய்!

வெயில் முகம் கழுவுகிறது
நீரோடகளில்!

தாவர வேரின் குரல்வளை
நசிகிறது வறட்சியில்!

தாகத்தின் ஏக்கத்தில்
௨யிர்கள்!

மழைமேகம் திரையிடுகிறது
வெயில் ரேகைகளில்!

வெப்பத்தின் முத்தங்களில்
கானல் நீர் நாணுகிறது!

எரியும் வெயில் பூக்களை
சூடும் மேனி சிவக்கிறது !

மரங்களின் கதறலில்
இடி கூட அஞ்சியதோ!

மழை வருமோ ...........
மண் வாசம் ௮றிய
காத்திருக்கின்றது மனசு!

           

- Jancy Caffoor -
   

2019/05/23

தொடர் நாடகங்கள்

Related image

வாழ்க்கையின் நகர்வு சலிப்புத்தட்டாமல் செல்வதற்கு பொழுது போக்கு அம்சங்கள் துணை நிற்கின்றன. இன்று மக்களின் இயந்திரமான வாழ்வின் முக்கிய தரிப்பிடங்களில் ஒன்றாக சின்னத்திரை காணப்படுகிறது. அதிலும் தொலைக்காட்சி நாடகங்கள் கற்பனை எனும் எல்லையையும் தாண்டி  வீட்டின் முக்கிய நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலாரின் குறிப்பாக பெண்களின் குறித்த நேரங்கள் சின்னத்திரைக்காக ஒதுக்கப் படுகின்றது. சீரியல்களில் சீவியம் நடத்தும் காலத்தில் நாம் வாழ்வதால் நாடகங்களின் கதாபாத்திரங்கள் கற்பனை என்ற அளவீடுகளையும் தாண்டி நம் நிஜ வாழ்விலும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக மாறி விட்டது. இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நான் பார்க்கும் சின்னத்திரை நாடகங்களில் என்னை சலிப்பூட்டிய சில பெண் கதாபாத்திரங்கள் பற்றி இங்கு கூறப்போகிறேன் .

பெரும்பாலான நாடகங்களில் வில்லி  பெண்களே நம் மனங்களில் எரிச்சலை விதைத்து செல்கின்றனர். பொறுமையின் இலக்கணம் பெண்மை. ஆனால் அந்த புனிதம் பெற வேண்டிய தாய்மை, அச்சம் தரும் நெருப்பாக மாறி ரசிகர்களின் ரசனைக்குள் அனலை விசிறி விடுகின்றனர்.  பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் கூட இருந்து குழி பறிக்கும் இந்தப் பெண்ணுக்குள் பொறாமையும். வஞ்சமும் இறங்கிக்கொண்டிருக்கிறது. நம்பிக்கைத்துரோகம் அவள் ஆயுதமாக சித்தரிக்கப்படுகிறது. தன்  குடும்பம், தன்  சுயநலம் எனும் வட்டமே அவள் உலகமாக சுருங்கிக் கொண்டிருக்கிறது. 
தற்போதுள்ள நாடகங்களில் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக சண்டை இடும் அவலம் காணப்படுகிறது. உயிரிலும் உணர்வாகும் உண்மைக்  காதல்,  பணத்திற்கு வேஷம் போடும் துரோகக் கூட்டங்கள் என  நாடகங்கள் திணிக்கும் சிந்தனைகளை இறுக்கிப்  பிடிக்கத்  தயாராகி உள்ள இளம் சந்ததியினர்,

தான் காட்சி பெறும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழல்கின்றனர். பணம் பத்தும் செய்யும் எனும் நியதிக்கேற்ப பணத்தால் எதனையும் விலை கொடுத்து வாங்கும் பணக்கார திமிர் பிடித்த பெண்கள் ஒவ்வொரு நாடகங்களிலும் முதன்மை வில்லிகளாக வலம் வருகின்றனர். கெடுதல் செய்வோரின் ராஜபோகம் முடிவிலியின்றி நீள்கிறது. .நாட்களை நீடிக்கும் பொருட்டு கதை சித்தரிப்பும் நீளும் போது நாடகத்தின் சுவாரஸ்யம் குன்றி விடுகிறது. தவறுகளை நியாயப்படுத்தவும், குற்றங்களை தமக்கு இசைவாக பயன்படுத்தவும் நாடகங்கள் கற்றுக்  கொடுக்கின்றது. அத்துடன் எவ்வளவு விசுவாசம் காட்டினாலும் தன் வேலையாள் எனும் எல்லைபுள்ளி தாண்டாத கம்பீரமான எஜமானி, முதலாளித்துவத்தின் குறியாக தன்னை இனம் காட்டுகிறார். அத்துடன் குட்ட, குட்ட குனிய தெரியாத அப்பாவி கதாநாயகிகளுடன் பிணைந்து செல்லும் கதை அமைப்பு நேரத்தை நகர்த்திச் செல்கிறது .

விரட்டும் வில்லிகளிலிருந்து கடவுளால் காப்பாற்றப்படும் அப்பாவி நாயகிகளின்  கடவுள் நம்பிக்கை ஒவ்வொரு அத்தியாயத்தின் மைல்  கல்லாகும். .எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போராடும் கதாநாயகிகளின் போராட்டம் நீண்டது. பல தூரம் பயணிக்க வேண்டியது. ஒரு சராசரி பெண்ணோடு விளையாடும் வில்லர் கூட்டத்தினரின் திரு விளையாடல்களை பார்க்கும் போது எரிச்சலும், கோபமும் நம்மை விராண்டுகிறது, சுவேதா, தீபிகா,  நந்தினி எனும் சூறாவளியால்  தினம் ஆட்டம் காணும்......  பூங்கொடி, வென்னிலா, பார்வதி, சக்தி என நீளும் மலர்கள் உதிராமல்  நிஜ வாழ்விலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனும் உணர்வுகளை உள்வாங்கியவாறு நாமும் தினமும் நாடகங்கள் சிலவற்றுடன் பயணிக்கிறோம் .

கற்பனை அருமையாக கதையை நகர்த்தி சென்றாலும் கூட, இந்த வில்லர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. 


-Jancy Caffoor-
  22.05.2019

வறுமை



வாழ்க்கை கதவு தட்டப்படுகிறது
வாசலில் வறுமை !

ஏழைப் பாறைக்குள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்  பெயரை !

மனம் கிழிந்து போனது
துவாரங்களில் வறுமை!

என் வறுமைத் தீயில்
கடன் கருகிக்  கொண்டிருக்கின்றது  !

பசியின் ஆக்கிரமிப்பில்
கண்ணீர் சிறைபடுகின்றது  !

மழை விரட்டிக்கொண்டிருக்கிறது
 வெள்ளத்தை வீட்டுக்குள்!

அடுக்களையை நுகர்ந்து பார்க்கிறேன்
ஏக்கப் புகை வாசம்!

சட்டை க் கிழிசல்கள்
சாட்டை அடிக்கின்றன தேகத்தை !

உணவின் வாசம் மாத்திரமே
சுவாசத்தின் வாசலில் !

கனவுச் சாளரத்தின் கம்பிகள்
துருப் பிடித்துக்  கொண்டிருக்கின்றன !

 மருதாணி சாறுக்குள்
வீழ்ந்து விட்டதா வாழ்க்கை!

- Jancy Caffoor -