About Me

2021/04/14

இரத்த தானம்

 

 
இவ்வுலகில் அறிவெனும் ஆறாம் விரலினூடாக முழு உலகையும் தனது சிந்திக்கும் ஆற்றல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கும் மனித உடலின் கட்டமைப்புக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணங்களும் விந்தைமிகு இறைவனின் படைப்பின் நுட்பம் ஆச்சரியப்படுத்துகின்றது.

தனது கைமுஷ்டியின் அளவு இதயத்தைப் படைத்து, அதன் மூலமாக இரத்தத்தை உடல் முழுதும் பாய்ந்தோடச் செய்து, உயிர்வாழ்விற்கான தகுதியை வழங்குவதற்காக குருதிச்சுற்றோட்டத் தொகுதியுடன் தொடர்புபட்டதாக ஏனைய கட்டமைப்புத் தொகுதிகளையும் அமைத்து மனிதனை உயிர்வாழச் செய்யும் இறைவனின் ஆற்றல் அபாரிதம்.

இரத்தம் என்பது மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பாயம். அத்தகைய இரத்தத்தை தேவை கருதி தானம் செய்வதே மிகச் சிறந்த தானமாகும்.

தற்காலத்தில் நவீனம் எனும் போர்வைக்குள் வாழப் பழகிக் கொண்ட மனிதன், தனது இயந்திரத் தன்மையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும்போது, விபரீதமான முறையில் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றான். விபத்துக்கள் மற்றும் சில நோய் நிலைமைகளின் போது இரத்தத்தின் பயன்பாடு மருத்துவ உலகத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இவ்வாறான அவசரமான நேரங்களை எதிர்கொள்ளும்போது இரத்த வங்கி அல்லது இருப்பில் போதிய அளவு இல்லாவிடில் உயிரிழப்பு ஏற்படுகின்றது. இத்தகைய உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு இரத்த தானமெனும் உயரிய கொடையை வழங்க ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்.

சாதி, மத, குல வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய இரத்தத்துளிகள் சமத்துவத்திற்கான ஓர் அடையாளமாகும்.

ஏற்றத்தாழ்வுகள் நீங்கி அனைவரும் இத்தானத்திற்கான பங்காளர்களாக முன்வரல் வேண்டும். நாம் இரத்ததானம் செய்யும்போது நமது உடலிலுள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிப்பதனால் நமது உடலும் ஆரோக்கியம் பெறுகின்றது. ஆபத்திலிருந்து அடுத்தவரைக் காப்பாற்றியிருக்கின்றோம் எனும் உணர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற மனத்திருப்தி நமது மன ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது.

நாம் தானமாக வழங்குகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அடுத்தவரின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது.

"இரத்தம் வழங்கும் மனிதமுள்ள மனிதர்களாக நாம் நம்மை மாற்றிக் கொள்வோமாக"

ஜன்ஸி கபூர் - 18.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!