ஆரோரோ
ஆரிவரோ
தங்க பௌர்ணமியே
தாய் மடியில் கண்ணுறங்கு!
தாலி தந்த பூவரசே
செல்லச் சிணுங்கலடங்கி
சீக்கிரமாய் கண்ணுறங்கு!
அப்பன் இங்கிருந்தா
அஞ்சு காசு கொண்டு வரும்!
நெசமா நானுனக்கு
நெறைய சாமான் வாங்கிடலாம்!
ஆத்துல பசி தீர்க்க
அரிசிக் கஞ்சி ஏதுமில்லை!
நாக்கும் வறளுதப்பா
நல்ல தண்ணி தொலைவிலப்பா!
ஏழையாப் பொறந்தாலே
ஏழு ஜென்மமும் கண்ணீரல்லோ!
பாட்டால படிச்சாக்கா
பட்ட துன்பம் போயிடுமோ!
குடிசைல விளக்கில்லை
குஞ்சு மகன் கண்ணுதானே விடிவிளக்கு!
பகலெல்லாம் வெளிச்சம் தரும்
பகலவனும் நீதான்டா!
நேரங்கெட்ட நேரத்தில
நெடுநேரம் அழுதிட்டா
சாதி சனம் வீடெல்லாம்
சாமத்திலும் விளக்கெரியும்!
சின்ன நிலவே
நீயும் அழுதிட்டால்
பெத்த மனம் ரணமாகும்
உன் கண்ணு கூட ரணமாகும்!
Jancy Caffoor
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!