செவ்விதழ் அதரம் நுகர்ந்து
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
செந்நிற திருமாங்கல்யம் சூட்டி
திரையிட்டாய் என்னை உன்னுள்
இறைசாட்சியுடன்!
என்னிரவிலும் உலாவும்
பகலவன் நீயாயினன் - மன
அகிலத்தின் உயிருமாயினன்!
கணையாழி யிலுனைப் பூட்டி
இணையாகினாய் பல நாழி!
உன் துணை நானென இறைவன் படைக்கையில்
அனலிட்ட மெழுகாய் அவஸ்தையுமேனோ!
சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவக் காதலை....
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!
இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் ஆவியும் தொலைந்தது!
கருவளையும் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்து தவித்தது!
நம் பனிப்போரின் அறைகூவல்
ஓயவில்லையின்னும்
நானோ உன் சொப்பனத்தின் கதவருகே
காத்திருக்கின்றேன்-நீயோ
செவிடாக வேடம் தரிக்கின்றாய்
அற்புதமாய்!
காதல்
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்து கொள்
அழகான வாழ்க்கை நம் கையில்!
Jancy Caffoor
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!