About Me

2021/04/14

காதலெனும் நதியினிலே

 

காதலெனும் நதியினிலே 
காத்திருந்தேன் தவிப்புடனே/
காலமெல்லாம் களித்திருக்க 
கனிந்திருக்கே அன்புதானே/

பருவத்தின் துடிப்பினிலே 
படருதே ஆசைகளே/
இருவரும் படகுகளாய் 
இனிமைக்குள் உலாவவே/

வெண்பனியாய் மூடுகின்ற
உன்றன் தழுவலுக்குள்/
வெட்கம் விரித்தே 
சாய்கிறேன் மெதுவாக/

கனவுக்குள்ளும் மிதக்கிறே 
நினைவாகிப்  பூக்கிறே/
நனவுக்குள்ளும் சிரிக்கிறே 
நிழல்கூட நடக்கிறே/

இல்லறக் கரையினில் 
இன்பமாக ஒதுங்குகையில்/
இழுக்கிறே வம்புக்குள்ளே 
இதயமதைக் கொஞ்சித்தானே/

உணர்வுகள் ஊஞ்சலாட 
உயிரும் வருட /
உள்ளத்தின் அசைவுக்குள்ளே 
உறவாகி வாழுறே/

ஜன்ஸி கபூர் - 15.11.2020   

முதியோர் இல்லம்


 
அற்புதமான மனித வாழ்வானது ஒவ்வொரு பருவங்களையும் கடந்தே செல்கின்றது. மனிதனது வாழ்க்கைப் பயணத்தில் அதிக அனுபவங்களைக் கொண்டதாக முதியோர் பருவமானது காணப்படுகின்றது. உடலும் மனமும் குழந்தைபோல் மென்மையாகி விடுகின்றது.

விரைவான காலவோட்டமானது இளமையைக் கரைக்கின்றது. சுருங்கிய தளர்ந்த தேகம் இயக்கம் குன்றிய ஐம்புலன்கள் என நகருகின்ற ஒவ்வொரு நொடிகளும் மரணத்தை எதிர்பார்த்து தன்னை முதுமை இல்லத்தினுள் ஒதுக்கி விடுகின்றது.

பாசத்தால் உணர்வூட்டி வளர்த்த பிள்ளைகள் தாம் வளர்ந்ததும் தம்மை வளர்த்த பெற்றோரை அநாதரவாகக் கைவிடும் அவலத்தினால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. உறவுகளால் சூழ்ந்து களித்திருக்க வேண்டிய மனம் தனிமைக்குள் வருந்துகின்றது. தன்னைப் பராமரிக்க தன் உதிர உறவு அருகில்லையே எனும் ஏக்கத்தில் வேதனை தினம் கொப்பளிக்கின்றது.

உடன் வாழ்ந்த துணை பிரிந்த பின்னர் ஆதரவுடன் அணைக்க வேண்டிய பிள்ளைகள் தம் வாழ்வைப் பேணியபடி பெற்றோரை யாரோ ஒருவராக எண்ணி இம்சிக்கும்போது அவர்களைத் தாங்குவதற்காக அன்போடு வாசலைத் திறக்கின்றது முதுமை இல்லம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பரிவோடு அணைத்து அன்புடன் அவர்களைக் கவனிக்கின்ற பல சேவையாளர்களைக் கொண்டதாக இம்முதியோர் முகாம் காணப்பட்டாலும் கூட வாழ்ந்த உறவுகளின் வெற்றிடங்களை அச்சேவையாளர்கள் நிரப்புவார்களாக.

முதுமை இல்லமெனும்; கட்டிடச் சுவர்களுக்குள் வாழ்கின்ற ஒவ்வொரு உள்ளங்களும் அன்பைத் தேடுகின்றன. இறந்தகால நிழல்களை மீட்டிப் பார்த்தே எஞ்சிய காலங்களை வாழ்ந்திடத் துடிக்கின்றன.

கைவிட்டுப் போன உறவுகளால் வழிகின்ற கண்ணீர்த்துளிகளால் அம்முதியோர் இல்லம் நனைந்து கொண்டேயிருக்கின்றது. பிடித்த வாழ்வைத் தொலைத்துவிட்டு பிடிக்காத உலகத்தில் வாழ்கின்ற அப்பெரியோர்களின் உணர்வுப் போராட்டங்களின் அடையாளமாகவே இம்முதியோர் இல்லம் காணப்படுகின்றது.

