About Me

2021/04/15

மறக்க முடியுமா

 

  • கடிகார முட்கள் மெதுவாக நகர்வதைப் போன்ற பிரமை. எவ்வளவு நேரம்தான் ரம்யாவால் விட்டத்தை வெறித்துப் பார்க்க முடியும்.

    "தாயீ........வெறும் வயித்தோட இருக்கக்கூடாது. ஏதாவது வாய் நனையம்மா. தேத்தண்ணீ ஆறப் போவுது"

    தாயின் பரிவுடன் அவளை ஆறுதல்படுத்தும் கணவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீரால் நிறைந்திருக்கின்ற விழிகள் வெடித்து விடுமோவென்ற பிரமை. அடக்க முடியவில்லை. நெஞ்சம் தேம்பியது.

    மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ராம். அண்மையில் நடந்து முடிந்த அந்த வலி தரும் சம்பவம் கண்முன்னால் விரிந்தது.

    ராம் குடும்பத்தின் தலைமகன். சிறுவயதிலேயே அப்பா தவறிப் போனதால் அவனே தனது குடும்பத்தைக் காக்கும் தூணானான். அவனுக்கு பின்னர் காத்திருந்த நான்கு குமர்ப்பிள்ளைகளையும் கரையேற்றும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அண்ணனாக அல்லாமல் தந்தையாகிப் பாரம் சுமந்தான். தனது இளமைக் காலம் அனைத்தையும் வெளிநாட்டில் கரைத்து உழைத்தான். பாலைவன வெம்மை அவனது வனப்பையெல்லாம் சுரண்ட நான்கு குமர்களையும் கரையேற்றியவனாக நாடு திரும்புவதற்குள் நாற்பது வயதையும் தாண்டிவிட்டான். வயோதிபத் தாயை நல்ல தனயனாகிக் காத்தான். தனது எதிர்காலம் அவனுக்கு மறந்தே போனது. நாளாந்த வாழ்க்கைச் செலவினைச் சமாளிப்பதற்காக முச்சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வாடகைக்காக ஓட்டத் தொடங்கினான். கிடைக்கும் வருமானம் அவர்களின் அன்றாட வாழ்வைச் சமாளிக்க உதவியது.

    ஆனாலும் அவனது தாயார் அவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போராடி ஈற்றில் முதிர்கன்னியாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்ற ரம்யாவைத் தேடிக் கண்டுபிடித்தார். அவனுக்கேற்ற மனைவி. பெரியவர்களின் ஆசியுடன் அவளைக் கரம் பற்றினான்.

    நாட்களும் வேகமாக ஓடின. குழந்தையின்மை அவர்களுக்குப் பெருங் குறையாகத் தெரியவில்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாகக் குழந்தையாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரம்தான், ரம்யாவின் சித்தப்பா மகள் அவள் வாழ்வுக்குள் குறுக்கிட்டாள்.

    "அக்கா நாலு பொட்டப் புள்ளா தொடர்ந்து பொறந்திருச்சி. சமாளிக்க முடியல. உனக்குத் தத்து தாரேன் வளர்க்கிறியாக்கா"

    தங்கையின் குரல் அவளுக்கு புது வாழ்வுப் பாதையைக் காட்டவே சம்மதித்தாள். தங்கை மகளை இருவரும் அன்போடு வளர்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு வயதில் வந்த குழந்தை மீனு இப்போது பன்னிரெண்டு வயதினை எட்டிப் பார்க்கின்ற அழகு நிலாவாக வளர்ந்திருந்தாள். இடைக்கிடையே பெற்ற தாய், தகப்பன் உறவுகளின் தொடர்பினைப் பேண வளர்ப்பு பெற்றோர் மறுக்கவில்லை. இரு குடும்ப உறவுகளின் பாலமாக மீனுவும் வளரத் தொடங்கினாள். வளர்ப்புப் பெற்றோர்கள் தமது வறுமைக்குள்ளும் மீனுவை செல்ல மகளாகவே வளர்த்தார்கள். அவள் தரம் ஏழில் ஊர்ப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தாள்.  
     
    ஒருநாள் பாடசாலைக்குப் போன மகள் வீடு திரும்பவில்லை. பதறித் துடித்துக் கொண்டே பாடசாலைக்கு சென்று விசாரித்ததில்,  பெற்றவர்கள் மீனுவை மீள அழைத்துச் சென்றிருப்பது புரிந்தது. சட்டமும் அவர்களின் கனவினைக் கருக்கியது. உறவுக்கார பெண் என்பதால் நம்பிக்கை வலுக்க சட்டப்படி தத்தெடுக்காத தவறு இன்று பெருந்துயராகி நீண்டிருக்கின்றது. 

    அழுதாள் பல நாட்கள். வளர்த்த பாசம் நெஞ்சை அமுக்கியது. காணும் இடங்களிலெல்லாம் மீனுவின் பிம்பம். உணர்வுகள் கதற நடைப்பிணமானாள் ரம்யா.

    மறக்க முடியுமா அந்தக் குழந்தை முகத்தை. அவளுடன் பறந்தோடிய நாட்களை....

    மீனுவின் குறும்புகளின் சிதறல்கள் அந்த வீடு முழுவதுமாக நிரம்பிக் கிடந்தன.

    தேம்பித் தேம்பி அழுகின்ற மனைவியை அணைத்தார் ராம். சுயநல உலகில் உணர்வுகளுடன் விளையாடுகின்ற மனிதர்கள் இருக்கும்வரை இத்தகைய உளத் துயர்களும் நீள்கின்றன.
    இடையில் வந்த உறவு சிறகினை விரித்ததில் உறவினை இழந்த வளர்ப்புப் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக மாறி தமது துயரத்தைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

    ஜன்ஸி கபூர்  - 27.10.2020


1 comment:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!