About Me

2021/06/06

விதியின் கோர முகம்


மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிட வாழ்வும்

விண்ணில் தங்குகின்ற நிரந்தர வாழ்விற்குத் தானோ?

எண்ணற்ற கனவுகளும், ஆசைகளும், ஏக்கங்களும்

புண்ணாகி ரணத்துடன் புதையுண்டு போவதுதான் விதியா?

ஆம்...

விதியின் முகம் இயற்கை அழிவாகி, மண்ணுக்குள் இழுத்துத் தள்ளிப் புதைத்த, மண்சரிவின் கோரப் பிடிக்குள் நேற்று சிக்குண்ட ஒரு குடும்பத்தின் கதையை இன்று என் விரல்கள் கண்ணீர் நனைத்து எழுதுகின்றன.

ஓன்றா.........இரண்டா...............

எத்தனை உயிர்கள் ஊனமாக, ஊமையாக இயற்கை அழிவுக்குள் தம் முகம் புதைக்கும் கோரங்களின் அகோரங்கள் நம் செவியை அவ்வவ்போது அதிரச் செய்கின்றன.

யாரை யார் குற்றம் சொல்வது?

இயற்கையை அழிக்க, இயற்கை தன் சினத்தைக் கொட்ட, இதயங்கள் கிழிந்து போகின்றன. குருதியின் வெந்தணலில் மூச்சுக்கள் கருகுகின்றன.

வெள்ளம், புயல், மண்சரிவு, சுனாமி என, இயற்கை அனர்த்தங்கள் அவ்வவ்போது உயிர்களை பலி கொண்டு வருகின்றன. இவ் அனர்த்தங்களின்போது காவு கொள்ளப்படுகின்ற உயிர்களின் இழப்புக்களை பார்க்கையில், வெளியே நிற்கின்ற வெளித்தரப்பினருக்கே மனக்கஷ்டங்கள் ஏற்படுகையில், உண்மையில் உறவுகளின் வலிக்கு வார்த்தைகள் ஏதுமில்லைத்தான்.

நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என நமக்கு முன்கூட்டியே அறிந்து கொள்ளுகின்ற சக்தியிருந்திருந்தால், ஒவ்வொருவரும் அதற்கேற்ப தம்மை தயார்படுத்துவார்களோ என்னவோ!...

தாய், தந்தை, மகன், மகள் என நான்கு உயிர்கள், குடும்ப உறவுகள் நேற்று 05.06.2021 ஆம் திகதி   இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிர்நீத்த செய்தியினைக் கேட்கின்றபோது இனம், மதம், சாதி எனும் புறவேறுபாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்து, மனிதாபிமானமுள்ள நெஞ்சங்கள் கண்ணீர் சிந்தும்.

மகள் ஆசிரியை. கல்விப் பணிபுரிந்த அந்த சகோதரியை மண் விழுங்கியபோது எத்தனை மாணவ நெஞ்சங்கள் கதறியிருப்பார்கள். எத்தனையோ ஆசைகள், கனவுகளைச் சுமந்து எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம் உள்ளங்கள் தமக்கு நேரப் போகின்ற அனர்த்தங்களை அறிந்திருந்தால் உதடுகளில் விரிகின்ற அந்தப் புன்னகை மலர்ந்திருக்குமா என்ன?

மண்சரிவு நடைபெற்ற பின்னர், இருந்த வீடு முற்றாக மறைந்து விட்டது என்பது வேதனைதான். அதிலும் புதையுண்டவர்களை எங்கு தேடுவது? அத்தடுமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவர்கள் வளர்த்த பாச நாய்தான்;. பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல  அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து, அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது. ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

வாழ்க்கை அற்பமானது, சொற்பமானது ஆனால் நாம் அதை உணர்வதாக இல்லை. ஒவ்வொரு மரணங்களும் நமக்கு உணர்த்திச் செல்கின்ற தத்துவங்கள் அவைதானே!

ஜன்ஸி கபூர் - 06.05.2021

2021/06/05

உன்னில் என்னைக் காண்கின்றேன்.