ஜன்ஸி கபூர்

ஆண்-பெண்கள்

 

 
ஓர் குடும்பத்தின் கட்டமைப்பை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பை பெண்கள் சுமக்கின்றார்கள்.அவளுக்குக் கிடைக்கின்ற ஓய்வும் மிகக் குறைவே. அக்குறைந்த  ஓய்வுக்குள்ளும் நேரத்தைத் திட்டமிட்டு தம் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இலக்கிய கலையுலகில் தடத்தினைப் பதித்து முகநூல்க் குழுமங்களில் முன்னணி வகிக்கின்றார்கள் பெண்கள். ஆனாலும் இந்நிலையை எய்த அவர்கள் பல சவால்களை ஏற்க வேண்டியுள்ளது. ஆணாதிக்கச் சிந்தனையுடைய சிலர் விமர்சனம் எனும் பெயரில் அவளது ஆற்றலை ஆசைகளைக் கிள்ளியெறியத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  முகநூல் என்பது சர்வதேசத்தை தனது கரங்களுக்குள் அடங்கியிருக்கின்ற குழுமம் என்பதால் அவளின் கருத்துக்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிவிட சில குடும்ப உறவுகளும் தடையாக இருக்கின்றன. இருந்தும் இத்தடைகளையும் கடந்தே பெண்களின் கலைப் பயணம் முன்னணியில் திகழ்கின்றது என்பதே உண்மையாகும்.

இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். பெண்கள் ஆண்களின் தடைகளைத் தாண்டியே தமது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார். பெண்ணின் கலை வளர்ச்சி உச்சம் அடைகின்ற பட்சத்தில் ஆண்கள் மௌனம் சாதிக்கின்றார்கள். இத்தகைய ஆண்கள் இல்லாதபட்சத்திலும் பெண்களின் தன்னம்பிக்கை அவளைத் தனித்து இயங்கச் செய்யும். ஆண்களின்றி அவர்களால் சுயமாகப் பயணிக்க முடியும்.

 ஆண்களின் அனுமதியைப் பெற்றுத்தான் பெண்கள் இயங்க வேண்டுமென்றால் பெண்களை முகநூலில் காணவே முடியாது. ஆண்களின் தடைகளையும் இலகுவாகக் கடக்கின்ற சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டு.

 நிறைய பெண்கள் எழுதுகின்றார்கள். போட்டி நடத்துனர்களுக்கு இது தெரியும். ஆனால் வெற்றி வாய்ப்புக்கள் அனுபவமுள்ள ஆண்களுக்குப் போய் விடுகின்றன போலும். இதுதான் உங்கள் கருத்துக் கணிப்பிற்கான விளக்கம்

ஜன்ஸி கபூர் - 7.11.2020

இரத்த தானம்

 

 
இவ்வுலகில் அறிவெனும் ஆறாம் விரலினூடாக முழு உலகையும் தனது சிந்திக்கும் ஆற்றல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கும் மனித உடலின் கட்டமைப்புக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணங்களும் விந்தைமிகு இறைவனின் படைப்பின் நுட்பம் ஆச்சரியப்படுத்துகின்றது.

தனது கைமுஷ்டியின் அளவு இதயத்தைப் படைத்து, அதன் மூலமாக இரத்தத்தை உடல் முழுதும் பாய்ந்தோடச் செய்து, உயிர்வாழ்விற்கான தகுதியை வழங்குவதற்காக குருதிச்சுற்றோட்டத் தொகுதியுடன் தொடர்புபட்டதாக ஏனைய கட்டமைப்புத் தொகுதிகளையும் அமைத்து மனிதனை உயிர்வாழச் செய்யும் இறைவனின் ஆற்றல் அபாரிதம்.

இரத்தம் என்பது மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பாயம். அத்தகைய இரத்தத்தை தேவை கருதி தானம் செய்வதே மிகச் சிறந்த தானமாகும்.

தற்காலத்தில் நவீனம் எனும் போர்வைக்குள் வாழப் பழகிக் கொண்ட மனிதன், தனது இயந்திரத் தன்மையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும்போது, விபரீதமான முறையில் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றான். விபத்துக்கள் மற்றும் சில நோய் நிலைமைகளின் போது இரத்தத்தின் பயன்பாடு மருத்துவ உலகத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இவ்வாறான அவசரமான நேரங்களை எதிர்கொள்ளும்போது இரத்த வங்கி அல்லது இருப்பில் போதிய அளவு இல்லாவிடில் உயிரிழப்பு ஏற்படுகின்றது. இத்தகைய உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு இரத்த தானமெனும் உயரிய கொடையை வழங்க ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்.

சாதி, மத, குல வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய இரத்தத்துளிகள் சமத்துவத்திற்கான ஓர் அடையாளமாகும்.

ஏற்றத்தாழ்வுகள் நீங்கி அனைவரும் இத்தானத்திற்கான பங்காளர்களாக முன்வரல் வேண்டும். நாம் இரத்ததானம் செய்யும்போது நமது உடலிலுள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிப்பதனால் நமது உடலும் ஆரோக்கியம் பெறுகின்றது. ஆபத்திலிருந்து அடுத்தவரைக் காப்பாற்றியிருக்கின்றோம் எனும் உணர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற மனத்திருப்தி நமது மன ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது.

நாம் தானமாக வழங்குகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அடுத்தவரின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது.

"இரத்தம் வழங்கும் மனிதமுள்ள மனிதர்களாக நாம் நம்மை மாற்றிக் கொள்வோமாக"

ஜன்ஸி கபூர் - 18.11.2020