About Me

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

2013/04/12

தவறுகள் உணரப்படும் போது



ஞாயிற்றுக்கிழமை பொதுவாக எல்லோருக்கும் விடுமுறைதான்...

ஆனால் அனுஜாவுக்கு............

மனசின் வலிப்புடன் உடலும் லேசாய் அலுத்தது. வீட்டுவேலை எல்லாம் அவள் தலையில் மலை போல குவிந்து கிடந்தது. முன் ஹாலில் அன்றைய வாரப் பத்திரிகையை சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து மனது கொதித்தது.

"சே..........இன்னைக்கு ஒரு நாளாவது கொஞ்சம் உதவி செய்யலாம்தானே, நேரத்துக்கு தின்ன மட்டும் வாங்க"

புறுபுறுத்தாள் அனுஜா....

"அநு .................என்ன ஏதோ பேசுற மாதிரி இருக்கு, எனக்கா"

கணவன் கேட்ட போது ஆத்திரத்தில் உதடு துடித்தது. உண்மையை சொல்லப் போக, அவனும் கொஞ்சம் கோபக்காரன் கையை நீட்டினானென்றால், அப்புறம் அக்கம்பக்க மனுஷங்க கிட்ட இந்த வீட்டு மானம் கப்பலேறி போய் விடும்" மௌனம் காத்தாள்.

"அநு" நான் கேட்டதற்கு பதில் இன்னும் வரல............"

அவனும் விடுவதாக இல்லை.

"இவரு பெரிய்ய்ய்ய ஜட்ஜ்.....தீர்ப்புச் சொல்லப் போறாராம்..." 

மீண்டும் முணுமுணுத்தாள்........

"என்னோட தலைவிதிய நெனைச்சு பொழம்புற, உங்கள காதலிச்சு கல்யாணம் முடிச்சதற்குப் பதிலாய விறகுக் கட்டைய முடிச்சிருக்கலாம். கறி சமைக்கவாவது உதவும்"

மனசு கண்ணீருடன் கரைந்திருக்கும் நேரம், வீட்டின் ஹாலிங் பெல் அடித்த போது, கணவன் வெளியே எட்டிப் பார்த்து, உற்சாகமாகக் கூவினான்..

"வாவ்.......மச்சான், என்னடா இந்தப் பக்கம், அநு.அநு......இன்னைக்கு மச்சானுக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு"

நண்பனின் மீதுள்ள பாசம் கட்டளையாக இறுக்க, திணறிப் போனாள். 

"தனியொருத்தியாக வீட்டுவேலை செய்ய முடியாம புலம்பிக் கொண்டு இருக்கிறன், அதுக்குள்ள விருந்தோம்பல்"

எரிச்சல் ஆத்திரமாக மாற, அது அவள் செய்யும் வேலைகளில் பட்டுத் தெறித்தது. சமையல் பாத்திரங்கள் ஓசை எழுப்பின.

"மச்சான், உன் பொண்டாட்டி ரொம்ப சூடா இருக்கிறாள் போல, கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக் குடுக்கலாம்ல"

நண்பன் ஆதங்கப்பட்ட போது, மெல்லிய சுவாசத்துடன் அவள் கணவன் மறுதலித்தான் .

" அட....போடா....நீ ஒன்னு .....இந்த வீட்டு வேலைங்க எல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம்..அப்புறம் நம்ம கணக்கெடுக்க மாட்டாள்களடா...நான் அவளுக்கு இன்னைக்கு பாவம் பார்த்து ஹெல்ப் பண்ணப் போனால், டெய்லி எனக்கு ஏதாவது வேல வைப்பாள்டா....படிச்ச பொண்டாட்டின்னா கொழுப்பு ஜாஸ்திடா....நீ கல்யாணம் முடிச்ச பொறகு விளங்கும் பொண்ணாட்டின்னா எப்படியிருப்பான்னு"

அவன் சொல்லி முடிப்பதற்குள் மகள் சிந்துஜா அழும் சப்தம், அக் ஹோலை நிறைத்தது.

"அநு............ஏன் கொழந்தய அடிக்கிறே" சற்று குரலை இறுக்கினான்..

"உங்க மாதிரித்தான் உங்க பொண்ணும், இங்க வந்து பாருங்க, அடுக்கி வைச்ச எல்லாச் சாமான்களையும் இழுத்து கீழ போட்டு அசிங்கப்படுத்துறாள்"

கணவன் மீதுள்ள ஆத்திரத்தை தனது ஆறு வயது மகளிடம் அனுஜா காட்ட, மகளின் அழுகைச் சத்தம் வீதி வரை பரவியது.............

அவர்களது குடும்ப விவகாரம் உச்சக் கட்டமடையும் நிலையில், நண்பனோ நாசூக்காக வெளியேறினான்...

"சொறீடா மச்சான், நான் வந்த நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறன். இன்னுமொரு நாளைக்கு வாரேன்டா"

வெளியேறினான்..

அப்பொழுதும் அனுஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. கைகள் பலமடைந்ததைப் போன்ற உணர்வில், மகளின் முதுகில் கைவிரல்கள் வேகமாகப் பதியத் தொடங்கின.

"அம்மா......................"

குழந்தை விடாமல் உரத்து அழுதாள் ........................கதறினாள்...

மகள் மீதுள்ள அன்பும், நண்பனின் வெளியேற்றமும் மனைவி மீது கோபத்தை தாராளமாக இறைக்க, விருட்டென்று உள் நுழைந்து அனுஜாவின் கன்னத்தில் பலமான அறைகளை இறக்கினான்

"இது வீடா.....இல்ல சுடுகாடா......எப்ப பார்த்தாலும் புலம்பல்"

அவன் மேலும் அவளை அடிக்க முனைந்த போது மகள் தடுத்தவாறே கதறினாள்...

"அப்பா.....வேணாம்பா.....அம்மாவ அடிக்காதீங்கப்பா.........அம்மா பாவம்"

தன் வேதனை, வலியை விட பெத்தவள் துன்பப்படுவாளென்று கதறும் தன் மகளை மார்போடணைத்தவாறு அனுஜா கண்ணீர் சிந்தினாள்...

"சொறீடா...செல்லம், அம்மா இனி உன்னை அடிக்க மாட்டன்"

தன் குழந்தையை ஆரத் தழுவி முத்தமிட்டு அணைத்த அனுஜா நிமிர்ந்த போது கணவன் எதிரே நின்றான். அவசரமாய் அவன் மீது குத்திட்டு நின்ற தனது பார்வையை வேறு திசையை நோக்கி நகர்த்த முற்பட்ட போதும்,

அவன் பாய்ந்து வந்து அனுஜாவையும், மகளையும் ஆரத் தழுவினான்......

"சொறீடி செல்லம், நானும் உனக்கு அவசரப்பட்டு அடித்திருக்கக் கூடாது"

அவனது குரலும் தழுதழுத்தது. மகளறியாமல் மனைவியின் கன்னத்தை தனது முத்தத்தை இரகஸியமாகப் பதிக்கத் தொடங்கினான் அவன்..

(குடும்பம் என்றால் இப்படித்தாங்க......அடிச்சுக்குவாங்க, அப்புறம் கட்டிப் பிடிச்சுக்குவாங்க...என்ன நான் சொல்லுறது சரிதானே........கோபம் வாறது தப்பில்லீங்க, கோபம் வந்தாத்தான் அவன் மனுஷன். ஆனா அந்த கோபம் குறைஞ்ச பிறகு தன் தவற உணராம இருக்கிறாங்க பாருங்க அதுதான் தவறு)

2013/04/10

மனைவி அமைவதெல்லாம்



"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

வானொலியில் ஜேசுதாஸ் அழகாகப் பாடுகின்றார். பாடலை ரொம்ப சுவாரஸியமாக ரசித்து மூழ்கிக் கிடக்கின்றான் ராஜா.......

"தம்பி நாங்க ரெடிப்பா..........டயம் ஆயிட்டுது"

அம்மா அவசரப்படுத்துகின்றபோதும், அந்த பாட
லின் லயிப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

வாசலில் கார் வந்து நிற்கின்ற ஓசை மெதுவாக அதிர்கின்ற போது அம்மா இன்னும் பரபரப்பாகின்றாள்.

"டேய் அப்பா வந்தா என்னத்தான்டா ஏசுவார்... சீக்கிரம் வாடா"

அம்மாவின் அவசரம், அப்பாவின் எதிர்பார்ப்பு எதுவுமே அவனிடம் எடுபடவில்லை. மெதுவாக தன்னை ஆயத்தப்படுத்துகின்றான்..

"அம்மா...அண்ணா ரெடியாகிட்டானா"

தங்கையும் தனது பங்கிற்கு குரல் கொடுத்த போது, அதுவரையிருந்த பொறுமை அறுந்தது...

"என்னடி ..ரொம்பதான் அலட்டிக்கிறீங்க.....இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறது எனக்கு...உங்கட அவசரத்திற்காக என் வாழ்க்கையை பலியாக்க மாட்டேன், புரிஞ்சுக்கோ, என் இலட்சிய மனைவிய சந்திக்கப் போறன் இன்னைக்கு"

வாய்க்குள் சிரித்தான் அவன்....

"ம்ம்..பெரிய்ய்ய்ய்ய்......இவரு......உலகத்தில இவரு மட்டும்தான் இலட்சியத்துக்காக கல்யாணம் முடிக்கிற மாதிரி"

அவர்களின் உணர்வலைகளை தந்தையின் குரல் தடுத்து நிற்க, அவனின் பொண்ணு பார்க்கும் பயணம் தொடர்ந்தது..

கார் உரிய இடத்தை நின்ற போது, அவனுக்கு மலைப்பாக இருந்தது. பெரிய இடத்துச் சம்பந்தம்..அப்பா தன் வசதிக்கு ஏற்ற பொண்ணத்தான் தெரிவு செய்திருக்கிறார்.....வருங்காலக் கனவு மெல்ல திரை விரித்தது.

மனசுக்குள் மகிழ்வு முகிழ்க்கும் போது சந்தியா கண்ணீருடன் எட்டிப் பார்த்தாள்.

மூன்று வருட முகநூல் காதல்........!

உயிர் , உணர்வுடன் பிணைந்து பல டயலாக் பேசி, கடைசியில் அவள் ஏழை என்றதும் காணாமல் போன தன் சுயநலம் சற்று வலித்தது.

"சொறீடி....சந்து, எனக்கு வேற வழியில்ல....காதல் கத்தரிக்காயெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது"

கடந்து போன காலத்தை மீண்டும் தனக்குள் வெளிக்கிளம்பாமல் தடுத்தவாறு, மெல்ல தன் தலையை நிமிர்த்தினான்...

தனக்கு தேநீர் கோப்பையை நீட்டிக் கொண்டிருக்கும் வருங்காலத்தை நேரில் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு எகிறிக் குதிக்க................

அவள் பார்வையில் இவன் பார்வை மோதி நின்றபோது..................

"சந்தியா"

அதிர்ந்தான்.....அவளேதான்...

அப்போ........நீ........நீ!

"நானோதான் நீங்க வேணாமென்று சொன்ன அவளேதான், வாழ்க்கையில பணம் வேண்டும்தான் ஆனால் அதுல வெறி இருக்கக்கூடாது. உங்களப் பற்றி அறியத்தான் நான் ஏழைன்னு பொய் சொன்னேன். பணமில்லாதவங்ககிட்ட பாசமோ உணர்ச்சியோ இருக்காதுன்னு நெனைக்கிறீங்களா, "

அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கூறியவள், எல்லோருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் கூறினாள்..........

"அப்பா எனக்கு இவரப் பிடிக்கல"

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

பாடல் எங்கோ ஒலிக்கும் பிரமை!



2012/09/10

கப்பலுக்கு போகல மச்சான்


சனக்கூட்டத்தை திணித்துக் கொண்டு வந்த பேரூந்து, அநுராதபுர புதிய பஸ் நிலையத்தில் தன தியக்கத்தை நிறுத்தியது.

"அன்ராதபுர..அன்ராதபுர......கட்டி ஒக்கோம f பஹின்ட"

பஸ் நடத்துனரின் உரப்பொலியும் ஓய்ந்தொழித்த போது, எல்லோரும் முண்டியடித்தவாறு இறங்க முற்பட்டனர். அந்த அலைக்குள் ராசீதாவும்  நசிந்தபோது, அவள் மார்பில் அணைந்தவாறு கிடந்த ஆறுமாதக் குழந்தையும் வீலென்றழுது தன்னெதிர்ப்பைக் காட்டியது..

"இக்மன் கரண்ட" 

பஸ் நடத்துனர் துரிதப்படுத்திய போது அவளுக்குள் எரிச்சல் முட்டியது...

"சீ..சீ.......எறங்கும் போதாவது அமைதியா எறங்க விடுறாங்களா"

தனக்குள் சலித்தவாறு நிலத்தில் காலூன்றினாள்..........!

அநுராதபுர நவ நகரய...........!

விசாலமாக கரம் நீட்டி அவளையும் வரவேற்றது. தோளோடு ஒட்டிக்கிடந்த சுருங்கிய தோற்பையைத் தொட்டுப் பார்த்தாள்..அந்தப் பைக்குள்தான் அவள் முழு உலகமும் சுருங்கிக் கிடந்தது..

இனிவரும் நாட்களில் அவள் வாழ்வை நகர்த்தப் போகும் சில சில்லறைக் காசுகளும்,  தாள்களும் சிரிப்பை உதிர்த்து தம்மிருப்பை வெளிப்படுத்தின.

புதிய ஊர்......
புதுப் பாஷை....
புதிய மக்கள்.....

என்ன தைரியத்தில் யாரை நம்பி இங்கே வந்தாள்.......படைத்தவன் மட்டுமே அவள்  துணையாக......மனிதர்கள் யாவரும் வேற்றவர்களாக............

கண் கசிந்தது. யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் சுருண்டு கிடந்த குழந்தை பசியால்  அழத் தொடங்கியது..
இறைவன் கொடுத்த அந்த இயற்கைத் திரவத்தைத் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில்  அமர்ந்து கொள்ள ஒதுக்கிடம் தேடினாள்..

சற்றுத் தொலைவில்...........

மூடப்பட்டிருந்த கடையொன்றின் ஓரமாக சிறிய மறைப்பொன்று தெரியவே அதிலமர்ந்து கொண்டாள்...

முந்தனை விலக்கி தன் குழந்தையை நெஞ்சோடணைத்து பாலூட்டத் தொடங்கினாள். தன் பசி நீங்கும் மகிழ்வில் குழந்தை அவளை மெதுவாகத் தடவி புன்னகைத்தது.

"ராசீதா"

மனம் அதுவரை அடக்கி வைத்திருந்த துயரம் பீறிட்டுப் பாய மெதுவாக குலுங்கினாள். அவள் குலுக்கத்தில் குழந்தையும் ஒரு தடவை துடித்து நிமிர்ந்தது.

"அக்தார்"

அவன்தான் அவளுக்கு வாழ்வளித்த உத்தமன். படிக்கும் காலத்தில் அறிமுகமானவன். காதலென்று அவள் பின்னால் ஐந்து வருடம் பின் சுற்றினான். அவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் பிடிக்காது என்று சும்மா ஒதுங்கினாலும் கூட அவளை விடவில்லை. க.பொ.த (சா/த )படிக்கும் வரை துரத்தினான்.

இந்தக் காலக் காதலர்களெல்லாம், தம் ஒருதலைக் காதலை நியாயப்படுத்த முன்வைக்கும் ஆயுதம், அவளும் தன்னைக் காதலிக்கிறாளென்று உருவகப்படுத்தி, தன் நண்பர்கள் உலகத்தில் உலவ விட்டு அவள் பெயரை களங்கப்படுத்துவதுதான்!. அக்தர் அதனையும் செய்து பார்த்தான். ஆனால் அவளோ அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. படிப்பில் முழுக்கவனமும் செலுத்தி  பொதுப் பரீட்சையில் பாடசாலையில் முதலிடத்தில் வர  அவனோ பரீட்சையில் பெயிலாகி நின்றான்.

"ராசீதா" 

ஏழ்மைப்பட்டவள். வடபகுதியிலிருந்து யுத்தத்தால் தாக்கப்பட்டவளாய் தன் தாயுடன் அடைக்கலமாகி, புத்தளத்திற்கு வந்து சேர்ந்தவள். ஷெல்லடியில் வாப்பாவும், காக்காவும் மௌத்தாக  உம்மாவே அவளது சகலதுமாகி நின்றாள். தெரிந்த நாலு வீடுகளுக்குப் போய் பாத்திரம் தேய்த்து கிடைத்த சொற்ப வருமானத்திலும்  கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்ததால் அவளும் காதல் அது இதுன்னு வாலிபச் சேட்டைக்கிடம் கொடுக்கவில்லை. பொறுப்புணர்ந்து படித்ததில் அக்தாரை விலக்க அவனும் அவள் நல்ல மனம் புரிந்தும் விடுவதாக இல்லை.

