About Me

2021/04/15

அப்துல் கலாம்


தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் ஆஷியா உம்மா தம்பதியனருக்கு   மகனாக 1931 ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த கலாம் அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே குடும்பத்தைக் காத்தவர்கள்.  

இயற்பியல் இளங்கலைப் பட்டதாரியான அவர்கள் தனது ஆர்வத்தின் காரணமாக விண்வெளி பொறியியல் படிப்பையும் மேற்கொண்டு முதுகலையும் பெற்றார்கள்;. 1960 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளைத் தொடங்கியவர் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார்கள்;. ஹெலிகொப்டர் வடிவமைப்பு அணு ஆயுதச் சோதனை உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களிலும் பங்கேற்றார்கள். இவரது முற்போக்குச் சாதனைகளால் சகல நாடுகளின் பார்வையையும் இந்தியாமீது திருப்பியது மாத்திரமல்ல இந்தியாவும் வல்லரசானது.  

அன்பினால் மக்கள் மனங்களை வென்று 2002 ஆம் ஜூலை 25 ஆம் திகதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்கள். பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அக்கினிச் சிறகுகள் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். 

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதை வலுவூட்ட   முன்னேற்ற இந்தியாவுக்காக கனவுகளைக் கண்டு அதனை நனவாக்க பாடுபட்டு உழைக்குமாறு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டிய மிகச்சிறந்த தலைவர். 2007 ஆம் ஆண்டு தனது குடியரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். பல்வகை ஆளுமைகளுடன்   வாழ்ந்த ஏவுகணை நாயகன் 2015 ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்கள்.  

அந்தவகையில் தனது வாழ்வை எளிமையாக ஆரம்பித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வரலாறும் காலத்தால் மறக்கப்படாதது. 


ஜன்ஸி கபூர்  - 20.10.2020

மறக்க முடியுமா

 

  • கடிகார முட்கள் மெதுவாக நகர்வதைப் போன்ற பிரமை. எவ்வளவு நேரம்தான் ரம்யாவால் விட்டத்தை வெறித்துப் பார்க்க முடியும்.

    "தாயீ........வெறும் வயித்தோட இருக்கக்கூடாது. ஏதாவது வாய் நனையம்மா. தேத்தண்ணீ ஆறப் போவுது"

    தாயின் பரிவுடன் அவளை ஆறுதல்படுத்தும் கணவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீரால் நிறைந்திருக்கின்ற விழிகள் வெடித்து விடுமோவென்ற பிரமை. அடக்க முடியவில்லை. நெஞ்சம் தேம்பியது.

    மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ராம். அண்மையில் நடந்து முடிந்த அந்த வலி தரும் சம்பவம் கண்முன்னால் விரிந்தது.

    ராம் குடும்பத்தின் தலைமகன். சிறுவயதிலேயே அப்பா தவறிப் போனதால் அவனே தனது குடும்பத்தைக் காக்கும் தூணானான். அவனுக்கு பின்னர் காத்திருந்த நான்கு குமர்ப்பிள்ளைகளையும் கரையேற்றும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அண்ணனாக அல்லாமல் தந்தையாகிப் பாரம் சுமந்தான். தனது இளமைக் காலம் அனைத்தையும் வெளிநாட்டில் கரைத்து உழைத்தான். பாலைவன வெம்மை அவனது வனப்பையெல்லாம் சுரண்ட நான்கு குமர்களையும் கரையேற்றியவனாக நாடு திரும்புவதற்குள் நாற்பது வயதையும் தாண்டிவிட்டான். வயோதிபத் தாயை நல்ல தனயனாகிக் காத்தான். தனது எதிர்காலம் அவனுக்கு மறந்தே போனது. நாளாந்த வாழ்க்கைச் செலவினைச் சமாளிப்பதற்காக முச்சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வாடகைக்காக ஓட்டத் தொடங்கினான். கிடைக்கும் வருமானம் அவர்களின் அன்றாட வாழ்வைச் சமாளிக்க உதவியது.

    ஆனாலும் அவனது தாயார் அவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போராடி ஈற்றில் முதிர்கன்னியாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்ற ரம்யாவைத் தேடிக் கண்டுபிடித்தார். அவனுக்கேற்ற மனைவி. பெரியவர்களின் ஆசியுடன் அவளைக் கரம் பற்றினான்.

    நாட்களும் வேகமாக ஓடின. குழந்தையின்மை அவர்களுக்குப் பெருங் குறையாகத் தெரியவில்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாகக் குழந்தையாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரம்தான், ரம்யாவின் சித்தப்பா மகள் அவள் வாழ்வுக்குள் குறுக்கிட்டாள்.

    "அக்கா நாலு பொட்டப் புள்ளா தொடர்ந்து பொறந்திருச்சி. சமாளிக்க முடியல. உனக்குத் தத்து தாரேன் வளர்க்கிறியாக்கா"

    தங்கையின் குரல் அவளுக்கு புது வாழ்வுப் பாதையைக் காட்டவே சம்மதித்தாள். தங்கை மகளை இருவரும் அன்போடு வளர்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு வயதில் வந்த குழந்தை மீனு இப்போது பன்னிரெண்டு வயதினை எட்டிப் பார்க்கின்ற அழகு நிலாவாக வளர்ந்திருந்தாள். இடைக்கிடையே பெற்ற தாய், தகப்பன் உறவுகளின் தொடர்பினைப் பேண வளர்ப்பு பெற்றோர் மறுக்கவில்லை. இரு குடும்ப உறவுகளின் பாலமாக மீனுவும் வளரத் தொடங்கினாள். வளர்ப்புப் பெற்றோர்கள் தமது வறுமைக்குள்ளும் மீனுவை செல்ல மகளாகவே வளர்த்தார்கள். அவள் தரம் ஏழில் ஊர்ப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தாள்.  
     
    ஒருநாள் பாடசாலைக்குப் போன மகள் வீடு திரும்பவில்லை. பதறித் துடித்துக் கொண்டே பாடசாலைக்கு சென்று விசாரித்ததில்,  பெற்றவர்கள் மீனுவை மீள அழைத்துச் சென்றிருப்பது புரிந்தது. சட்டமும் அவர்களின் கனவினைக் கருக்கியது. உறவுக்கார பெண் என்பதால் நம்பிக்கை வலுக்க சட்டப்படி தத்தெடுக்காத தவறு இன்று பெருந்துயராகி நீண்டிருக்கின்றது. 

    அழுதாள் பல நாட்கள். வளர்த்த பாசம் நெஞ்சை அமுக்கியது. காணும் இடங்களிலெல்லாம் மீனுவின் பிம்பம். உணர்வுகள் கதற நடைப்பிணமானாள் ரம்யா.

    மறக்க முடியுமா அந்தக் குழந்தை முகத்தை. அவளுடன் பறந்தோடிய நாட்களை....

    மீனுவின் குறும்புகளின் சிதறல்கள் அந்த வீடு முழுவதுமாக நிரம்பிக் கிடந்தன.

    தேம்பித் தேம்பி அழுகின்ற மனைவியை அணைத்தார் ராம். சுயநல உலகில் உணர்வுகளுடன் விளையாடுகின்ற மனிதர்கள் இருக்கும்வரை இத்தகைய உளத் துயர்களும் நீள்கின்றன.
    இடையில் வந்த உறவு சிறகினை விரித்ததில் உறவினை இழந்த வளர்ப்புப் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக மாறி தமது துயரத்தைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

    ஜன்ஸி கபூர்  - 27.10.2020


எது சுதந்திரம்

 

 

  • சுதந்திரம் என்பது பிறர் தலையீடின்றி நாம் அனுபவிக்கும் விடுதலையாகும். உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா? எனும் தேடலுக்கான விடை சுதந்திரத்தின் யதார்த்த நிலையை உணர்த்தும்.
    நாம் அனுபவிக்க வேண்டிய சமூக சுதந்திரமானது அரசியல், தனிமனித, தேசிய, சர்வதேச, பொருளாதார, தார்மீக, வீட்டுச் சுதந்திரம் எனப் பல கூறுகளினாலானது.
    யாரிடம் வலிமை இருக்கின்றதோ அங்கே சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த வலிமை நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதன் தான் விரும்புகின்ற செயல்களை எல்லாம் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. கலாசாரம், பண்பாடு போன்ற வேலிகளை இடுவதன் மூலமாக தனிமனித சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
    குடும்பக் கட்டமைப்பில் நாம் உறவுகளால் சூழ்ந்தே காணப்படுகின்றோம். அவர்கள் ஏதோவொரு விதத்தில் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். எனவே ஒரு தனிமனிதனின் வீட்டுச் சுதந்திரம் முழுமையாக அனுபவிக்கப்பட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறே தார்மீக சுதந்திரமும் மீறப்படுகின்றது.
    ஏழை, பணக்காரன் எனும் அந்தஸ்து பொருளாதாரச் சுதந்திர நிலைமையைச் சிதைக்கின்றது.
    சுதந்திர நாட்டின் முக்கிய பண்பு மனித சமத்துவமாகும். நாட்டில் முழுமையான சமத்துவம் பேணப்படுகின்றதா? அவ்வாறாயின் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?
    ஒரு பெண்ணால் இரவில் தனியாக நடமாட முடிகின்றதா?
    வருடாவருடம் சுதந்திரதினம் கொண்டாடுகின்றோம். ஆனால் அடிமைத்தனமான அடித்தள உணர்வினை நாம் அறுப்பதாக இல்லை. வரிகளாலும், எழுத்துக்களாலும் முன்மொழியப்படுகின்ற சுதந்திரம், உணர்வு ரீதியாக இன்னும் செயலுருப் பெறப்படவில்லை என்பதே இன்றைய உண்மை நிலையாகும். சுதந்திரமாக வாழ்கின்றோம் எனும் மாயைக்குள் நாம் நமது சுதந்திரத்தை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
    ஜன்ஸி கபூர் - 26.10.2020
  •  

பாரதியின் புதுமைப் பெண்


 


கடிகாரம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. ஏனோ மனது விறைத்த பிரமை. பெண்ணென்றால் வெறும் இயந்திரம் எனும் நினைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆண்களுள் அவள் கணவன் முத்துவும் ஒருத்தனே எனும்போது ஆத்திரம் உடலுக்குள் அதிர்வைத் தோற்றுவித்தது. அடக்கிக் கொண்டாள் பத்மா. சிறு வயதிலிருந்து பழக்கப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடும் பெண்மைக் குணங்களும் இன்னும் அவளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

குடும்பம் எனும் வண்டியை நகரச் செய்ய இந்நாட்களில் ஆண், பெண் இருவருமே கட்டாயமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டம். பத்மாவும் முத்தைப் போல் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் உழைக்கின்றவள்தான். ஆனால் பெண் என்பதால் பலரும் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் அவளது சுதந்திரத்தை சிறை வைத்துள்ளன. 

கணவனின் ஒத்தாசைகள் கிடைக்காத வீட்டு வேலைகளைச் செய்கின்ற குடும்பத் தலைவி  அவள். இதனால் தினமும் அவளது மேனியில் ஊறும் வியர்வையினளவு அதிகம். குடும்ப வட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓய்வின்றி சுழல்வதால் தன்னைக் கவனிக்கவே நேரமில்லை.

நாட்கள் தேயத் தேய அவள் மனமும் சலித்துப் போனது. பொறுமையும் எல்லை மீறிப் போனது. அன்பால் வழிநடத்த வேண்டிய கணவன் முத்து அதிகாரத்தினைப் பிரயோகித்து அடக்கியாள முயன்றான். சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம்கூட அவளுக்குள் இல்லை.   வேலைத் தளத்திற்கு அவளை ஏற்றி, இறக்குபவன் அவனே. தன்னுடன் வேலை செய்கின்ற பெண்களுடன் கூடக் கதைப்பதை விரும்பாதவன். சுற்றம், நட்பும் மாத்திரமல்ல அவளைத் தேடி உறவினர்கள்கூட வருவதில்லை.

மாத முடிவில் கிடைக்கும் சம்பளம் உடனடியாகவே அவனது வங்கிக் கணக்கிற்கு  சென்றுவிடும். அப்பணத்தில் அவள் கணக்குப் பார்த்தாலோ அல்லது தனது தேவைக்கு எடுத்தாலோ வீட்டில் பெரும் யுத்தமே வெடிக்கும். 

ஐந்து வயது மகள் திவ்வியா அவர்களின் சண்டையைப் பார்த்து பயந்து அழும்போது குழந்தையென்றும் பாராமல் மூர்க்கத்தனமாக அடிப்பான். குழந்தையின் உடலில் காணப்படும் இரணம் அவளது மனதைத் துண்டாக்கும். மகளின் வலியைக் குறைப்பதற்காக கணவனுடன் போராடுவதையே தவிர்த்தாள். ஆனால் அவ்வாழ்வின் நெருக்கடியை விதியென்று ஏற்க முடியவில்லை. அவனும் திருந்தவில்லை. முத்துவின் சந்தேகப் புத்தி அவளை கைபேசிப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் உளவியல் குறைபாடுள்ளவன். சாதாரண உணர்ச்சிகளைக் கூட அனுமதிக்காத வக்கிரபுத்திக்காரன்.

அன்று.....

 இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ளச் சென்ற முத்து நடுநிசி தாண்டியும் வீடு திரும்பவில்லை. பயங்கர இருளைத் திணித்துக் கொண்டிருந்த பீதி அவளை ஆட்கொள்ளவில்லை. மனம்தான் இறுகி விட்டதே.!

நிசப்தம் கரைந்து பொழுதும் விடிந்த பின்னர்கூட, அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. அப்பொழுதான் அவனுக்கு இன்னுமொரு குடும்பமும் இருக்கும் விடயம் அவளுக்குத் தெரிய வந்தது. அவளுக்குள் அருவருப்பு நெளிந்தது. இதுவரை தன் குடும்பம், சமூகம் எனும் கட்டமைப்புக்களுக்காக தனது கவலைகளை அடக்கிக் கொண்டவள் அச்சிறையிலிருந்து வெளியே வரத் துணிந்தாள்.

உத்தியோகம் புருஷ இலட்சணம் என்பார்கள். 

அவளதும் குழந்தையினதும் எதிர்காலத்தினை ஓட்ட அந்த வருமானம் போதும். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக தமது துணிகளை சிறு தோற்பைக்குள் திணித்தவளாக குழந்தையையும் அழைத்துக் கொண்டு முதன் முதலாக வீதிக்குள் காலடி பதித்தாள். மன உணர்வுகள் இலேசான பிரமை.  தான் வாழ்ந்த அவனது வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இத்தனை நாட்கள் வாழ்ந்த அவ்வீடு அந்நியமான உணர்வுக்குள் காட்சியளித்தது. குட்டக் குட்டக் குனிபவர்கள் எல்லாக் காலமும் தோற்பதில்லை.  

சுதந்திரமான வெளிக்குள் பறப்பதைப் போன்ற பிரமைக்குள் வெளியேறினாள். இனி அவளும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான். தனது வாழ்வினை தானே தீர்மானிக்கின்ற, அடக்கியாள்பவர்களை எதிர்க்கின்ற துணிச்சலுள்ள பெண். 

தனது முடிவினை கடிதவரிகளில் எழுதியவளாக, அவனது பார்வைபடும் இடத்தில் வைத்துவிட்டு வெளியேறியவளை உலகம் எக்கோணத்திலும் நோக்கக் கூடும். சம்பிரதாயம்,  பண்பாடு ,அடங்கி வாழ்வதே கௌரவம் போன்ற வெளிப்பூச்சுக்குள் தன்னை ஒளித்து வைக்க இனி அவள் தயாரில்லை.

தெளிந்த மனதுடன்  வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தொலைபுள்ளியில் அவளது தாய் வீடு தெரிய ஆரம்பித்தது.

ஜன்ஸி கபூர் - 16.10.2020