ஞாபகத் தீ
அன்றோர்...........
பொழுதொன்றில்
உன் கரத்தில் குவிந்திருந்த மாதுளங்கனியால்
என்னைச் சிவப்பாக்கினாய் ...
இதழ்களின் சிணுங்கல்கள்
அழகாய் நம்மை மொய்த்த - அந்த
ஞாபகங்கள் நெஞ்சைப் பிளக்கின்றதடா!

---------------------------------------------------------------------------

நீ என்னை இம்சித்துச் செல்லும் போதெல்லாம்
திட்டுகின்றேன் உன்னை......
வழிந்தோடும் சினத்தால் - உன்னைப்
போர்த்துகின்றேன் - இனி
நமக்குள் ஒன்றுமில்லயென
முடிவுரைகூட செப்புகின்றேன் உன்னிடம்....
ஆனால்.............
நீ விட்டுச்செல்லும்  அந்த அப்பாவித்தனமான
மௌனத்தில்தான் - என்
இதயம் கனத்து
கண்ணீரில் கரைக்குது அன்பை!

------------------------------------------------------------------------

ஏழ்மைத் தேசத்தின்  பிரதிநிதிகளாய்
வியர்வைத் துளிகள்!
பசி ரேகைகள்  வரையும் ஓவியங்களாய்
அவலங்கள்!
அழுத்தங்கள் விழிகளுக்குள் வீழ்ந்து
அழுகிப் போகும் போதெல்லாம்.........
கன்னக் கதுப்புக்களில் உப்பளங்கள்!
இத்தனைக்கு மத்தியில்....
அக்னிப் பிரசவங்களின் அழுகுரல்கள்
அடங்கிக் கிடக்கும் காப்பகமாய் மனசு!
அட.....
வறுமைக்குள் தோற்றுப் போகும் வாழ்வுகூட....
ஒர் கணம்
தேற்றிக்கொள்கின்றது ........
வாழ்க்கையின்னும் முடிந்து விடவில்லையென
நீயென்  அருகினிலிருப்பதால்!
--------------------------------------------------------------------

.........என் செல்லத்துக்கு,

இது
நாம் சிருஷ்டித்த உலகம் ..
இங்குதான் ......
நம் காதல் நம்மைக் காதலித்தது!
இங்குதான்.......
நம் குழநதைகளும்
நமக்குள் முத்தங்களைச் சிந்தின!
இங்குதான்.........
நாம்.........
உறங்க மறந்த பல இரவுகள்
நம் காதலை
கவிதைகளாய்ப் பேசின -

வா...........
இது நம்முலகம்!
தடையின்றி நம்மைப் பொறிப்போம்
காதலுடன்!
-----------------------------------------------------------------

நினைத்துப் பார்க்கின்றேன் - நம்
நிஜத்தின் வாசத்தை.....................
அழகான நம் மனதுக்குள்
ஆழமான அன்பை வீசும் - அத்
தருணங்கள்தான்
இன்னும் நம்மை எழுதிக் கொண்டிருக்கின்றன
ஒருவருக்குள் ஒருவராய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை