About Me

2012/07/18

திருடிய இதயத்தை !


வாழ்க்கை..........!

அது இறைவனால் நமக்களிக்கப்பட்ட வரம்...

அந்த வாழ்க்கையில் நிரம்பி வழியும் அழகான ஞாபகப் பொழுதுகளே நமக்குள் அடிக்கடி உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கும் அழகான வர்ணங்கள்

 ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் தேடலும், எதிர்பார்ப்புக்களும், உறவுகளின் சூழ்கைகளும் பரவித்தான் கிடக்கின்றன. சிலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தத் தெரியாமல் தம் கற்பனைகளை , கனவுகளை, நிஜம் தொட்டுச் சொல்லும் வாஞ்சைகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர்.....

சிலரோ தன் உள்ளக் கிடக்கையை ரசனையுடன் வெளிப்படுத்தி, அந்த கனவுலகை இப் பிரபஞ்ச வெளியில் அள்ளித் தெறித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் இரண்டாம் வகையில் இருப்பதையெண்ணி மகிழ்ந்தவளாய் , எனக்கிந்த ஆற்றலைத் தந்த வல்லோனைப் பணிந்தவளாய் என் பார்வையை நகர்த்துக்கின்றேன் .......

வரிகள் விரல்களின் விசையோடு கணனித் திரையில் தன்னைத் தடம் பதிக்கத் தொடங்குகின்றது வாஞ்சையோடு !நினைவுகளின் சேமிப்புக்களை பகிர்கின்றேனின்று!

அழகு எல்லோருக்கும் பிடித்ததொன்று...அதன் மயக்கத்தில் கிறக்கத்தில் மயங்காத உள்ளங்களில்லை!


கடந்து போன என் இருபதின் இளமையானது , சரீர அழகின் ஈர்ப்பில் கட்டுண்டு, திரை நிழல்களோடு கதைபேசும் நாயக முகங்களோடு லயித்து , ரகஸியக் காதல் வளர்த்துக் கிடந்த அந்த நாட்களை இன்று நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக்குழியில் வெட்கம் மட்டுமல்ல, அறியாமையும் இடறி கேலி செய்கின்றது...

அழகில் மொய்த்த மனம் அந்த அறியாமையைக் கழுவி , அன்பின் தேடலில் மொய்க்கத் தொடங்கும் போது............

வயதும் கடந்து விடுகின்றது.அனுபவங்களும் பரந்து , உறவுகள், நட்புக்களின் உள்ளத்திலுள்ள உண்மையான அன்பைச் சுற்றி  எதிர்பார்ப்புக்களும் அசையத் தொடங்கி விடுகின்றன....

அன்பு இந்த உலக வாழ்வின் உயிர்த்துடிப்பான நாடி.அந்த அன்பின் பரவசம் தரும் அமைதி, அழகு, ரசனை , ஈர்ப்பு இவற்றில் லயித்து விடுகின்ற மனம் இயற்கையின் காதலிலும் சொக்கித்துக் கிடக்கின்றது.

இன்று இயற்கையோடு ரசித்திருந்த அந்த பரவசத்தை பகிரப் போகின்றேன்.நம் மனதின் பரவசத்தை அழகு வரிகளில் கோர்த்து விடுவது கூட அற்புதமான ஓர் சுகமே!

இதோ.........

எனக்குப் பிடித்த சில, உங்களுக்கும் பிடித்திருக்கா.............!

உங்கள் உள்ளம் நுழைந்து நான் தேடும் வினா, வெளியேறட்டும்  உங்கள் வார்த்தைகளினூடே.............!

வான் வயிறை தன் சூரியக்கதிர்களால் மெதுவாய் வருடி , நெற்றியில்  நாணமேற்ற மெதுவாய் களமிறங்கத் துடிக்கும் அந்த ஆதவனையும்,


அவன் வரவு கண்டு அந்த அதிகாலைப் பொழுதில், பாதி விடிந்தும் பாதி இருளுமாய்  அப்பிக் கிடக்கின்ற அந்த மௌனப் பொழுதில் கைபேசி "ரிங்டோனாய்" என்னை எழுப்பி விடும் சிட்டுக்களின் சிரிப்புச் சத்தமும்


என் மனதேசத்தின் பரவச அணுக்களை உசுப்பேற்றி வேடிக்கை பார்க்கும்..எப்பொழுதும் !

.அந்த அழகான உலகிலிருந்து நழுவிப் போக மனமின்றி, கண்களை இறுக்கி போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் கள்ளத்தனம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது....

   அந்த அதிகாலைத் தென்றலில் தம் சிறகுகளின் ஈரம் துடைத்து வீட்டுமுற்றத்தில் இரைதேடும் சின்னப்பறவைகளின் சொக்கலின் லயிப்பில் தினம் தினம் கவிதைகள் ஊறிக் கொண்டேயிருக்கும். இந்த இயந்திரவுலகின் இதயமாய் ஒட்டிக் கிடக்கும் இயற்கையின் மானசீக காதலியாய் எனை நானுருமாற்றியதன் விளைவாய் பல நாட்காட்டிகள் கைகாட்டிச் சென்றும் விட்டன..

    
நாணத்திரைக்குள் ஒளிந்திருந்து, வண்டுகளின் காமப் பார்வைச் சிதறல்களை களைந்தெறிய வலியுடன் போராடிக் கொண்டிருக்கும் பாதி மலர்ந்த மொட்டுக்களைத் தொட்டு மெட்டமைத்து இட்டுக் கட்டும் பாட்டுக்கள் இஷ்டத்துடன் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன இன்னும் என் மன வைப்பகத்திலே


மாலைக் காற்றில் கரைந்து மஞ்சள் தெளிக்கும் அந்த வெயிலோடு இம்சை சேர்க்கும் மழைத் தோரணங்களின் சீண்டலில் என் மேனி சிலிர்த்துக் கிடக்கும் அந்தப் பொழுதுகளுக்காய் எத்தனை பொழுதுகள் தவமிருந்திருக்கின்றேன்..இன்றும் கூட அந்த ஈரலிப்புக் காற்றில் என் ஆடைகளை சிறகாக்கி பறந்திடத் துடிக்கும் அந்த சிறு பிள்ளைத் தனம் வம்படிக்கின்றது அடிக்கடி என்னுள் வில்லத்தனமாய் !


காற்று.........!

இயற்கைக் காற்றில் வெட்கம் களைந்து நனைந்திட துடிக்கும் அசைவுகளை நான் கட்டுப்படுத்துவதில்லை. துச்சாதனனாயென்னைத் துகிலுரிக்கும் அதன் வன்மத்தை நான் சினப்பதுமில்லை. ஏனெனில் என்னுள் நுழைந்து என்  மூச்சுக்களைச் சேமிக்கும் அந்தப் பிராண வாயுவும் என்னைத் தொட்டுச் செல்ல வலைவிரிக்கும் நேரமல்லவா அது!

வான வயலிலே விதைக்கப்பட்ட மேகக் கூட்டங்களையும் நான் ரசிப்பதுண்டு..மேகங்கள் ஓடி விளையாடுகையில் தம் உருவை மாற்றும் வெவ்வேறு முகமூடிகளை என்னுள்ளல்லவா விட்டுச் செல்கின்றன.....


அறுவடைக்கு இன்னும் தயாராகாத கன்னி நெல் மணிகளின் பருவச் செழிப்பிலும் நான் கிறங்கியதுண்டு........காற்றின் முதுகினிலே பயணித்தவாறே நம்முள் கடலலையை ஞாபகப்படுத்தும் நெற்கதிரின் அசைவை விழியில் தரிக்க வைத்து நான் ரசித்த கணங்கள் அப்பப்பா ...ஏராளம்!


உள்ளத்திலும், உடலிலும் அழகின் சேமிப்போடு யாழின் இசையாய் தம் மழலைப் பேச்சுக்களை உதிர்க்கும் சிறு கிள்ளைகளும், அவர்களின் ரசிப்புக்களும் என்னை கட்டிப் போடும் அன்பான அவஸ்தைகள் தான்.........


அலைகளின் மோதுகைகளோடு புரண்டெழும் கடற்கரை மணலில் கால் புதைத்தும், கரையோரங்களில் அவஸ்தையோடு வீழ்ந்து கிடக்கும் நீரில் கால் நனைப்பதும் இன்றும் தொடரும் சிறுபிள்ளைத்தனமான ஆசைதான்!


பன்னீர் தூவும் வானத்தில் இயற்கை வரைந்த நிறக் கோடுகளாய் நம்மை எட்டிப் பார்க்கும் வானவில்லின் அழகும்,...................


சுட்டெறிக்கும் வெயிற் பொழுதில் வீதியில் விழுந்து கிடக்கும் மாயநீரின் வலை விரிப்பாய் நம்மை ஆட்கொள்ளும் கானல் நீரும் ..............
என் ரசிப்புக் குளத்தில் நீச்சலடிக்கும் இனிமையான காட்சிக் குவிப்புக்கள்!

முட்டை மஞ்சள் கருவாய் பௌனர்ணமி தினங்களில் வீழ்ந்து கிடக்கும் மஞ்சள் நிலவு.......என் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் அழகிய மதிமுகம் !


இவற்றின் சேமிப்புக்களை உள்வாங்கும் என் மனக்கூடம்,  நிழல் தேட தெரிவு செய்யும்............அழகான வீடும் என் கற்பனையுலகில் அடங்கிக் கிடக்கும் !


கனவுத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ,அழகுச் சுவடுகளை கற்களாகப் பதித்து உயிர்ப்பேற்றிக் கொண்டிருக்கும் என் வசந்த மாளிகையில் நான்  வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு நொடிகளிலும் என் சுவாசத்தின் மீது சுகம் பன்னீர் தெளித்து விட்டுத்தான் மறைகின்றது!

இன்னும் எத்தனையோ எத்தனையோ..........!

ரசிப்பு வீரியங்களுடன் என் உணர்வை நசித்துக் கொண்டிருக்கின்றன

இயற்கையின் இதயம் கசிந்துருகும் இந்த ஆனந்த மயக்கத்தில் நான் கிறங்கிக் கிடக்கும் போதெல்லாம் நானும் சிறு கிள்ளையாகி வீழ்ந்து கிடக்கின்றேன் மகிழ்ச்சி வெளிகளில்!






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!