முகநூல் டயறி


இந்தக் கட்டுரையில் சாடப்படுபவர்கள்  முகநூலில் பெண் நட்புள்ளங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆண்களே !
------------------------------------------------------------------
வாழ்க்கை பல எதிர்பார்ப்புக்களின் கலவையாக இருப்பதனால் சவால்களும், போராட்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன இந்நாட்களில் !

மனவழுத்தங்களை  நாமும் சற்று இறக்கி வைத்து, நட்புலகில் வாஞ்சையுடன் சிறு நடைப்பயணம் பயில முகநூலுக்குள் பிரவேசித்தால், அங்கும் சில மன விகாரிகளின் அராஜகம்!

வெறும் பொழுதுபோக்கிற்காக முகநூலைப் பயன்படுத்துவோருமுண்டு. நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள் மூலம் தம்மைப் போஷிப்போருமுண்டு. இதில் நான் தற்போது இரண்டாவது ரகம்!

முகநூலில் உள் நுழைந்த ஆரம்ப நாட்களில் , இதனை நானும் நேரங்கடத்தும்  பொழுதுபோக்கு ஊடகமென்றே கருதினேன். ஆனால் சில கசப்பான விடயங்களை மனம் உள்வாங்கியதில் ஓர்நாள் விழித்துக்கொண்டேன். அன்றிலிருந்து சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு பயணித்த முகநூல் பயணம் இப்பொழுதெல்லாம்  கலையுலகத்தின் சார்பானதாகவே உள்ளது.

நல்ல நண்பர்களை மிகக் கவனமாகத் தேர்வு செய்து முகநூல் பக்கங்களில் இணைத்தாலும் கூட, எப்படியோ சில விஷமிகளும் உள் நுழைந்து விடுகின்றனர்.

பேரலைகள் ஒருபோதும் ஓய்ந்திருப்பதில்லை என்பது போல் , குறுகிய நோக்கத்தில் உள் நுழைந்து நண்பர் பட்டியலில் உட்கார்ந்திருப்பவர்களும் ஒரிரு நாட்களில் தம்மை இனங் காட்டி விடுகின்றனர். நட்பு இருக்கை கொடுக்கும் தைரியத்தில் தம் சிதைந்த வக்கிர மனதின் வெளிப்பாடாய் பின்னூட்டம் எனும் பெயரில் எதையெதையோ எழுதி சினமூட்டி விடுகின்றனர்...பெண்களுடன் பிறக்காத இவர்கள்!

வேடிக்கையாகச் சொல்வதற்கும் , விகாரமாகச் சொல்வதற்கும் வித்தியாசமுண்டு..போலி முகமூடியணிந்து நடமாடுமிவர்களை , அவர்கள் வார்த்தைகள் மூலம் கண்டறிந்தால் கழுத்தறுக்கவா முடியும். முகநூல் தடைப்பெட்டிக்குள் சிறைப்படுத்தவே முடியும்...நட்பின் அந்தஸ்தைப் பேணாதோருக்கு இந்தத் தண்டனை கூட போதாதே!

ஏன் இந்தக் குதர்க்கம்?

இத்தனைக்கும் காரணம் நாங்கள் பெண் என்பதாலா? அதிலும் முஸ்லிம் பெண் என்பதாலா! நாங்கள் தவறாக முகநூலைப் பயன்படுத்த நினைத்ததில்லையே!

பெண்கள் முகநூலில் நல்ல விடயங்களைப் பரிமாறுவதில் உங்களுக்கென்ன சிரமம். ? பெண்களைக் கேலிப்படுத்தி விளையாட  முகம் தெரியாத முகநூல் நண்பிகள் தான் கிடைத்தார்களா?

நம் மனதின் வெளிப்பாடு வார்த்தைகளே.......பண்பான வார்த்தைகளைப் பரிமாறி உறவைப் பலப்படுத்துங்கள். மாறாக யாரோ தானே என்று உங்கள் பெயரை நீங்கள் தாழ்த்திக்கொண்டால், அதன் பாதிப்பு என்றோ ஓர் நாள் உங்களைச் சுற்றி வரும்!

நட்பை நாடி வருகின்ற விண்ணப்பங்களை, நாம் நல்லவர்கள் எனும் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்கின்றோம். அறிமுகமாகாதவர்களை நாம் நிராகரித்தால், பல வகையான வெளியுலகின் நடமாட்டத்தை இழக்க வேண்டியிருக்கும்...

பெண்கள் பெயரில் முகநூல் பக்கங்களை போலியாக உருவாக்கி, அதில் தங்கள் குரூரங்களை வெளியிடுவதன் மூலம் சில ஆண்கள்  தங்கள்  வக்கிரத்தையே வளர்க்கின்றார்கள். ......ஒரு பெண்ணை ஒருவன் குற்றம்  சுமத்தும்போது அவளை நன்கறிந்தவர்களுக்கு அவ் வார்த்தையின் நம்பகமும், அவனது மனநோயாளித்தனமும் புலப்படும்!

நண்பர்களாக இணையும் நீங்கள் நண்பர்களாகவே பயணியுங்கள். உங்கள் சில்மிஷங்களில் மயங்கி , உங்களில் ஈர்ப்புக்கொள்ளாதோரை விட்டு விலகுங்கள்... உங்களுக்குப் பொருத்தமில்லாத நட்பை ஏன் முதுகில் சுமந்து செல்வான்..யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! வேடிக்கை எனும் பெயரில் அடுத்தவர் மனதையறுக்கும், அடுத்தவர் சிறப்பை நறுக்கும் பண்பற்ற வார்த்தைகளை வெளிப்படுத்தாதீர்கள்....சட்டத்தின் பிடியில் நீங்கள் சிக்குண்டால் அதன் விபரீதம் பயங்கரமானது.

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப்பற்றிக் கூறுகின்றேன் " என்பார்கள் ! நல்ல நண்பர்கள் என்ற  எம் எண்ணத்தில் கல்லறை கட்டும் சில மன விகாரிகளால் , நட்பைக் கோரி கை நீட்டும் புதிய நட்புள்ளங்களை வரவேற்பதில் தயக்கம் எழுகின்றது...

இப்பொழுதெல்லாம் நான் திருப்தியடையும் ஓர் விடயம் , கலையுலகோடு ஈடுபாடுள்ள நல்ல உள்ளங்களை என் நட்புப் பயணத்தில் இணைத்துள்ளேன். இருந்தும் சில சாக்கடைகளும் சத்தமில்லாமல் உள் நுழைந்து தன் கோரப் பற்களை நீட்டுகின்றன...

தவறானவர்களுக்கான பிரவேசம் நிச்சயம் என் முகநூலில் இல்லை.. என் பதிவுகள் மூலம் என்னைப்பற்றிய ஒரு எண்ணக்கருவினை என் நட்பினர் பெற்றிருப்பார்கள்...என் இயல்போடு ஒத்தவர்களுக்காக என் நட்புக்கரங்கள் நீட்டப்படுகின்றன..பற்றிப்பிடியுங்கள்....பரிமாறுங்கள் நல்ல பதிவுகளையும் சிந்தனைகளையும்!

இயல்பில் ஒவ்வாதோர் என் முகநூல் பக்கத்திலிருந்து விலகிச்சென்று, உங்களைப் போன்ற கீழ்த்தரமான உணர்வுள்ளோருடன் கூட்டுச் சேருங்கள்!
அதுதான் எல்லோரின் மேன்மையைப் பேணும் வழி...!

நாம் பெண்கள்......பலகீனமானவர்கள் எனும் நினைப்பில் எம் வாழ்வோடு விளையாட முனைவோர்க்கு மன்னிப்பென்றுமில்லை...ஆள் தரம், குணமறிந்து பின்னூட்டங்களையும் வார்த்தைகளையும் வெளிவிடுங்கள் !

உலகம் சுருங்கிக் கைக்குள் அடங்கிக் கிடக்கும் இன்றைய நாட்களில் முகநூலில் பிரவேசிப்பவர்கள் வெறும் கைநாட்டுப் பெண்களல்ல... படித்தவர்கள் பெரும்பாலும்..தம்மைச் சூழவுள்ள அக்கிரமங்களை வேட்டுவைக்கும் துப்பாக்கி ரவைகளாக மாறவும் கூடியவர்கள்!ஏனெனில் அவர்களை விழிப்பேற்றுவது சில ஆண்கள்தான்!

மனிதர்கள் தவறு விடக்கூடியவர்களே! அவர்களின் தவறுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் தீர்மானித்து விடுகின்றன. நாம் தவறு விட்டால் பண்போடு சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக் கொள்வோம். எமைச் சிதைப்பதாய் நினைந்து வன்முறையேந்தினால் அழிந்து போவது நீங்களே!

உங்கள் (பொறாமைக்)  கோஷங்களால் நிச்சயம் எம் கலைப்பயணம் தடைப்படாது. இன்னும் சிறக்கும். நானே ஆச்சரியப்படுமளவிற்கு என் திறமைகளை எனக்கு இனங்காட்டியவர்கள் எனது சில விரோதிகளே ! அவர்கள் இன்னும் என் முகநூல் தடைப்பட்டியலில் உயிரறுந்து கிடக்கின்றனர்.

சிலருக்கு பொது அரங்கில் எதைப் பேசுவதென்று தெரியாமல் நட்பு அந்தஸ்தை இழந்து நிற்கின்றனர். இன்பொக்ஸூக்கும், பொதுப் பின்னூட்டத்திற்கும்  வித்தியாசம் தெரியாத இந்த மனநோயாளிகளை என்ன வென்று சொல்வதாம்!

முகநூல் பெண்களுடன் கேலி விளையாட அவர்கள் உங்கள் வீட்டு முறைப்பெண்கள் அல்ல...விதிவிலக்காக நீங்கள் இளித்தால் உங்கள் பின்னால் ஓடிவரும் சிலரை உங்களுக்காகத் தேர்ந்தெடுங்கள்..

சமூகத்தில் நல்ல முகம் காட்டும் எம்மை விட்டு விடுங்கள் உங்கள் அற்பமான பார்வைகளை எம் மீது வீசாமல்!

இது என்னைப் போன்ற பல பெண்களின் குரல்.. நாங்கள் சிறுமிகளல்ல. பருவக்குமரிகளுமல்லர்.... பருவக்கிளர்ச்சியால் மயங்கிக் கிடக்க!

வாழ்க்கையை அனுபவத்தால் நிறைத்தவர்கள்! உங்கள் நலிவான வார்த்தைகள் கண்டு பயந்து ஒடாத வலிமை பொருந்தியவர்கள்!

இதனைக் குறிப்பிடும் என்னைத் தலைக்கணம் பிடித்தவள் எனக் கருதினால் அது உங்கள் குற்றம்...சிலவற்றைப் பாதுகாக்க சில போராட்டங்கள் தேவை!

இன்று என்னுடன் முகநூல் பயணத்தில் இணைந்த  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்ற சகோதரியொருவர் எனக்கனுப்பிய செய்தியொன்று என்னை வெகுவாகக் கவரவே, அந்த செய்தியை இதில் இணைக்க முடிவெடுத்தவளாய் என் ஆதங்கத்தைப் பதிவாக்கி வெளியிடுகின்றேன் என் வலைப்பூவில்! வாசித்துப்பாருங்கள்! அச் சகோதரியின் அனுமதியைப் பெற்றே இதனை நான் இணைத்தேன். இன்பொக்ஸில் நம்பிக்கையினடிப்படையில் பரிமாறப்படும் விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனும் கருத்தில் உறுதியாக இருப்பவள் நான்)

இத்தகைய ஆண்கள் நாம் அவர்களை இனங்கண்டு நீக்க முன்னர் தாமாகவே எம்மை விட்டு விலகி, முகநூல் நண்பர் பட்டியலின் புனிதத்தை பேணுவார்களா எனும் வினாக்குறி தொக்கி நிற்க , அக் கடிதத்தைப் பதிகின்றேனிங்கு அதன் செம்மை கலையாதவாறு!

நண்பி எழுதியுள்ளார்.................-

சோதரி, முகநூலில் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டுமெனின் முதலில் நாங்கள் எம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான கால கட்டமாக இது உள்ளது. முகநூலுக்கு நான் புதிது. இணைந்த ஒரு சில வாரங்களிலே முகநூலின் போலிமுகங்களை இனங்கண்டு கொண்டேன். பெரும்பாலும் பெண்கள் பெயரில் உள்ளவர்கள் ஆண்களாகவே உள்ளார்கள். இவர்களை ஜீரணிக்க முடியவில்லை. 13 பேரை நான் நீக்கிவிட்டேன்.

உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமானது. நீங்கள் ஒரு பெண் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகின்றது. உங்களைப் போன்ற சமூக ஆர்வமுள்ள பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்த நான் ஆசைப்படுகின்றேன்......................

கடிதம் தொடர்கின்றது..................................

இத்தகைய குறுகிய மனம் படைத்த ஆண்கள்  இனியாவது திருந்துவார்களா... இன்றும் இவ்வாறான ஒருவரை இனங்கண்டு அவர் என் முகநூலைப் பார்வையிடாதவாறு தடைப்படுத்தினேன். சிறு வார்த்தைகள் கூட மனதை புண்படுத்தி நட்பை முறிக்கும்!

இந்தப் பெண்ணடிமைத்தனப் பிரதிநிதிகள் தம் கோஷங்களைத் தவிர்ப்பார்களா...நான் ஓர் ஆசிரியை....என் பாலின சகோதரிகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பது எனது கடமையும் கூட!

நல்ல என் நண்பர்களை மதித்திடும் அதே நேரம், பாம்பின் விசமாகக் கருதி தீயவர்களை வெறுக்கின்றேன் !

இவர்களை என்னவென்று சொல்வதாம்...!

மனநோயாளிகளா....ஆணாதிக்கக்காரர்களா.......வெருளிகளா........இல்லை நல்ல வார்த்தைகளைப் பேசிப் பழகாதவர்களா...........

எதுவோ ஒன்று!
5 comments:

 1. முக நூலில் பலதரப்பட்டவர்கள்
  இணைந்திருப்பினும் பொருத்தமானவர்களை தாங்கள்
  இனம்கண்டு இணைத்து நட்பின் வழியில் தங்கள்
  கலைப்பயணம் இனிதே தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .........

  ReplyDelete
  Replies
  1. நன்றி......இப்பொழுது நான் இவ்விடயத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதால் பொருத்தமானவர்கள் மட்டுமே என் நட்பு பயணத்தில் இணைவார்கள் என நம்புகின்றேன்

   Delete
 2. முழுதுமாய் தங்கள் கட்டுரையைச் சுவாசித்தேன் சகோதரி ஜன்ஸி கபூர். பெண்கள் அடுப்பூதும் பெண்களாக - முடங்கிக் கிடக்கும் பெண்களாக இல்லை. இவ்வாறு நினைத்துக்கொண்டு நான்சார்ந்த பால்பிரிவினர் தகாத செயல்களில் வலம்வருகின்றனர். நான் ஆணாக இருந்தும் என்னுடனும் தகாத வார்த்தைகளுடன் எனைத் திசைதிருப்பும் நோக்குடனும் சில அநாமிகள், அவர்களாக எனது முகநூலுக்குள் நுழைந்து கில்லாடித்தனம் புரிய முயன்றனர். ஈற்றில் அவர்களை அலைகடல் தாண்டிஓட ஓரிரு கவிவரிகளை மட்டுமே பயன்படுத்தினேன். நான் கலை, மற்றும் மார்க்கத்துடன், தமிழுன் இல்லாதாரை என்னுடன் இணைத்துக்கொள்ள மாட்டேன் ஒருக்காலும். காரணம் இருக்கின்ற கொஞ்சம் அறிவும் அவர்கள் விகாரப்படும். உண்மையில் ஓரிரு நாட்களில் உங்கள் ஆக்கங்களின்பால் ஈர்ப்புக்கொண்டே உங்களையும் என்நட்பு வட்டத்தில் இணைத்தேன். உண்மையில் இஸ்லாமிய வழிநழுவாத தங்களின் எழுத்துக்கள் போற்றத்தக்கன. நிச்சயம் உங்களைப் போன்றவர்கள் மின்னிமின்னிப் பிரகாசிக்க வேண்டும். பழுத்த எழுத்தனுபமுள்ள உங்களின் திறமையான எழுத்துக்கள் காலத்தில் பேசப்படும் என்பது உறுதி. இன்சாஅல்லாஹ் இனி உங்கள் எழுத்துக்களின் வாசகனாக - எழுத்துக்களை நேசிக்கும் உறவினனாக நான் இருப்பேன். உங்கள் எழுத்துக்கள் சுடவேண்டியவர்களை சரியாகச் சுட்டிருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே பைரூஸ்......உங்களைப் போன்றோரின் வாழ்த்தும், அறிவுரையும், நட்பும் என் கலைப்பயணத்திற்கு நிச்சயம் துணைபுரியும்..
   இன்ஷா அல்லாஹ் ! வல்லோன் அருளால் அந்த அநாமிகள் நிச்சயம் எனக்கு இனங்காட்டப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள்.. உங்கள் எழுத்துக்களும் மிகச் சிறப்பானவை .வாழ்த்துக்கள்!

   Delete
 3. ஏன் முகநூலை விட்டு சென்று
  உள்ளீர்கள் ..?
  காரணம் புரியவில்லை....!!
  நல்ல நட்புகள் என்றும் போற்றப் படவேண்டியவை....
  நன்றிகள்.......

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை