வாழ்வே மாயம்


வாழ்க்கை .............!

கடந்துபோன வாழ்க்கைய கிளறிப் பார்க்கிறது தப்புத்தான். ஏன்னா அதுல நம்மட நிம்மதி கரைஞ்சு போன வடுக்கள் இருக்கும். அவை வலிக்கும். ஆனாலும் சில விசயங்கள நினைச்சுப் பார்க்கும்போதுதான் அது நம்மட வலிகள காய வச்சு பக்குவப்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில இன்னைக்கு நான் நெனைக்கப் போறது என்னோட அப்பாவ. அவர நெனைச்சு அவர்ட தெறமைகளை கண்டு நான் மலைச்சுப் போயிருக்கிறேன். என்னதான் தெரியாது அவருக்கு. ஓவியம், இலக்கியம் உட்பட எல்லா உபகரணத் திருத்த வேலைகளும்...... அவர் பேசுற ஆங்கிலத்திற்கு நிகரே இல்ல. ...படிச்ச மனுஷன். அரசாங்க ஊழியன்...

ஆனால்....அந்த மனுஷன்......படிச்ச மனுஷன்.........

ஏனோ புள்ளைங்க, மனுஷிக்கு மனசு என்று ஒன்று இருக்கிறத மறந்ததுதான் ஆச்சரியம். ஒருவேளை அவர்ட இந்த சர்வதிகாரத்திற்கும், தனிக்காட்டு ராஜா ஆட்சிக்கும் காரணம் அவருக்கு பொறந்தது பொட்டப்புள்ளங்க தானோ...ஒரு ஆம்புளப் புள்ள பொறந்திருந்தா இந்த மனுஷன தட்டிக் கேட்க மாட்டானா....ரொம்ப ஆதங்கப்பட்டிருக்கறேன். சிலநேரம் அம்மா மேலயும் கோபம் வரும். ஆரம்பத்திலயே குறைகள தட்டிக் கேட்டிருக்கலாம். இல்லைன்னா  விவாகரத்தாவது பண்ணிட்டு போய்யிருக்கலாம். இந்த மனுஷன நம்பி பொட்டப்புள்ளங்க பெத்துட்டு அவவும் வாழ்க்கையோட போராடிக் கொண்டிருக்கின்றா.

வாழ்க்கை....... அது விதிச்ச வலையில வீழ்ந்து கெடக்கிற மீன்களப் போல நாங்களும் எங்க உணர்வுகள சிறப்படுத்தி வாழ்றதால அதுல அப்படி என்னதான் இருக்கு. நான் யோசிச்சதில்ல. ஏன்னா அந்த வாழ்க்கையோட முகத்தில எப்பவுமே நான் கண்டது பிரச்சினைகளும், போராட்டங்களும்தான்...

சின்ன வயசுல .................நானும் சின்னப் பொண்ணா இருந்தப்போ ...எல்லாப் பொண்ணுங்க போலவும் சின்னச் சின்னதான ஆசைகளும் ஏக்கங்களும் நெறஞ்சிருந்துதுதான்.. ஆனா...அதை வௌிப்படுத்த முடியாத நிலை...காரணம் அப்பாவோட கண்டிப்பு...! பக்கத்து வீட்டு பொண்ணுங்க தம் வீட்டின்  றோட்ரோமா நொண்டிக்கோடு, மாபிள் போல இப்படி ஏதாவது விளையாடும்போது அதை வீட்டுக்குள்ள ஔிச்சிருந்து பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டுருக்கிறன். எப்படா...........அப்பா ........வௌில போவார்னு பார்த்து பாய்ஞ்சோடி பக்கத்து வீட்டு பொண்ணுங்க கூட மண்சட்டி பானை வெளையாடின ஞாபகமும் இருக்கு.

அப்பா..........
ரொம்பத்தான் திமிர் புடிச்சவர். ஒருநாளும் தன்னோட தவறுகள ஒத்துக் கொள்ளவே மாட்டார். அவர்ட குறைகள சொல்லப் போன அங்கே பெரிய போருக்கான சமிக்ஞ காத்திருக்கும். அந்தப் பயத்தில இவர்க்கு முன்னால மூச்சு விடுறதில்ல இவரோட குறைகள...

ஆனா....ஒரு நல்ல விசயம் மட்டும் பண்ணினார். எங்கள எல்லாம் படிக்க வச்சார். தன்னோட சம்பளத்துக்குள்ள சின்னதா வட்டம் வரைஞ்சி  அதுக்குள்ள எங்களையும் உள்ளீர்த்துக் கொண்டார். அந்த உள்ளீர்ப்பு எங்க அம்மாட தெறமை...அவருக்கேத்த வாழ்க்கை...அதுக்கு எங்களயும் பழக்கப்படுத்தி,,,,,

அப்பாவ தட்டிக் கேக்காம ரொம்பத்தான் சுதந்திரம் கொடுத்துட்டா அம்மா.. அதனாலதான் அவருக்கென்று தனிராஜ்யம்... யாருமே அத தட்டிக் கேக் முடியாது.. லேசா அதுக்குள்ள யாரையும் உள்ள விடவும் மாட்டார். தனக்குப் புடிச்சா அவங்களுக்காக தன்னோட உசுறயும் கொடுப்பார்.. ( வாழ்க சுயநலம்)

என்னோட சின்னக்கால வாழ்க்கய நெனைச்சா அவர்கிட்ட நெறைய அடி வாங்கியிருக்கிறேன்.. றோட்டுல விரட்டி விரட்டி செம்பரத்தை தடி பிய்ச்சி விளாசியிருக்கிறார்.  அப்படி அடிச்சு வார காயத்தில இருந்து ரெத்தம் வந்தா கண்டுக்கவே மாட்டார். ஆனா கோபம் போனதும் அந்த கல்லுக்குள்ள கொஞ்சம் ஈரம் கசியும்.. மருந்து கட்டுவார். ஏதாவது தின்ன வாங்கி தருவார் அடிச்சதுக்கு இலஞ்சமா........

ரொம்ப சந்தேகம் புடிச்ச மனுஷர். எதையாவது தானே மறந்து வச்சுட்டு நாங்க எடுத்தததா பட்டோலை வாசிப்பார். எடுக்கலன்னு சொன்னா போதும்..அந்த இரவு சிவராத்திரிதான்..அவரோட நடவடிக்கைகள் ரொம்ப ரொம்ப மனச பாதிச்சுது. ஆம்புளைங்க இப்படித்தான் இருப்பாங்களோனு பீதியில என்னோட வாழ்க்கையும்  ஆடிப்போச்சு...அவர் நெனைக்கிறத நாங்க செய்து முடிக்கனும். அதுக்கு எங்களுக்கு சக்தி இருக்கா இல்லையானுகூட பார்க்கமாட்டார்.

அப்பா வீசுற குப்பயகூட தொடமாட்டோம். அத எடுத்து வீசினா...............அவ்வளவுதான். அவரா தூக்கி எறிஞ்சாத்தான் உண்டு.

வளர்ந்தோம். உடல்களைப் போல மன உணர்வுகளும் மாற்றமடைந்தன. சாதாரண பொண்ணுங்களுக்கு இருக்கிற எல்லா ஆசைகளும் லேசா முள விட்டுது. எனக்கு அழகியல் ரசனை ரொம்ப அதிகம். அதனால வீட்ட அழகா வச்சிருக்க ரொம்ப ஆசப்படுவேன். இல்ல போராடுவேன்.......ஆனா அப்பா அதுக்கு இடம்தர மாட்டார். வீட்டில தன்னோட சாமான்கள அங்கேயும் இங்கேயும் பரத்தி அசிங்கப்படுத்தி விடுவார். ஏதாவது அத விமர்ச்சிச்சா ரொம்ப சத்தம் போடுவார்..

"இது என்னோட வீடு... நான்தான் வாடகை குடுக்கிறன். இஷ்டம் இருந்தா இருங்க இல்லைன்னா போயிட்டே இருங்க"

எங்க தன்மானத்தோட அவரோட வார்த்தைகள் தைரியமா விளையாடும். ஏன்னா அவருக்கு தெரியும் அவர விட்டு நாங்க போக மாட்டம்னு....

சின்னப் புள்ளயா இருக்கும்போது மௌனமா இருந்த என் உதடுகள் இப்போ அவர் வேணும் என்று எங்ககிட்ட குற கண்டுபிடிக்கும்போது...
நியாயத்திற்கு வாதாடுது. இதனால அவரோட எதிரி பட்டியல்ல மூத்த புள்ள நான் இருக்கிறன்....

குடும்பம் ஒரு கதம்பம்னு சொல்லுவாங்க...ஆனா எங்க வீட்டுல அது கலவரம்... வீட்ட இருக்கவே பிடிக்காது. ஆனா என்ன செய்யுறது பொம்புளப் புள்ளங்க வீதியோரத்துக்கு போக ஏலாதே!.......

தான் புடிச்ச முயலுக்கு மூணுகால்னு வாதாடுற இவர்கூட  சமாளிச்சு வாழ அம்மா  பழகிட்டாங்க... ஆனால் எனக்கு.....

இப்பவெல்லாம் கோபம்  ரொம்ப வருது..   முகத்துக்கு முன்னால தவறுகள சுட்டிக் காட்டி வாங்கிக் கட்டுறன். ஆனால் இப்ப அவரால எங்கள அடிக்க முடியாது. வயசாகிடுச்சு....அந்த முதுமை அவர்ட செயல்திறனைக் குறச்சிடுச்சு. அது இயற்கைனு ஒத்துக்க மாட்டார். அதுக்கும் நாங்கதான் காரணம்னு சத்தம் போட்டு  ஊர்ட முன்னாடி எங்கள நாறடிக்கிறது அவருக்கு ரொம்ப பிடிக்கும்...

அவர்ட செயல்கள பார்த்தா அவர் சாதாரண அப்பா  இல்லைனு புரியும். ஆனால் அவர்கூட இருந்தா சீக்கிரம் மனநிலை பாதிக்கும். அந்தளவுக்கு மனச வக்கிரமா  நோகடிப்பார்.

அடுத்தவங்க பாராட்டுற எங்க திறமைகளக் கூட அவர் மட்டம் தட்டுவார். ஏற்க மாட்டார். அதனாலதான் என்னவோ வாழ்க்கை சவால சாதிக்கணும் என்ற வெறியோட எங்க பயணம் தொடருது..

வீட்டில யாரும் சந்தோசமா சிரிச்சு பேசக்கூடாது.. வானொலி , ரீவி கூட அவர் விரும்பினாத்தான்........ரோபோக்களா  படைக்கப்பட வேண்டிய நாங்க மனுஷ ரூபத்தில சில உணர்ச்சிகளோட பொறந்திட்டம். அதுதான் இப்ப பிரச்சினை...

இந்த அப்பா எங்களுக்கேத்தபடி மாற மாட்டாரா என்று ஏக்கம் சுமந்து வாழ்ந்த பல கணங்கள் அழிஞ்சு போச்சு..வாழ்க்கை வேகமா ஓடிட்டு இருக்கு. ஆனால் நாங்களோ இன்னும் ஒரு மைல்கல்ல கூட தொடாம........

இது என்னோட அப்பாட குணத்த விமர்சிக்கிற பதிவு அல்ல.. அவர்ட குணமுள்ள அப்பாக்கள் தங்கள மாத்தனும் என்ர நப்பாசைக்கான பதிவு!

அவர் சிங்கம்.........தனிக்காட்டு ராஜா..யாருக்கும் கட்டுப்படாத அஞ்சா நெஞ்சன். ஆனால் அவரச் சூழ யாருமற்ற ஒரு மயானம் உருவாகியிருப்பதைக்கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தனக்காக மட்டும்........

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை