கடிகாரம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. ஏனோ மனது விறைத்த பிரமை. பெண்ணென்றால் வெறும் இயந்திரம் எனும் நினைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆண்களுள் அவள் கணவன் முத்துவும் ஒருத்தனே எனும்போது ஆத்திரம் உடலுக்குள் அதிர்வைத் தோற்றுவித்தது. அடக்கிக் கொண்டாள் பத்மா. சிறு வயதிலிருந்து பழக்கப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடும் பெண்மைக் குணங்களும் இன்னும் அவளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
குடும்பம் எனும் வண்டியை நகரச் செய்ய இந்நாட்களில் ஆண், பெண் இருவருமே கட்டாயமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டம். பத்மாவும் முத்தைப் போல் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் உழைக்கின்றவள்தான். ஆனால் பெண் என்பதால் பலரும் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் அவளது சுதந்திரத்தை சிறை வைத்துள்ளன.
கணவனின் ஒத்தாசைகள் கிடைக்காத வீட்டு வேலைகளைச் செய்கின்ற குடும்பத் தலைவி அவள். இதனால் தினமும் அவளது மேனியில் ஊறும் வியர்வையினளவு அதிகம். குடும்ப வட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓய்வின்றி சுழல்வதால் தன்னைக் கவனிக்கவே நேரமில்லை.
நாட்கள் தேயத் தேய அவள் மனமும் சலித்துப் போனது. பொறுமையும் எல்லை மீறிப் போனது. அன்பால் வழிநடத்த வேண்டிய கணவன் முத்து அதிகாரத்தினைப் பிரயோகித்து அடக்கியாள முயன்றான். சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம்கூட அவளுக்குள் இல்லை. வேலைத் தளத்திற்கு அவளை ஏற்றி, இறக்குபவன் அவனே. தன்னுடன் வேலை செய்கின்ற பெண்களுடன் கூடக் கதைப்பதை விரும்பாதவன். சுற்றம், நட்பும் மாத்திரமல்ல அவளைத் தேடி உறவினர்கள்கூட வருவதில்லை.
மாத முடிவில் கிடைக்கும் சம்பளம் உடனடியாகவே அவனது வங்கிக் கணக்கிற்கு சென்றுவிடும். அப்பணத்தில் அவள் கணக்குப் பார்த்தாலோ அல்லது தனது தேவைக்கு எடுத்தாலோ வீட்டில் பெரும் யுத்தமே வெடிக்கும்.
ஐந்து வயது மகள் திவ்வியா அவர்களின் சண்டையைப் பார்த்து பயந்து அழும்போது குழந்தையென்றும் பாராமல் மூர்க்கத்தனமாக அடிப்பான். குழந்தையின் உடலில் காணப்படும் இரணம் அவளது மனதைத் துண்டாக்கும். மகளின் வலியைக் குறைப்பதற்காக கணவனுடன் போராடுவதையே தவிர்த்தாள். ஆனால் அவ்வாழ்வின் நெருக்கடியை விதியென்று ஏற்க முடியவில்லை. அவனும் திருந்தவில்லை. முத்துவின் சந்தேகப் புத்தி அவளை கைபேசிப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் உளவியல் குறைபாடுள்ளவன். சாதாரண உணர்ச்சிகளைக் கூட அனுமதிக்காத வக்கிரபுத்திக்காரன்.
அன்று.....
இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ளச் சென்ற முத்து நடுநிசி தாண்டியும் வீடு திரும்பவில்லை. பயங்கர இருளைத் திணித்துக் கொண்டிருந்த பீதி அவளை ஆட்கொள்ளவில்லை. மனம்தான் இறுகி விட்டதே.!
நிசப்தம் கரைந்து பொழுதும் விடிந்த பின்னர்கூட, அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. அப்பொழுதான் அவனுக்கு இன்னுமொரு குடும்பமும் இருக்கும் விடயம் அவளுக்குத் தெரிய வந்தது. அவளுக்குள் அருவருப்பு நெளிந்தது. இதுவரை தன் குடும்பம், சமூகம் எனும் கட்டமைப்புக்களுக்காக தனது கவலைகளை அடக்கிக் கொண்டவள் அச்சிறையிலிருந்து வெளியே வரத் துணிந்தாள்.
உத்தியோகம் புருஷ இலட்சணம் என்பார்கள்.
அவளதும் குழந்தையினதும் எதிர்காலத்தினை ஓட்ட அந்த வருமானம் போதும். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக தமது துணிகளை சிறு தோற்பைக்குள் திணித்தவளாக குழந்தையையும் அழைத்துக் கொண்டு முதன் முதலாக வீதிக்குள் காலடி பதித்தாள். மன உணர்வுகள் இலேசான பிரமை. தான் வாழ்ந்த அவனது வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இத்தனை நாட்கள் வாழ்ந்த அவ்வீடு அந்நியமான உணர்வுக்குள் காட்சியளித்தது. குட்டக் குட்டக் குனிபவர்கள் எல்லாக் காலமும் தோற்பதில்லை.
சுதந்திரமான வெளிக்குள் பறப்பதைப் போன்ற பிரமைக்குள் வெளியேறினாள். இனி அவளும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான். தனது வாழ்வினை தானே தீர்மானிக்கின்ற, அடக்கியாள்பவர்களை எதிர்க்கின்ற துணிச்சலுள்ள பெண்.
தனது முடிவினை கடிதவரிகளில் எழுதியவளாக, அவனது பார்வைபடும் இடத்தில் வைத்துவிட்டு வெளியேறியவளை உலகம் எக்கோணத்திலும் நோக்கக் கூடும். சம்பிரதாயம், பண்பாடு ,அடங்கி வாழ்வதே கௌரவம் போன்ற வெளிப்பூச்சுக்குள் தன்னை ஒளித்து வைக்க இனி அவள் தயாரில்லை.
தெளிந்த மனதுடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தொலைபுள்ளியில் அவளது தாய் வீடு தெரிய ஆரம்பித்தது.
ஜன்ஸி கபூர் - 16.10.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!