 

இவ்வுலகின் அற்புத சக்தியாக காதல் இருப்பதால்தான்   தமக்கிடையேயுள்ள எந்த வேறுபாடுகளையும் அது கண்டுகொள்ளாமல் அன்பை நோக்கியே பயணிக்கின்றது. உண்மையான அன்பு இதயங்களாக வாழும் இந்த சனா – தவூத் தம்பதியினரை எனக்குப் பிடித்ததால்  அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன். நன்றி பீபீசி - தமிழ்

தவுத் சித்திக்கி  சனா முஷ்டாக் இருவரும் உறவினர்கள். சந்தித்த சந்திப்பு காதலாகப் பூக்க இருவரும் காதல் வானில் பறந்து திரிந்தார்கள். ஒரு வருடக் காதல் மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஒன்றாகவே இருவரும் வெளியே சுற்றுமளவிற்கு  காதலும் உறுதி பெற்றிருந்தது. இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை எனும் அளவிற்கு மனதாள் வலுப் பெற்றார்கள்.

தவுத் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரம் காரணமாக ஏற்பட்ட விபத்தால் அவனது இரண்டு கைகளும் காலும் பறிபோனது. எட்டு மணி நேர சத்திரசிகிச்சை உடல் உறுப்புக்களை இழக்கச் செய்தாலும் உயிரைக் காப்பாற்றியது. 

ஆனால் உள்ளங்கள் சம்பந்தப்பட்ட காதல் புறத்தோற்றங்களால் மாறுபடுமா? செய்தி கிடைத்ததும் சனா கலங்கியவாறு ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். கண்ணீரில்  கரைந்த காதலால் அந்த வைத்தியசாலையும் வலி சுமந்தது.

தாவுத் நினைவு திரும்பவில்லை. ஆனாலும் சனா அவனது காதினருகே போய் முணுமுணுத்தாள். அந்த ஒலிச் சப்தம் அவனது உணர்வுகளை மெல்ல வருடியிருக்க வேண்டும். கண்களைத் திறந்தான். பூக்களாக மலர்ந்திருந்தாள் காதலி சனா.

தவுத்தோ அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கவேயில்லை. இந்த விபத்தால் அவள் தன்னை வெறுப்பாள் என்றே எண்ணினான். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். ஊனமுற்ற தன்னுடன் அவளை வாழக் கட்டாயப்படுத்துவது தனது அன்புக்குப் பொருத்தமில்லை என்றே எண்ணினான். அவள் பிரிவிற்கேற்ப வாழ தன்னை தயார்படுத்த நினைத்திருந்தான். 

ஆனால் அவள் அன்பு அவனைக் கைவிடவில்லை. அவனுடன் கூடவேயிருப்பதாக ஆறுதலளித்தாள். அவனது இழந்த உறுப்புகளுக்குப் பதிலாக தனது கை கால்கள் இருப்பதாகவும் அவற்றால் உதவுவதாகவும் உணர்வுபூர்வமாகக் கூறினாள். 

தவுத்திற்கு சனாவை கஷ்டப்படுத்த விருப்பமில்லை என்பதால் அந்த திருமணத்திற்கு அவன் சம்மதிக்கவில்லை. தம் பிள்ளைகளின் வருங்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசைகளும் கனவுகளும் இருக்கும்தானே.  உன் பெற்றோர் நன்மைக்குத்தானே சொல்கின்றார்கள். அதனால் பெற்றோர் விருப்பப்படி வாழ்க்கைத் தெரிவு செய்யும்படி கூறினான். 

விபத்தின் பின்னர் சனாவின் பெற்றோரும் இக் காதலை விரும்பவில்லை.     அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதும். அவள்; வீட்டை விட்டு வெளியேறி தனது மாமி; வீட்டில் தங்கியிருந்;தாள். தவுத்துடன் தொடர்பு கொண்டாள். உன்னுடன் வாழ்வதற்காக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கின்றேன் ஏற்றுக் கொள் என்றாள். அவளது விருப்பத்திற்கு தவுத் ஆரம்பத்தில் உடன்படாவிடினும் ஈற்றில் அவளது அன்பின் பலம்; வென்றது. தனது வாழ்க்கை அவனுடன்தான் என அவள் எடுத்த முடிவு உயிர் பெற்றது. தவுத் பெற்றோர் ஆதரவுடன் அவனைத் திருமணம் செய்தாள்.

அடுத்தவர் உதவியின்றி நம் வேலைகளை நாமே செய்வது பெரும் அதிஷ்டம்தானே. அவனோ தான் எப்பொழுதும் பிறரை நாடி இருப்பதை எண்ணிக் கலங்கி நிற்கும்போதெல்லாம் மனைவி அவனை ஆறுதல்படுத்துகின்றாள். இறைவன் தன்னை இப்படிக் கலங்க வைத்ததை எண்ணி வேதனைப்படும்போதெல்லாம் சனா   உணர்வுகளால் தன்னம்பிக்கையூட்டுகின்றாள். உற்சாகப்படுத்துகின்றாள்.  அவனுக்காகவே அவள் பிறந்திருப்பதாக நேசத்தைப் புதுப்பிக்கின்றாள். ஒரு தாயாக தாரமாக மாறி அவனை தன் உள்ளத்தில் பதிவேற்றி வாழ்ந்து வருகின்றாள்.

 அவள் தனது சோகத்தை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே காட்டிக் கொள்வாள்.

ஆனாலும் அவனது மனம் அவளுக்கு தான் பாரமாக இருப்பதை ஏற்கவில்லை. அவளுக்காக தானும் வாழ வேண்டுமெனும் நோக்கில் செயற்கை அவயங்களைப் பொருத்த எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் இப்புரிதலில் காதல் தினமும் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் அவளுக்குள் இன்னுமொரு வலி. அவளது பெற்றோர் தவுத்தை இனனும்; மருமகனாக ஏற்கவில்லை.

காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை. பணம் பதவி அந்தஸ்து என மாய வலைக்குள் சிக்குண்டு அல்லல்படும் பலரின் மத்தியில் இவர்களது காதல் நெஞ்சம் நமக்கு தடைகளையும் வலியினையும் கடந்து வாழ கற்றுத் தருகின்றது.

சோர்வல்ல வாழ்வு. சோகத்தையும் தூசாக்கி துணிவுடன் கடந்து போக கற்றுத் தருவது. இக்காதல் தம்பதியினரின் வாழ்க்கை வளம்பெற நாமும் வாழ்த்துவோம்.

ஜன்ஸி கபூர் - 05.06.2021

  

2021/06/02

இட்லி பாட்டி

நாகரீகத்தில் மையங் கொண்ட நவ உலகத்தில் நாலு சுவர்களுக்குள் வாழ்கின்ற பல நல்லுள்ளங்களைப் பற்றிய பார்வைகள் பலருக்குப் புரிவதில்லைதான். எந்தவொரு செயலும் நேர்மையாகச் செய்கின்றபோது நாம் பிறரின் நேசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றோம்.

உணர்வுகளால் ஆளப்படுகின்ற மனித மனங்கள் ஆளாளுக்கு வேறுபடுகின்றன. இப்படித்தான் வாழ வேண்டுமென சிலரும், எப்படியும் வாழலாம் என சிலரும் தமது வாழ்வை அடுத்தவர் பார்வைக்கு நகர்த்துகின்றார்கள்.

அடுத்தவர்களைச் சுரண்டி தனது பணப் பையை நிரப்புகின்ற பலரின் மத்தியில் இவரின் தயாள குணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவர் ....இட்லி பாட்டி..........என செல்லமாக அழைப்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலயாம்பாளையம் எனும் பசும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். நாற்பது வருடங்களாக தனது வியாபாரமாக இட்லி சுட்டு விற்கின்றார். அன்று முதன் முதலாக இட்லி விற்ற விலையான ஒரு ரூபாவையே இன்றும்  இவர் பெற்றுக் கொள்கின்றார்.

இன்றைய விலைவாசியில், உழுந்து விற்கின்ற விலையில் ஒரு ரூபாவிற்கு இட்லியா?

கேட்பவர்கள் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்தும்போதும், அவரின் மெல்லிய புன்னகை உண்மையை ஒத்துக் கொள்கின்றது.

சுருங்கிய தளர்ந்த தேகம். இருந்தும் அவர் தளர்ந்து விடவில்லை. தன் வாழ்வையும், இட்லி வியாபாரத்தையும் நேர்த்தியாகவே கொண்டு செல்கின்றார். 

இன்றைய உலகியல் வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு ஆசைகளே காரணமாக அமைகின்றன. ஆனால் இப்பாட்டியின் ஆசையற்ற நடைமுறை வாழ்வியல் பலரின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

செய்கின்ற தொழில் தெய்வம் என்பார்கள். ஆனால் இப்பாட்டியின் தயாள குணத்தால் பலர் இவரைத் தெய்வமாகப் பார்க்கின்றார்கள்.

பசியுடன் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு ஆவி பறக்க பரிமாறும் இட்லிச் சுவையில் அன்பும் கலந்திருப்பதாக பசியாறுபவர்கள் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார்கள்.

சூரியன் முற்றத்தை முத்தமிடுகின்ற அந்த அதிகாலைப் பொழுதிலே அடுப்பில் விறகேற்றி பசியெனும் இருளை விரட்டுகின்ற பாட்டியின் கடுமையான உழைப்பால் பல வயிறுகள் சுவை காண்கின்றன.

கையில் காசு இல்லாதவர்களுக்கு கூட அழைத்து இட்லி பரிமாறுகின்றார். காசு கையில வரும்போது தரும்படி கூறுகின்ற அவரின் அன்பு மனம் கொடுத்த இட்லிகளை கணக்குப் பார்த்து கடதாசிகளில் குறித்து வைப்பதில்லை.

முதுமையின் தோற்றத்தை உடல் பெற்றாலும்கூட சுறுசுறுப்பாக தானே உழைத்து தன்னைக் காக்கின்ற உழைப்பும் அடுத்தவர்களை மனிதாபிமானமாக நோக்கும் பண்பும் இப்பாட்டியின் சிறப்பான அடையாளங்கள்.

உண்ண வருகின்றவர்களுக்கு பாட்டியின் அன்பான உபசரிப்பு  வயிற்றுடன் மனதையும் நிறைக்கின்றது.

பசுமையான மனதின் பிரதிபலிப்புத்தானே இது!

தேடி வருகின்ற பசியாளிக்கு இல்லையென்று சொல்லாமல் பசியாற்றுகின்றார். கொடுக்கும் இட்லிக்கு கணக்குப் பார்ப்பதில்லை. கொடுக்கும் பணத்தை மனதாரப் பெற்றுக் கொள்கின்றார்.

பசித்தவன்  புசிக்க இலவசமாக உணவளிக்கும் தர்மத்தையும் செய்கின்றார்.

கலப்பமிடமில்லாத சுவையான இட்லி இவரது கைப் பக்குவம்தான்.

சுவையான இட்லியென உண்பவர் வாயாரப் புகழும் வார்த்தைகள் இவரின் மனதை  நிறைக்கின்றன.

இணையத்தில் கண்டெடுத்த பாட்டியின் இட்லிகள் எனது வரிகளில் இங்கு பரிமாறப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


MV X- Press Pearl

                                       

தற்போது இலங்கையில் பேசப்படுகின்ற விடயம் MV X- Press Pearl  எனும் சிங்கப்பூர் கப்பலைப் பற்றியதாகவே இருக்கின்றது. இது சுமார் 186 மீற்றர் நீளமானது. இது 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இயக்கப்பட்டது. இக்கப்பல்   எக்ஸ் பிரஸ் பீடர் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 
 
இது போர்ட் கிளாங் துறைமுகத்திலிருந்து (மலேசியாவிலிருந்து) சிங்கப்பூர் வழியாக ஜெபல் அலி (UAE) மற்றும் போர்ட் ஹமாத் (கத்தார்), துபாய் வரை மத்திய கிழக்கு சேவைக் கப்பலாக அனுப்பப்பட்டது. 

இது 30 நாள் சுற்றுப் பயணத்தின் பின்னர், திரும்புகையில் ஹசீரா (இந்தியா) கொழும்பு (இலங்கை) வழியாக மீண்டும் மலேசியாவை சென்றடைய வேண்டும். 

நைத்திரிக்கமிலத்தின் கொள்கலன் கசிவு காரணமாக கப்பலை கத்தார், இந்தியா துறைமுகத்தில் நிறுத்த முயற்சித்தபோது, கசிகின்ற அமிலத்தைப் பராமரிக்க வசதியில்லை எனும் காரணத்தினால் குறித்த கொள்கலனை இறக்குவதற்கு அனுமதி கிடைக்காததால் கப்பலை கொழும்பு வழியாக செலுத்தியதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கப்பல் 25 தொன் நைத்திரிக்கமிலம், பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் நிறைந்த 1468 கொள்கலன்களுடன் 2021 மே 2 ஆம் திகதி இந்தியா ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, மே 19 ஆம் திகதி கொழும்பை அடைந்தது. 

மே 20 கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கே 17.6 கி.மீ தூரத்தில் கப்பல் இருக்கையில் தீ பிடித்தது. இக்கப்பலில் காணப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த இரசாயனப் பொருட்களின் தாக்கத்தினாலேயே இத்தீ பரவல் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தீப்பரவல் அதிகரித்தது. தீப்பற்றிய கப்பலில், கப்பலின் உரிமையாளரும் ஆபரேட்டருமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் உள்ளிட்ட பன்னிரெண்டு பணிக்குழுவினர் மற்றும் 12 தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 25 பேர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

21 மே 2021 அன்று, இலங்கை கடற்படை, இரண்டு கடல் ரோந்து கப்பல்கள்,  சாகரா மற்றும் சிந்துராலா போன்ற கடற்படைக் கப்பல்களையும், தீயணைப்பு மீட்புப் பணிகளில் ஒரு விமானத்தையும் அனுப்பியது.  


மே 22 அன்று, இலங்கை விமானப்படை மீட்புப் பணிகளில் பெல் 212 ஹெலிகாப்டரை நிறுத்தியது.
  
அமிலக் கசிவினில் ஏற்பட்ட   கட்டுப்படுத்தப்பட முடியாத தீயின் காரணமாக மே 25 ஆம் திகதி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பொழுது இரு இந்தியக் குழு வீரர்கள் காயமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர். 

கொள்கலன்கள் கடலில் விழுந்தன.  தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு இழுபறி மற்றும் டோர்னியர் கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா அனுப்பியது. 
 
மே 29 அன்று, எக்ஸ்-பிரஸ் முத்தில்  தீப்பிழம்புகள் குறைந்தாலும், கப்பல் புகைத்துக் கொண்டேயிருந்தது. கடல் பாதுகாப்பு ஆணையத்தால் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். எண்ணெய்க் கசிவுடன் கலக்கப்பட்ட கடல் சுற்றுப்புறம் மாசடைந்துள்ளதால் நைத்திரிக் ஒட்சைட்டு வளியுடன் கலந்து அமில மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரிகள் இறந்துள்ளனர். குறித்த பகுதிக்கு மீனவர்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரையொதுங்கின்ற பொருட்களை கடற்படையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்துகின்றனர். 


 மே 27, 26,000 கிலோ எடையுள்ள மூன்று பிளாஸ்ரிக் கொள்கலன்களிலிருந்து    பிளாஸ்ரிக் பொருட்கள் கடலில் சிந்தப்பட்டு கரையொதுங்கியுள்ளன. இத்தகைய மாசுக்கள் கடலின் அழகை குறைத்துள்ளன. இப்பேரழிவால் மில்லியன் கணக்கான கடல்வாழ் உயிரினங்களும், பவளப்பாறைகளும் அழிந்துள்ளன என்பது வலி தருகின்ற விடயமாகின்றன. ஒரு பவளப்பாறை  மூன்று அங்குலம் வளர ஒரு வருடம் தேவை. அப்படியாயின் இப்பவளப்பாறைகள் மீள உருப்பெற இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ?

                               

ஐரோப்பாவிலிருந்து  தருவிக்கப்பட்ட தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட இலங்கை அரசின் கடற்படை, விமானப்படையினரின் பெரும் முயற்சியின் பின்னர் கப்பலின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


கொழும்பு துறைமுகத்திலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கப்பலானது இழுத்துச் செல்லப்பட்டது. சேதத்தின் தன்மை மற்றும் கடல் வளத்தின் பாதிப்பு பற்றி தற்போது ஆராயப்படுகின்றது. கடலின் மரணம், இயற்கை வள அழிவுக்கான சோகம். கப்பலிருந்து பெறப்படுகின்ற கறுப்பு பெட்டியின் தகவல்கள் விசாரணைகளுக்கு உதவக்கூடும்.

தற்போது இக்கப்பல் கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடுக்கடலில் விடப்படவுள்ளது.

பேரழிவின் அளவு மற்றும் இலங்கை கடலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முறையான சுற்றுச்சூழல் சேத மதிப்பீட்டைப் பெற குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று தேசிய திட்டத்தின் நிறுவனர் டாக்டர் அஜந்தா  கூறியுள்ளார்.


தற்போது கப்பலில் இருந்து 80 கிலோமீட்டர் பகுதியில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

கப்பலிலிருந்து வெளியாகியுள்ள மாசானது கற்பிட்டியிலிருந்து காலி கடல் போன்ற நீண்ட தூரங்களுக்கு பரவி, கடல்வளத்தை சேதப்படுத்தியுள்ளது. எதிர்பாராமல் ஏற்படுகின்ற இத்தகைய விபத்துக்களால் இயற்கை வளங்கள் மட்டுமல்ல, நாமும் தீதால் சூழப்படுகின்றோம்.

ஜன்ஸி கபூர் - 02.06.2021