கலை, கலாசாரம்,பண்பாடு என்பது மனித வாழ்வியலை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். நமது நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்தும் அம்சங்களாக அவற்றைக் கருதலாம்.
மக்கள் தம் அன்றாட நிகழ்வுகளின் செயல்களை ஆவணப்படுத்தும் போது, அவை அவர்களைத் தொடரும் சந்ததியினருக்குரிய கைகாட்டிகளாகவும், வழிகாட்டிகளாகவும் உருமாற்றம் பெறுகின்றன.
அந்த வகையில் இலங்கைக் கலாசாரத் தூறல்களின் ஓர் துளியாக, ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஓரம்சமாக சிகிரியா குகை ஓவியத்தினைக் கருதலாம்.
நான் க.பொ.த சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எனது பாடங்களுள் ஒன்றாக சித்திரத்தை தெரிவு செய்திருந்தேன். என் தந்தை ஓவியம் வரைவதுடன், என் சகோதரியினருக்கும் பிடித்த துறையாக ஓவியம் பரிமாணித்ததால் என் குருதியுடன் கலந்த ரசனையாக ஓவிய ரசனை என்னை ஆக்கிரமித்துள்ளது. அழகுமிகு, அர்த்தமிகு ஓவியங்களை அவற்றின் வரலாற்றுடன் சேர்ந்து ரசிப்பது என் அழகியல் சார் பொழுதுபோக்காகும்!
அந்த லயிப்பே இன்று என் கண்முன் பரவி "சிகிரியா" வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் முனைப்பாகி கணனி விசைப் பலகையில் என் விரல்களை ஸ்பரிக்கச் செய்கின்றது...
ஒரு நாட்டின் கலைப் பாரம்பரீயம் என்பது அந்நாட்டின் கட்டிடங்கள், ஓவியங்கள், நடனங்கள் போன்றவற்றின் வெளிப்பாட்டுடனேயே நம்மைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டின் எழிலை உலகெங்கும் பறைசாற்றும் நகரமாக சிகிரியா விளங்குகின்றது. சிகிரிய கட்டிடத் தொகுதியில் காணப்படும் பாறைகள், நீர்த்தோட்டங்கள், நந்தவனங்கள் என்பவை பேசும் அழகின் ரகஸியங்களால் ஆசிய நகரத்தின் மிகச் சிறந்த நகரமாக சிகிரியாக விளங்கின்றது. இது எம் நாட்டின் பெருமையை உலகில் பறைசாற்றுகின்றது.
வடமத்திய மாகாணத்திலுள்ள தம்புள்ள நகரத்தில் சிகிரியாஅமைந்துள்ளது. இது மாத்தளை மாவட்டத்திற்கு கிழக்குப் புறமாகவும், கொழும்பிலிருந்து 186 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது . சிகிரியாக் குன்றின் உயரம் 370 மீற்றராகும். இதன் விசேட அம்சமென்னவென்றால் இம்மலைக்குன்றிலிருந்து இலங்கையின் சகல காடுகளையும் பார்க்க முடியும். இதிலுள்ள ஓவியங்கள் 6 ம் நூற்றாண்டுக்குரியவை.
இதனைக் கட்டியவர் காசியப்பன் மன்னராவார். (கி.பி 477- 495). காசியப்பன் மன்னன், தாதுசேனன் மன்னனின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகன் ஆவார். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் அவரது பட்டத்து உரிமை சகோதரன் முகலனைச் சென்றடையப் போகின்றதென்ற நிலையில், தானே பட்டத்து ராஜாவாக முடிசூட்ட வேண்டுமென்ற நோக்கில் தன் தந்தையைக் கொன்று அரசபீடம் ஏறினான் காசியப்பன் மன்னன். இவனது ஆட்சிபீடம் சீகிரியாக் கோட்டையில் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிற்கு தப்பியோடிய சகோதரன் முகலன் தன்னைத் தாக்கக் கூடும் எனும் அச்சத்தில் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அநுராதபுரத்திலிருந்த தனது இராஜதானியை சிகிரியாவிற்கு மாற்றியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டையைச் சூழ பெரிய அகழியும் காணப்படுகின்றது. இவ் அகழி 14 அடி ஆழம், 82 அடி அகலமாகும்..இச் சிகிரியாக் குகையை அமைக்க ஐந்து ஆண்டுகள் சென்றன.
தந்தையைக் கொன்று ஆட்சிபீடமேறிய மன்னன் காசியப்பனுக்கு சமூகத்தினரும், பௌத்த மதத்தினரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவனைப் பாவியாகக் கருதி மகாவிகாரை பிக்குகள் அவனது கொடைகளைக் கூட நிராகரித்தனர். அவ்வாறான சூழ்நிலையிலேயே காசியப்பன் மன்னரால் அவ்வோவியங்கள் வரையப்பட்டன.
சீகிரிய மலையில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக மலையின் மத்திய பகுதிக்குச் செல்ல முடியும். இதிலிருந்து மலையின் வடக்குப் பக்கத்திலுள்ள மேடைக்குச் செல்ல மண்ணாலான படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இது பெரிய சிங்கத்தின் கடைவாய்ப்பகுதியினூடாக ஊடுறுவிக் காணப்படுகின்றது. மலையின் உச்சியில் அரண்மனையும், மேற்குப் புறப் பாறைச்சுவரில் ஓவியங்களும் வரையப்பட்ட கலைத்துவமான படைப்பாக சிகிரியா காணப்படுகின்றது. காசியப்பன் மன்னன் தன்னை கடவுளாகக் கருதியதால் மலை உச்சியில் தேவராசராக தனது அரண்மணையை நிறுவினான் என்பதும் வரலாற்றாசிரியர்கள் ஊகம்.
பாறையின் தளத்தில் சுண்ணாம்பு, தேன், கபக்கல் என்பவற்றின் கலவைப் பூச்சின் மேல், பிராஸ்கோ முறையில் இயற்கை வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ள 27 ஓவியங்களுள் தற்போது அழிவடையாமல் 7 ஓவியங்கள் மாத்திரமே உண்டு.
சிகிரியா ஓவியங்கள் பெண்களையே சித்தரிக்கின்றன. முகத்தில் பக்தி பரவசம், கைகளில் அல்லி மலர், தட்டுகைகள் ஏந்துகை என்பவற்றைக் கொண்டு சில வரலாற்றாசிரியர்கள் இவர்களை புத்தரை தரிசிக்கப் போகும் பெண்களாக விபரிக்க, சிலரோ இப் பெண்களை மன்னனின் அங்கப்பாத்து மகளிர் என வர்ணிக்கின்றனர். இப்பெண்ணோவியங்கள் சில மேலாடையுடனும், சில மேலாடையின்றியும், சில கூட்டங்களாகவும் சில தனித்திருப்பவர்களாகவும் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் முகவமைப்பு, இடையமைப்பு என்பவற்றின் தோற்றுகை அஜந்தா ஓவியத்தின் சாயலாகவும், பல்லவர் கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களாகவும் உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் "சீயகிரி" எனப்படும் சிகிரியா 1982 ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தால் கலை, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டது. இன்று பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இந்த கலைக்குகை இலங்கையின் பொருளாதார உயர்வுக்கான அதிஷ்ட சாதனமெனலாம்.
- Ms. Jancy Caffoor -
முன் பக்கம் செல்ல
Hcrdtbjyfjj
ReplyDelete