சொர்க்கத் தீவு !


வெள்ளி நிலாக் கொஞ்சலில்........
உணர்வுகள் களித்துக் கிடக்கின்றன
இப்போதெல்லாம்!

நேர்த்தியான என் மாளிகையில்..........
சிதறிக் கிடக்கின்ற பொருட்களெல்லாம்
கண்ணடிக்கின்றன வெகுளியாய்!

தூசு கூடச் செல்லாத என் காற்றில்
மாசற்ற அவள் பேச்சொலி..........
சிலிர்த்துக் கிடக்கின்றன சில்லறையாய்!

காலைப் பனிக்குள்ளும் பண்ணிசைக்கும்
சிட்டுக்களின் சிரிப்பலையாய் - அவள்
என்னுள் நிரம்பிக் கிடக்கின்றாள்!

தனிமைக்குள் மந்திரிக்கப்பட்டு
இருளுக்குள் கவிழ்ந்திருந்த என்னுள்........
இப்பொழுதெல்லாம் அவளே விடிவெள்ளி!

என் மனதின் துன்பவலைகளெல்லாம்
அவள் புன்னகைக்குள்..........
கலைந்து செல்கின்றன இதமாய்!

என் விழிகள் விரிகையில் ....
விடியலை சுட்டும் மலரிதழாய்.........
வாசனை விட்டுச் செல்வதும் அவளே!

என் பெயரில் இத்தனை அமிர்தமா........!
அவளென்னை உச்சரிக்கையில்
சிறகடிக்கின்றேன் பல வெளி தாண்டி!

அவள் பார்வை வீச்சில்..........
இத்தனை வசீகரமோ - என்
மனமோ பித்தாகிக் அலைகின்றது
அவள் பின்னால்!

விடியலின் கரமசைப்பில் - எனை
தொட்டுத் தழுவும் அலாரமாய்
வந்து போகின்றாள் அடிக்கடி!

இந்தக் கிளிப்பேச்சில் மயக்கத்தில்
என் சினக் கவசங்கள்...........
துகிலுரிக்கப்படுகின்றன மென்னிசையாய்!

இவள் பதிக்கும் முத்தத்தில் ..........
பவனி வரும் பழரசங்களோ
இடறி வீழ்கின்றன என்னிதழில்!

இப்பொழுதெல்லாம் என் கவனம்
அவள் மீதே சிதறிக்கிடக்கின்றன- இந்த
வெளியுலக வில்லத்தனத்திலிருந்து மீண்டபடி!

உணர்கின்றேன்....என்னை நானே
உணர்கின்றேன் - அவள்
தந்திருக்கும் மொத்த அன்பையும் சேமித்தபடி!

இவள்........
குறும்புகளில் கரும்பு பிசைந்து
பயணிக்கின்றேன் - அந்தச்
சொர்க்கத்தீவின் ஆட்சிக்குள் நான் !

(அஸ்கா....எங்கள் வீட்டுச் செல்லம்...வயது 2  1/2  ..........அவள் என்னுள் தந்த பாச அருட்டலிது.)


Doctor  Jano........ இம் மழலையை எமக்களித்த என் சகோதரி


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை