About Me

2021/06/02

இட்லி பாட்டி

நாகரீகத்தில் மையங் கொண்ட நவ உலகத்தில் நாலு சுவர்களுக்குள் வாழ்கின்ற பல நல்லுள்ளங்களைப் பற்றிய பார்வைகள் பலருக்குப் புரிவதில்லைதான். எந்தவொரு செயலும் நேர்மையாகச் செய்கின்றபோது நாம் பிறரின் நேசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றோம்.

உணர்வுகளால் ஆளப்படுகின்ற மனித மனங்கள் ஆளாளுக்கு வேறுபடுகின்றன. இப்படித்தான் வாழ வேண்டுமென சிலரும், எப்படியும் வாழலாம் என சிலரும் தமது வாழ்வை அடுத்தவர் பார்வைக்கு நகர்த்துகின்றார்கள்.

அடுத்தவர்களைச் சுரண்டி தனது பணப் பையை நிரப்புகின்ற பலரின் மத்தியில் இவரின் தயாள குணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவர் ....இட்லி பாட்டி..........என செல்லமாக அழைப்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலயாம்பாளையம் எனும் பசும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். நாற்பது வருடங்களாக தனது வியாபாரமாக இட்லி சுட்டு விற்கின்றார். அன்று முதன் முதலாக இட்லி விற்ற விலையான ஒரு ரூபாவையே இன்றும்  இவர் பெற்றுக் கொள்கின்றார்.

இன்றைய விலைவாசியில், உழுந்து விற்கின்ற விலையில் ஒரு ரூபாவிற்கு இட்லியா?

கேட்பவர்கள் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்தும்போதும், அவரின் மெல்லிய புன்னகை உண்மையை ஒத்துக் கொள்கின்றது.

சுருங்கிய தளர்ந்த தேகம். இருந்தும் அவர் தளர்ந்து விடவில்லை. தன் வாழ்வையும், இட்லி வியாபாரத்தையும் நேர்த்தியாகவே கொண்டு செல்கின்றார். 

இன்றைய உலகியல் வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு ஆசைகளே காரணமாக அமைகின்றன. ஆனால் இப்பாட்டியின் ஆசையற்ற நடைமுறை வாழ்வியல் பலரின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

செய்கின்ற தொழில் தெய்வம் என்பார்கள். ஆனால் இப்பாட்டியின் தயாள குணத்தால் பலர் இவரைத் தெய்வமாகப் பார்க்கின்றார்கள்.

பசியுடன் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு ஆவி பறக்க பரிமாறும் இட்லிச் சுவையில் அன்பும் கலந்திருப்பதாக பசியாறுபவர்கள் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார்கள்.

சூரியன் முற்றத்தை முத்தமிடுகின்ற அந்த அதிகாலைப் பொழுதிலே அடுப்பில் விறகேற்றி பசியெனும் இருளை விரட்டுகின்ற பாட்டியின் கடுமையான உழைப்பால் பல வயிறுகள் சுவை காண்கின்றன.

கையில் காசு இல்லாதவர்களுக்கு கூட அழைத்து இட்லி பரிமாறுகின்றார். காசு கையில வரும்போது தரும்படி கூறுகின்ற அவரின் அன்பு மனம் கொடுத்த இட்லிகளை கணக்குப் பார்த்து கடதாசிகளில் குறித்து வைப்பதில்லை.

முதுமையின் தோற்றத்தை உடல் பெற்றாலும்கூட சுறுசுறுப்பாக தானே உழைத்து தன்னைக் காக்கின்ற உழைப்பும் அடுத்தவர்களை மனிதாபிமானமாக நோக்கும் பண்பும் இப்பாட்டியின் சிறப்பான அடையாளங்கள்.

உண்ண வருகின்றவர்களுக்கு பாட்டியின் அன்பான உபசரிப்பு  வயிற்றுடன் மனதையும் நிறைக்கின்றது.

பசுமையான மனதின் பிரதிபலிப்புத்தானே இது!

தேடி வருகின்ற பசியாளிக்கு இல்லையென்று சொல்லாமல் பசியாற்றுகின்றார். கொடுக்கும் இட்லிக்கு கணக்குப் பார்ப்பதில்லை. கொடுக்கும் பணத்தை மனதாரப் பெற்றுக் கொள்கின்றார்.

பசித்தவன்  புசிக்க இலவசமாக உணவளிக்கும் தர்மத்தையும் செய்கின்றார்.

கலப்பமிடமில்லாத சுவையான இட்லி இவரது கைப் பக்குவம்தான்.

சுவையான இட்லியென உண்பவர் வாயாரப் புகழும் வார்த்தைகள் இவரின் மனதை  நிறைக்கின்றன.

இணையத்தில் கண்டெடுத்த பாட்டியின் இட்லிகள் எனது வரிகளில் இங்கு பரிமாறப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!