About Me

2021/04/14

முதியோர் இல்லம்


 
அற்புதமான மனித வாழ்வானது ஒவ்வொரு பருவங்களையும் கடந்தே செல்கின்றது. மனிதனது வாழ்க்கைப் பயணத்தில் அதிக அனுபவங்களைக் கொண்டதாக முதியோர் பருவமானது காணப்படுகின்றது. உடலும் மனமும் குழந்தைபோல் மென்மையாகி விடுகின்றது.

விரைவான காலவோட்டமானது இளமையைக் கரைக்கின்றது. சுருங்கிய தளர்ந்த தேகம் இயக்கம் குன்றிய ஐம்புலன்கள் என நகருகின்ற ஒவ்வொரு நொடிகளும் மரணத்தை எதிர்பார்த்து தன்னை முதுமை இல்லத்தினுள் ஒதுக்கி விடுகின்றது.

பாசத்தால் உணர்வூட்டி வளர்த்த பிள்ளைகள் தாம் வளர்ந்ததும் தம்மை வளர்த்த பெற்றோரை அநாதரவாகக் கைவிடும் அவலத்தினால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. உறவுகளால் சூழ்ந்து களித்திருக்க வேண்டிய மனம் தனிமைக்குள் வருந்துகின்றது. தன்னைப் பராமரிக்க தன் உதிர உறவு அருகில்லையே எனும் ஏக்கத்தில் வேதனை தினம் கொப்பளிக்கின்றது.

உடன் வாழ்ந்த துணை பிரிந்த பின்னர் ஆதரவுடன் அணைக்க வேண்டிய பிள்ளைகள் தம் வாழ்வைப் பேணியபடி பெற்றோரை யாரோ ஒருவராக எண்ணி இம்சிக்கும்போது அவர்களைத் தாங்குவதற்காக அன்போடு வாசலைத் திறக்கின்றது முதுமை இல்லம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பரிவோடு அணைத்து அன்புடன் அவர்களைக் கவனிக்கின்ற பல சேவையாளர்களைக் கொண்டதாக இம்முதியோர் முகாம் காணப்பட்டாலும் கூட வாழ்ந்த உறவுகளின் வெற்றிடங்களை அச்சேவையாளர்கள் நிரப்புவார்களாக.

முதுமை இல்லமெனும்; கட்டிடச் சுவர்களுக்குள் வாழ்கின்ற ஒவ்வொரு உள்ளங்களும் அன்பைத் தேடுகின்றன. இறந்தகால நிழல்களை மீட்டிப் பார்த்தே எஞ்சிய காலங்களை வாழ்ந்திடத் துடிக்கின்றன.

கைவிட்டுப் போன உறவுகளால் வழிகின்ற கண்ணீர்த்துளிகளால் அம்முதியோர் இல்லம் நனைந்து கொண்டேயிருக்கின்றது. பிடித்த வாழ்வைத் தொலைத்துவிட்டு பிடிக்காத உலகத்தில் வாழ்கின்ற அப்பெரியோர்களின் உணர்வுப் போராட்டங்களின் அடையாளமாகவே இம்முதியோர் இல்லம் காணப்படுகின்றது.

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!