About Me

2021/06/02

MV X- Press Pearl

                                       

தற்போது இலங்கையில் பேசப்படுகின்ற விடயம் MV X- Press Pearl  எனும் சிங்கப்பூர் கப்பலைப் பற்றியதாகவே இருக்கின்றது. இது சுமார் 186 மீற்றர் நீளமானது. இது 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இயக்கப்பட்டது. இக்கப்பல்   எக்ஸ் பிரஸ் பீடர் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 
 
இது போர்ட் கிளாங் துறைமுகத்திலிருந்து (மலேசியாவிலிருந்து) சிங்கப்பூர் வழியாக ஜெபல் அலி (UAE) மற்றும் போர்ட் ஹமாத் (கத்தார்), துபாய் வரை மத்திய கிழக்கு சேவைக் கப்பலாக அனுப்பப்பட்டது. 

இது 30 நாள் சுற்றுப் பயணத்தின் பின்னர், திரும்புகையில் ஹசீரா (இந்தியா) கொழும்பு (இலங்கை) வழியாக மீண்டும் மலேசியாவை சென்றடைய வேண்டும். 

நைத்திரிக்கமிலத்தின் கொள்கலன் கசிவு காரணமாக கப்பலை கத்தார், இந்தியா துறைமுகத்தில் நிறுத்த முயற்சித்தபோது, கசிகின்ற அமிலத்தைப் பராமரிக்க வசதியில்லை எனும் காரணத்தினால் குறித்த கொள்கலனை இறக்குவதற்கு அனுமதி கிடைக்காததால் கப்பலை கொழும்பு வழியாக செலுத்தியதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கப்பல் 25 தொன் நைத்திரிக்கமிலம், பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் நிறைந்த 1468 கொள்கலன்களுடன் 2021 மே 2 ஆம் திகதி இந்தியா ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, மே 19 ஆம் திகதி கொழும்பை அடைந்தது. 

மே 20 கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கே 17.6 கி.மீ தூரத்தில் கப்பல் இருக்கையில் தீ பிடித்தது. இக்கப்பலில் காணப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த இரசாயனப் பொருட்களின் தாக்கத்தினாலேயே இத்தீ பரவல் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தீப்பரவல் அதிகரித்தது. தீப்பற்றிய கப்பலில், கப்பலின் உரிமையாளரும் ஆபரேட்டருமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் உள்ளிட்ட பன்னிரெண்டு பணிக்குழுவினர் மற்றும் 12 தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 25 பேர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

21 மே 2021 அன்று, இலங்கை கடற்படை, இரண்டு கடல் ரோந்து கப்பல்கள்,  சாகரா மற்றும் சிந்துராலா போன்ற கடற்படைக் கப்பல்களையும், தீயணைப்பு மீட்புப் பணிகளில் ஒரு விமானத்தையும் அனுப்பியது.  


மே 22 அன்று, இலங்கை விமானப்படை மீட்புப் பணிகளில் பெல் 212 ஹெலிகாப்டரை நிறுத்தியது.
  
அமிலக் கசிவினில் ஏற்பட்ட   கட்டுப்படுத்தப்பட முடியாத தீயின் காரணமாக மே 25 ஆம் திகதி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பொழுது இரு இந்தியக் குழு வீரர்கள் காயமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர். 

கொள்கலன்கள் கடலில் விழுந்தன.  தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு இழுபறி மற்றும் டோர்னியர் கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா அனுப்பியது. 
 
மே 29 அன்று, எக்ஸ்-பிரஸ் முத்தில்  தீப்பிழம்புகள் குறைந்தாலும், கப்பல் புகைத்துக் கொண்டேயிருந்தது. கடல் பாதுகாப்பு ஆணையத்தால் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். எண்ணெய்க் கசிவுடன் கலக்கப்பட்ட கடல் சுற்றுப்புறம் மாசடைந்துள்ளதால் நைத்திரிக் ஒட்சைட்டு வளியுடன் கலந்து அமில மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரிகள் இறந்துள்ளனர். குறித்த பகுதிக்கு மீனவர்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரையொதுங்கின்ற பொருட்களை கடற்படையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்துகின்றனர். 


 மே 27, 26,000 கிலோ எடையுள்ள மூன்று பிளாஸ்ரிக் கொள்கலன்களிலிருந்து    பிளாஸ்ரிக் பொருட்கள் கடலில் சிந்தப்பட்டு கரையொதுங்கியுள்ளன. இத்தகைய மாசுக்கள் கடலின் அழகை குறைத்துள்ளன. இப்பேரழிவால் மில்லியன் கணக்கான கடல்வாழ் உயிரினங்களும், பவளப்பாறைகளும் அழிந்துள்ளன என்பது வலி தருகின்ற விடயமாகின்றன. ஒரு பவளப்பாறை  மூன்று அங்குலம் வளர ஒரு வருடம் தேவை. அப்படியாயின் இப்பவளப்பாறைகள் மீள உருப்பெற இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ?

                               

ஐரோப்பாவிலிருந்து  தருவிக்கப்பட்ட தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட இலங்கை அரசின் கடற்படை, விமானப்படையினரின் பெரும் முயற்சியின் பின்னர் கப்பலின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


கொழும்பு துறைமுகத்திலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கப்பலானது இழுத்துச் செல்லப்பட்டது. சேதத்தின் தன்மை மற்றும் கடல் வளத்தின் பாதிப்பு பற்றி தற்போது ஆராயப்படுகின்றது. கடலின் மரணம், இயற்கை வள அழிவுக்கான சோகம். கப்பலிருந்து பெறப்படுகின்ற கறுப்பு பெட்டியின் தகவல்கள் விசாரணைகளுக்கு உதவக்கூடும்.

தற்போது இக்கப்பல் கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடுக்கடலில் விடப்படவுள்ளது.

பேரழிவின் அளவு மற்றும் இலங்கை கடலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முறையான சுற்றுச்சூழல் சேத மதிப்பீட்டைப் பெற குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று தேசிய திட்டத்தின் நிறுவனர் டாக்டர் அஜந்தா  கூறியுள்ளார்.


தற்போது கப்பலில் இருந்து 80 கிலோமீட்டர் பகுதியில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

கப்பலிலிருந்து வெளியாகியுள்ள மாசானது கற்பிட்டியிலிருந்து காலி கடல் போன்ற நீண்ட தூரங்களுக்கு பரவி, கடல்வளத்தை சேதப்படுத்தியுள்ளது. எதிர்பாராமல் ஏற்படுகின்ற இத்தகைய விபத்துக்களால் இயற்கை வளங்கள் மட்டுமல்ல, நாமும் தீதால் சூழப்படுகின்றோம்.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!