About Me

2021/04/21

வேட(ம்)ந் தாங்கல் பறவைகள்



தரைக்குள் பூக்கின்ற முகமூடி மாந்தர்கள்/ 

விரைகின்ற நிமிடங்களுக்குள் கரைக்கின்றனர் வஞ்சங்களை/ 

அஞ்சாரே பாவக் கறைகளைப் பூசிடவே/

கொஞ்சிடுவார் துரோகங்ளும் விழிகளில் புன்னகைக்க/


அழகிய ஆன்மாவுக்குள் நெளிகின்ற புழுக்களால்/

அணைத்திடுவார் பாசத்துடன் காரிய வெற்றிக்கே/

தழுவிடும் மனங்களில்  தந்திரமாக வீழ்ந்தே/

பாழும் கிணற்றில் பக்குவமாக வீழ்ததிடுவார்/


மெய்க்குள் பொய்களை நிரப்பி வாழ்ந்தே/

பைக்குள் பணத்தினை நிரப்பிடுவார் வேடமிட்டே/

பல முகத்தோடு  பறந்திடும் பறவைகளாகி/

கலந்திடுவார் ஏமாற்றங்களை ஏற்ற தருணத்திலே/


மதியால்  விதியை அழகூட்டி களிப்புறுவார்/

சதியையும் தீட்டுவார் சந்தோசம் காட்டியே/ 

உறவாகி விரிக்கும் சிறகுக்குள் அக்கினியை/

உரசிடுவார் வேட(ம்)ந் தாங்கல் பறவைகளாகி/


ஜன்ஸி கபூர் 

 

முருங்கை


விரும்பி உண்ணும் முருங்கைக்குள் மருத்துவமே

அரும்பிய இலைகளும் தருமே ஊட்டத்தை

குருதியைச் சுத்திகரித்தே சுவாசத்தைச் சீராக்குமே

முகப்பருவினை நீக்கியே விரட்டுமே சூட்டினை

முருங்கையின் வலிமைக்குள்; சிறுநீரகமும் பலமே

மலட்டினையும் விரட்டி நலமாக்கும் வாழ்வினை

மலச்சிக்கல் நீங்க இதமாகும் உடலும்

அழகைப் பேணிட முடியும் நீளுமே

சளியைக் கரைத்து சந்தோசம் நிரப்புமே

சத்துள்ள இலையும் சொத்தே ஆரோக்கியத்திற்கு

வீட்டினில் வளர்த்தே பயனடைவோம் தினமும்

சித்த வைத்தியத்தால் சித்தமும் குளிர்வோம்


ஜன்ஸி கபூர்  


 


கயல்விழிப் பார்வையாலே கைதுசெய்து போகாதே

 

கயல்விழிப் பார்வையாலே கைதுசெய்து போகாதே/
புயலெனச் சுழற்றும் உணர்ச்சிக்குள் வீழ்த்தாதே/
மயிலுன்னைத் தழுவவே துடிக்கிறதே ஆசைகள்/
துயிலுக்குள் வீழ்ந்திடவா கனவுக்குள்  ரசித்திட/

செவ்விதழ் சிந்தும் தேனைச் சுவைத்திட/
சிறகு விரிக்கின்றேன் உன்னுள் படர்ந்திட/
திரை விரிக்கின்றாயே வெட்கத்துக்குள் மறைந்து/
தித்திப்பின் சுகத்தில் மூழ்கிடவா சுகமாக/

வெண்சங்குக் கழுத்தைத் தழுவிடவா மாலையாகி/
விரல்கள் தினமும்உன்னை மீட்டிடவா/
வெண்பனித் தூறலால் எனக்குள் பூத்தூவும்/
சின்னத் தாமரையே சிலிர்க்குதே தேகமே/

இருதயத் துடிப்பினுள் இரகசியமாக நுழைந்தவளே/
இரசிக்கின்றேனே இன்பம் உரசும் உன்னுறவை/
கொலுசின் ஒலிக்குள் கொழுவுதடி தவிப்புக்கள்/
கொஞ்சுகின்றாய் பார்வையாலே தஞ்சமடி உன்னிழலில்/

ஜன்ஸி கபூர்  

 



 

பிஞ்சுகளின் தேடல்

 

நெஞ்சத்தின் வேதனை கிழிக்கின்ற மனதும்/
அஞ்சுகின்றதே தினமும் வலியினைக் கண்டே/
பிஞ்சின் கனவுகளைச் சிதைக்கின்ற மானிடர்களின்/
வெஞ்சமரில் வேகுதே விளையாட்டுப் பருவம்/

துளிர்க்கின்ற உணர்வுகளைப் புரிந்திடாப் பெற்றோர்கள்/
அளிக்கின்ற சுமைகளில் கருகுகின்றதே ஆசைகள்/
உளியாகும் விரல்கள் செதுக்கின்ற புதுமைகள்/
ஊக்கம் காணாமலே ஊமையாகி முடங்குதே/

படிக்கின்ற வயதில் வடிக்கின்ற கண்ணீர்/
படியுதே வாழ்வினில் முட் சுவடுகளாக/
சிறகுகளை நனைக்கும் உழைப்பின் வியர்வையால்/
சிறார்களின் எதிர்காலம் விடியலின்றி இருளாகுதே/

வறுமையும் வாட்டமும் முடிவில்லாமல் தொடர்கையில்/
வழி தெரியாப் பயணத்தில் பாதங்கள்/
அழிகின்ற வண்ணங்களாய் ஆகுகின்றதே இன்பங்கள்/
அனலுக்குள் தவிக்கின்றதே தேடல் பாதைகள்/

ஜன்ஸி கபூர்