நம்பிக்கையுடன் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் காலூன்றியவளுக்கு ஆறு மாதம் கூட போகாத நிலையில் வறுமைப்பட்டு நொந்து போன தாயும் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகவே ராசீதாவின் கனவுகளும் அறுந்தன. தாய்வழி உறவினர் அவளைப் பொறுப்பெடுத்தாலும் அவர்களைச் சிரமப்படுத்தி கல்வியைத் தொடர அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. பாதிவழியே படிப்பும் நிற்க அதுவரை சந்தர்ப்பம் பார்த்திருந்த அக்தார் தன் காதல் மிகை வேட்கையில் பெண் கேட்க, அவர்களும் அவள் விருப்பம் கூட அறியாத நிலையில் அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர்.

அக்தார் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். தன் காதல் மனைவிக்கு அவனளித்த இல்லறப் பரிசு கர்ப்பமே. திருமணமாகிய முதல் மாதத்திலேயே அவனின் அன்பு, காமம், ஆசை எல்லாமே சிசுவாய் அவள் கர்ப்பத்தை தொட்டது. அவள் தாய்மையும், அவனது கவனிப்பும் அவளை நெகிழச்செய்யவே, அக்தாரின் அன்பு மனைவியாக வலம் வரத் தொடங்கினாள்..

அக்தாரிடமுள்ள கெட்ட பழக்கம், கஷ்டப்பட்ட உழைப்பதில் ஆர்வங் காட்டாதவனாக இருந்தான். பல்கலைக்கழகப் பட்டம் முடித்தவர்களே இக்காலத்தில் தொழிலுக்காக காத்திருக்கையில், கொஞ்சப் படிப்புடன் பெரிய அரச வேலைக்காய் இலவு காத்திருந்தான்.

அவள் எவ்வளவு கூறியும் கூட, அவன் அதனை வாங்கிக் கொள்ளவில்லை. வறுமை அவர்களைக் கொடுமைப்படுத்தியது. வளர்பிறையாகும் வயிற்றுக்குமுரிய தீனி போட அவளால் முடியவில்லை. அவள் படிக்கும் காலத்தில் படித்த தையல்கலை கைகொடுக்கவே, அயலாருக்குத் தைத்து கொடுத்து ஏதோ காலத்தை ஓட்டினாள். அவள் தயவில் அவன் சற்றுக்கூட பொறுப்பின்றி பல மாதங்களை ஓட்டிய நிலையில், அவள் பிரசவ காலமும் நெருங்கியது. தையல் மெசின் அவளை வராதே என விரட்ட, மீண்டும் அவள் வீட்டு அடுப்புக்கும் பசி இரைத்தது..

ஓரிரு நண்பர்களின் ஆலோசனையில் வெளிநாடு செல்ல முயற்சித்தான். அவளிடமிருந்த தோடும் விற்பனையாக, அந்தப் பணமும் ஏஜன்சியை சந்திப்பதில் கரைந்தது.

ஏஜென்சி நடத்துபவன் அவனது தூரத்து உறவுக்காரன். அவனது குடும்ப நிலை தெரிந்தவன். அதுவரை அவனுக்குள் ளுரைக்காத ஆலோசனையை பக்குவமாக எடுத்துக் கொட்டினான்.

"டேய்.கைல அஞ்சு காசில்லாத உனக்கெல்லாம் சீமை சரிப்பட்டு வராதடா...பொண்டாட்டி வீட்டிலதானே இருக்காள். அவள அங்க அனுப்பிட்டு ராசா மாதிரி தின்பியா, நீ மாடா தேய்வியா............டேய் அவ என்ன ஜமீன் வாரிசா. ஒன்னுக்கும் வக்கில்லாம பத்துப்பாத்திரம் தேய்ச்சு வந்த காசில வளர்ந்த பரதேசி. அஞ்சு பைசா வேணாம். நல்ல எடமொன்று இருக்கு அனுப்பு. நான் ஹெல்ப் பண்ணுறன்"

அவன் ஏற்றல் நன்கு வேலை செய்ய பல கனவுகளுடன் வீடுசென்ற அக்தார் தன்னாசையை அவள் முன் கொட்டினான். அப்போது அவள் மகளுக்கு ஒருமாதம் கூட கழியவில்லை..ஆத்திரப்பட்டாள்.

"உங்களுக்கென்ன விசரே.........பச்சப்புள்ள இத விட்டுட்டு, அந்த பாலை வனத்துக்கு நான் போக ஏலா..........."

அவள் பிடிவாதமும் தொடர, அவனது கோபமும் உஷ்ணமடைய....... வாக்குவாதமும், முரண்பாடுகளும் நாளுக்கு நாள் வளர்ந்தது. யாரிடமோ புதிதாக கற்றுக்கொண்ட சிகரெட்டும், மதுப் பாவனையும் அவளை இம்சித்தது. குடித்துவிட்டு அடிப்பதும் சிகரெட்டால் அவள் கைகளை கருக்குவதும் அவன் வாடிக்கையாகி விடவே துடித்தாள். சில காலம் வசந்தம் பூத்த வாழ்க்கை கருகிப் போகவே, விரக்தியோடு நடைப்பிணமானாள்.

ஒருநாள்.......
அவன் கோபம் உச்சமடையவே, சற்று போதையில் அவளை நெருங்கினான். அவள் தலைமுடிக் கொத்து அவன் பிடியில்!

"சொல்லடீ....வெளில போக சம்மதிக்கிறியா.....இல்லையா"

உறுமினான். அவளும் தன் பிடியிலிருந்து தளரவில்லை.

"இந்தப்  பச்சப்புள்ளய விட்டுட்டு  நான் போக மாட்டேன்"


"போக மாட்டே....போக மாட்டே"


தன் முழு ஆத்திரத்தையும் ஒன்று திணித்து, அவளை உதைக்க அவள் சுருண்டு போய் குழந்தையுடன் சுவரில் மோதுப்பட்டு  விழுந்தாள். குழந்தை அழுதது விறைத்தது.

அவள் நெற்றி சுவருடன் உரசியதில், லேசாய் இரத்தம் கசிந்தது. வலியை விட, அவனது வார்த்தைகள் வலித்தன. மௌனத்தில் இறுகிக் கிடந்தாள்...........

"என்னடி திமிரா.......இனி இந்த வீட்டில உனக்கிடமில்லை"

தரதரவென்று அவளையும், அவள் பிடியில் இறுகிக் கிடந்த குழந்தையையும் வெளியே இழுத்துப் போட்டவனாக கதவை மூடினான்....

இப்பொழுதெல்லாம் காதல் அன்பில் எழுதப்படுவதில்லை. அவசரத்திலும் வெறும் உணர்ச்சியிலும் தானே எழுதப்படுகின்றது..

அவளை நோக்கி வீசப்பட்ட, அயலாரின் அனுதாபப் பார்வைகளைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. வீதியில் வேகமாக இறங்கினாள்...!

"ராசீகா.." நில்லடி!

பக்கத்து வீட்டு கசீனா ராத்தா விம்மலுடன் அவளிடம் ஓடி வந்தாள்..."

எங்கேயடி போவே.............பச்ச ஒடம்பு........இன்னும் நாப்பது கூட போகல........என் வூட்டுக்கு வாடி நான் ஒனக்கு சோறு போடுறன்"

பாசத்தில் கரைந்தாள் யாரோ ஒருத்தி..........!

"இல்ல ராத்தா......நான் போறன்.....அந்த மனுஷன் மூஞ்சில முழிக்க எனக்கு இஷ்டமில்ல...அவனெல்லாம் மனுஷனா....சீ"

ஆத்திரத்தில் நா குளற, அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்..

அவள் பிடிவாதமும், அவனின் முரட்டுத்தனமும் கசீனாவுக்குப் புரியும் என்பதால் எதுவுமே பேசல......

தான் கொண்டு வந்த சீலைப்பையையும், சில தாள் நோட்டுக்களையும் அவளிடம் திணித்தாள்.

 "இதுல புள்ளக்கு பால்போச்சியும் மாவும் இருக்கு, "

" ராத்தா.......உங்களுக்கு நான்..............." 

ராசீதாவின் வார்த்தைகள் அற அழுதவளாக வேகமாக எப்படித்தான் புத்தளம் பஸ் நிலையத்தையடைந்தாளோ!

எங்கே போவது..............யாரைத் தெரியும்..................!

பயங்கரம் மனசுக்குள் பிறாண்டும் நேரம், அநுராதபுர பஸ்ஸின்  வருகை அவள் சிந்தனையை அறுக்கவே, அவசரமாக அப் பேரூந்தில் தொற்றிக் கொண்டாள்...

பக்கத்து ஊர்...
யாராவது நல்லவங்க இல்லாமலா போவாங்க.........
நம்பிக்கையுடன் அவளும் பஸ் உள்ளிடத்தை நிறைத்தாள்.

"ஒயா கவுத"

குரலொன்று சிந்தனையை அறுக்க பார்வையை அவசரமாக உயர்த்தினாள். கடை முதலாளி போல் கடை திறக்கணும் அப்பால போ எனப் பார்வையால் விரட்டுவதை உணர்ந்தாள்.

எங்கே போவது.........யாரைத் தெரியும்.............இந்த ஊரில்!
படைத்தவனைத் தவிர!

பல சிந்தனைகளுடன் வீதியில் நடக்கத் தொடங்கினாள் யாராவது அவளுக்கும் அவளது குழந்தைக்கும் அடைக்கலம் தருவார்களென்ற மலையளவு நம்பிக்கை மட்டும் அவள் யாசக வாழ்வின் முதலீடாகிக் கிடந்தது

(கரு நிஜம்)


2012/09/01

குறிஞ்சிப்பாட்டுக் காதல்



உண்மையில் காதலென்பது ஓர் வசீகர உணர்வு. இவ்வுணர்வுக்குள் மதிமயங்கும் ஆன்மாக்கள், தம் புறவுலகை மறந்து சொர்க்கபுரியாக விளங்கும் காதலுலகினுள் அமிழ்ந்து விடுகின்றனர். நண்பர்கள், உறவினர், குடும்பம் சுற்றுப்புறம் யாவருமே அந்நியமாக தாம் நேசம் கொண்டவரையே, தம் உலகாக வரித்து வாழ முற்படுகின்றனர். காதல் போற்றும் பல இலக்கியங்களிலும் இப்பண்பு சிதைக்கப்படுவதில்லை. கவிகளினூடாக புலவர்கள் இவற்றை அழகாக எடுத்தியம்புகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டின் பத்துப் பாடல்களுள் ஒரு பாடலைத் தெரிவு செய்தேன். அதில் ஒளிந்திருக்கும் காதலின் சிலிர்ப்பைக் கண்டு  நானும் உவத்து, ரசித்து அதனை உங்கள் பார்வைக்குள்ளும் எத்திவைக்கின்றேன் இதோ .

தலைவியின் அன்பான காதலையும், ஆழமான உணர்வோட்டத்தையும், நாமும் ரசிக்கலாம்..........ரசிப்போமா! 

இங்கு புலவர் சொன்ன தன்கூற்று  நடையை என் மொழி வழக்கில் பிறர் கூற்றாக்கி மாற்றி புலவரின் கவிக் கரு சிதையாமல் என் மொழிநடையில் உங்களை அழைத்துச் செல்கின்றேன் இந் நாயகியை தரிசிக்க.......... 

மென்மையான தலைப் பகுதியைக் கொண்ட வளைந்த பெரிய கதிர்களைக் கொண்ட தினையை திண்பதற்காக வரும் கிளி போன்ற பறவைகளை விரட்டும் காவலில் ஈடுபடுவதற்காக ஆரவாரமிக்க மரத்தின் மேல் பரண் ஒன்றையமைத்து அதிலமர்ந்து எந்த கருவியில் எப்படி இசைத்தால் பறவைகள் விரண்டோடுமோ அவ்வாறு அதற்குரிய சில இசைக்கருவிகளான தழல், தட்டை, குளிறு , கவண் போன்ற இசைக்கருவிகளால் இசையெழுப்பிக் கொண்டிருந்தாள் தலைவி . அது  வெப்பமான உச்சிப் பொழுது. அவளெழுப்பிய ஒலி கேட்டு கிளிகள் மிரண்டோடின. அந்நண்பகல் நேரம் வெப்பப் பொழுது திடீரென மாற்றம் பெற, இடி, மின்னலுடன் கூடிய  மழை மலையின் மீது பெய்தது. தலைவியும் அவள் தோழியும் நனைந்தனர். ஆனால் அந்நனைவு அவர்களுள் மகிழ்வைப் பிரட்டிக் கொடுத்தது.

மலையுச்சியிலிருந்து பளிங்கினைச் சொரிவதைப் போல் வீழும் வெள்ளருவியில் அவர்கள் மனமகிழ்ந்து ஆடிப்பாடினார்கள். அவளோ கூந்தல் கவர்ந்தெடுத்த நீரினைப் பிழிந்து ஈரம் உலர்த்தி மீண்டும் மீண்டும் நீரிலே விளையடியதால் அவள் கண் உள்ளிடமெல்லாம் சிவந்தது.

மழை நின்ற பொழுதில் அந்த அடர்ந்த காட்டின் பல பகுதிகளிலும் மனமகிழ்ச்சியோடு உலாவித் திரிந்து  ஆசையோடு பல மலர்களைப் பறித்து மழை பெய்ததால் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட அகன்ற மலைப் பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தாள். குறுக்கிட்டுக் கிடந்த பக்க மலையெங்கும் பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. அவ்விடத்தே, கூர்மையான ஓசையோடு தெளிந்த சொற்களை இடையிடையே கூறி கிளிகளை விரட்டத் தலைவி தவறவில்லை.

சேகரித்த மலரிதழ்களை ஒன்றாகக் கோர்த்து தான் அணிந்திருந்த தழையாடைக்கு ஏற்றவாறு சரி செய்து கட்டிக் கொண்டாள். பல்வேறு நிற மலர்களால் மாலை கட்டி மென்மையான கொண்டையில் அழகாகச் சூட்டி அலங்கரித்தவளாய் தன் தோழியுடன் அசோக மரத்தின் குளிர்ச்சியான நிழலில் அமர்ந்தபோது...................!

அவனைக் கண்டாள். அவன் எண்ணெய் தடவி சுருண்டு வளர்ந்திருந்த தனது தலைமயிரில் மணம் வீசும் அகில், சந்தனம் போன்றவற்றை பூசி மணக்கப் பெற்றவனாகவும், தலைமயிரின் ஈரத்தை தன் விரல்களால் நீவியும், கரிய அகிலையிட்டு உண்டாக்கிய புகையினாலும் உலர்த்துபவனாகவும் இருந்தான். அத்துடன் மலையிலுள்ள பல்வேறு வண்ணங்களாலும் குணங்களாலும் ஆன மலர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குளிர்ச்சியான மணம் வீசும் மலர்மாலையையும் அணிந்திருந்தான். அவற்றுடன் அவனைக் கண்டவர் அச்சப்படும்படியாகவும் வெண்தாழை மடலான மாலையினையும் அழகாக தலையில் சூடியிருந்தான்.

அவன் காதில் செருகியிருந்த அசோகத் தளிர், அவனின் திரண்ட தோளில் அசைந்து கொண்டிருந்தது.  அவன் அழகிய மார்பில் அணிகலன்களும், மாலைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிவந்த இரேகைகள் உடைய உள்ளங்கைகளுக்கேற்ற இறுகி பருத்த முன்கையில் வில்லை ஏந்தியிருந்தான். அம்புகளை அசைவில்லாதவாறு கோலமிடப்பட்டிருந்த துணிப்பையில் பிணைத்திருந்தான்.

அப்போது . பகைவர்களின் இடங்களைப் பாழ் செய்யும், நெருங்குதற்கரிய வலிமையும் மிகுந்த சினமும், கூரிய வாள் போன்ற பற்களையும், கூர்மையான நகங்களையும் கொண்ட நாய்கள் தலைவியின் இருப்பிடத்தை நோக்கி வந்தன. அவற்றைக் கண்டு நடுங்கிய அவர்கள் அச்சத்துடன்  இருந்த இடத்திலிருந்து எழுந்து யாதும் செய்ய முடியாத நிலையில் மனம் வருந்தினார்கள்.

அப்போது அவன் அவர்களின் தடுமாற்றத்தைக் கண்டு அருகில் சென்று, அவர்கள் அச்சம் தீரும் வகையில் மென்மையாகப் பேசி , அவள் அழகினையும் கூந்தல், கண்கள் உள்ளிட்ட உடலழகையும் புகழ்ந்தான்.

"என்னிடமிருந்து தப்பிச்சென்ற விலங்கொன்று இவ்வழியால் போனதோ "

எனத் தலைவியின் விழிகளைப் பருகியவாறு வினவினான்.

அவளோ, இயற்கை ஆக்கிரமித்த நாணத்தினால்  பதிலேதும் சொல்லாமல் மௌனித்துக் கிடந்தாள். அவள் மௌனம் அவனை வருத்தியது. மனம் வருந்தியவாறு

"என்னிடம் பேசுவது குற்றமோ "

என்றான். பின்னர் வலிந்த மரக்கிளையொன்றை உடைத்து  அந்நாய்களை தேடி யடக்கிய பின்னர் அவர்களுடன் பேசும் ஆர்வத்தில் மீண்டும் அவளை நெருங்கி, பேசும் வார்த்தைகளுக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் உதடுகள் அசையவேயில்லை. அவனுள் ஏமாற்றம் வழிந்தது.

மௌனமாக  நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன ,

தினைத்தாள்களால் நாட்டப்பட்டிருந்த குடிசையொன்றில் காவலிருந்த கானவன் ஒருவன், தன் எழிலான மான் போல மிரளும் தன் மனைவியின் பார்வையினால் ஈர்க்கப்பட்டவனாய்,  அவள் மீதுள்ள காதலால் தன் தொழில் மறந்து அவளுடன் கூடினான், காதலில் மலர்ந்த  குலைவு அவன் காவலை மறக்கடித்தது . அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் தினைப்புனத்தில் புகுந்த யானை எல்லாத் தானியங்களையும் உட்கொண்டது. தினை ஓரளவு எஞ்சிய நிலையிலிருக்கும் போதே மோகித்திருந்த அந்தக் கானவன் சிந்தை தெளிந்து, ஒலி எழுப்பி யானையை விரட்டினான்.

விரட்டப்பட்ட யானை சினங்கொண்டு, அவளிருப்பிடத்திற்குள் நுழைந்தது. எதிர்பாரதவிதமாக அவளை  நோக்கி , மதங் கொண்ட யானையாக வருவதைக் கண்ட அவள் அச்சமுற்று தன் நாணங் கலைத்து தனது பதிலுக்காக காத்திருக்கும் அவனருகே போய் நின்றாள். அவன் தன்னைப் பாதுகாப்பான் எனும் நம்பிக்கை அவளுக்குள் வலிமை பெற்றது.

அவன் முகத்தை அச்சம் பிசைய விழிகளால் துலாவினாள். விழிகள் நான்கும் ஓர் நொடியில் சந்தித்து மீண்டன. அச் சிலிர்ப்பின் உத்வேகத்தில்.அவனும், தன்னுள் சிறைப்படுத்தியிருந்த வில்லையெடுத்து அதில் அம்பைச் செருகி யானையின் நெற்றியில் குறி பார்த்து தன் அம்பைச் செலுத்தினான். தாக்கப்பட்ட யானையின் நெற்றி சிதைந்து முகத்திலிருந்து  குருதி வழியும் நிலையில் அது புறமுதுகிட்டோடியது. அவள் பெருமூச்செறிந்து நன்றியுடன் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையை விழுங்கிய அவனும் புன்னகையை மெல்ல அவளுள் பரப்பினான். நாணத்தால் அவள் முகம் கவிழ்ந்தது. இருதயத்தில் ஒரு  மூலையில் அவன் நினைவுகள் கௌவிக் கொண்டன. தன் பார்வையைத் தாழ்த்தி மறைவாக அவனை ரசித்தாள்.  ஆனாலும் அவள் கரங்கள் இன்னும் அவள் தோழியின் கரத்துடன் பிணைத்துக் கொண்டிருந்தன. உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

"அழகிய கூந்தலையுடையவளே! 
அஞ்சாதே, உன் அச்சம் போக்க இனி நானிருக்கின்றேன் "

எனக் கூறியவாறு அவளை அவன் அவள் தோழியின் பிடியிலிருந்து தளர்த்தி, தலைவியின் நெற்றியில் வடிந்த வியர்வைத்துளிகளை தன் கரத்திலேந்தி மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான். அவள் நாணத்தையும் பொருட்படுத்தாதவனாய்..........!

அவள் நாணிப் புன்னகைத்தவறே அவனிடமிருந்து விடுபட நெளிந்தாள்.

அச்சமும் நாணமும் அவளை ஆட்கொள்ள அவனின் பிடியிலிருந்து நழுவ முயற்சித்தும். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் மார்பு, தன் மார்புடன் பொருந்த இறுக்கி யணைத்தான். உஷ்ணம் மூச்சுக்காற்றிலடங்கி இடமாறத் தொடங்கின. கூடவே காதலும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டது அவர்களுக்குள்!.

அவன் மலைநாட்டுத் தலைவன், இயற்கையை வசீகரித்து வாழ்பவன், செல்வச் செழிப்பினன், பண்பானவன், அவள் மனமறிந்து, தன் காதலைப் பற்றி எடுத்துக்காட்டி, அவள் விரும்பும் விதத்தில் அறம் சிதையாத இல்லறம் பற்றிப் பேசினான். அவளும் மகிழ்வோடு தன் துணையாக அவனை வரித்துக் கொண்டாள். மனங்கள் பேசத் தொடங்க வானமும், பூமியும் மலர்கள் துவி வாழ்த்தின. அவளைப் புரிந்தவளாய் தோழி விலகிச் செல்ல, அவள் அவனின் அன்புக்குள் கட்டுண்டாள்..

மிதமான மகிழ்வில் தலைவன் பருகிய அருவி நீரில் கூட கள் கலந்து அவனை போதைப்படுத்தியது. மகிழ்வின் உச்சத்தில் இறக்கை கட்டி பறந்தனர் அச்சோடியினர். அவள் அவனுடன் தன் இராப் பொழுதைக் கழித்தாள்.

ஒருமித்த மனங்களின் அன்றைய அந்தச் சந்திப்பே, இறுக்கமான இதமான காதலாக முகிழ்த்தது.  கூடலில் கழித்த அவள் பொழுதுகள் விடிந்தன. அவன் பிரியப் போகும் தருணத்தை எண்ணி வருந்தினாள். அவனோ ஊர், சுற்றமறிய விரைவில் அவளை மணந்து , தன்னிருப்பிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அவளது இருப்பிடத்தில் அவளை நிறுத்தியவனாக, அவளைப் பிரிந்து சென்றான்.

அவள் கண்ணீரில் நனைந்து நின்றாள். ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட வலிமையான அன்பு அவள் மனநிலையின் இயல்பைக் குலைத்த போது வாடி நின்றாள்.

நாட்கள் விரைந்தன. அவர்களின் சந்திப்பும் இரவில் களவாக ரகஸியமாகத் தொடர்ந்தது. யாருமறியாது களவில் அவளை இவன் சந்திப்பது ஒழுக்கமற்ற செயல் என தலைவி நினைந்து விலக முற்பட்டாலும் கூட, அவனைச் சந்திக்காமல் அவளால் இருக்கமுடியவில்லை. சில பொழுதுகளில் அவன் சந்திக்காமல் செல்லும் இரவுகளில் இவள் சிந்தும் கண்ணீர் மார்பை மட்டுமல்ல, இரவின் நிழலினையும் ஈரப்படுத்தியது. அவளழகை அழிக்கும் இந்தத் துன்பம் அவளுக்குச் சொந்தமாகிப் போனது.

அவன் அவள் உயிர்..! .நல்ல குலத்தில் பிறந்தவன். அன்பு சிந்தும் காதலில் வெறும் காமம் மட்டும் கலப்பவனல்லன். அவன் ஒருபோதும் ஏமாற்றமாட்டான். தன் பரிவாரங்களுடன் அவளை தனக்குள் உரிமையாக்க நிச்சயம் வருவான். அவள் மனதிலிருந்து அவன் சிந்தும் காதல்த்துளிகள் நிஜமானவை !

 ஆனால் அவளின் இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவனது பிரிவுத்துயராக இருந்தாலும் கூட, அவன் அவளைச் சந்திக்க  வரும் காட்டுப்பாதையில் வாசம் செய்யும் சிங்கம், கரடி, புலி போன்ற கொடிய மிருகங்களால் இவனுக்கேதும் இடர் ஏற்பட்டிருக்குமோ , அதனால்தான் அவன் சந்திக்க வரவில்லையோ எனும் துக்கத்தில் இடைக்கிடையே கரைந்து கொண்டிருக்கின்றாள் இக்கன்னி!

காதல் அழகானது.......அழிவில்லாதது........!

(குறிஞ்சிப்பாட்டொன்றின் கரு , என் வரிகளினூடாக இவ்வாறு உயிர் பெற்றது)

2012/07/30

என் வாழ்வு உன்னோடுதான்



"கிறீச்"

கார் வீதியுடன் உரசி நின்றது. வாசலை எட்டிப் பார்த்த அம்மா பரபரப்பானார்.

"டேய் ......ராஜா.....தம்பி வந்துட்டான்டா.....சீக்கிரம் ரெடியாகுடா"

அம்மாவின் பரபரப்பை விட என் இருதயத்துடிப்போசை மிகையானது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாமாவின் வீட்டில் தான் எமக்கு விருந்து. மாமா என் தாயின் ஒரே தம்பி என்பதால் ராஜ மரியாதை எமக்கு அடிக்கடி கிடைக்கும். மாமாவுக்கு ஒரே பொண்ணு ஹீரா அவள் அழகும், அடக்கமும், அறிவுச் செழுமையும் என்னை விட அதிகமாக இருந்தாலும் கூட அம்மாவின் கற்பனையில் அவளே "என்னவளாகி"  ரகஸியமாகி ஆக்ரமிப்பதும் எனக்குத் தெரிந்தாலும் நானதை வெளிக்காட்டாத நல்ல பிள்ளையாகவே இருந்தேன்.

ஆரம்பத்தில் இந்தப் பயணம் இம்சையாக இருந்தாலும், நாளடைவில் எனக்குள்ளும் ஆர்வம் அதிகரிக்குமளவிற்கு "ஹீரா" என்னை ஆக்கிரமித்துக் கிடந்தாள். அவள் மாமாவின் அன்புச் செல்வம். பளபளக்கும் அவள் வனப்பு மேனியும் நிறமும் என்னை அவள் வசப்படுத்தியது. தினமும் அவளைப் பார்க்க மனசு துடிக்கும். இருந்தும் அதற்கான வாய்ப்பென்னவோ ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.!

மாமா வீட்டுக்குப் போனாலோ என் பார்வை ஹீராவைச் சுற்றி சுற்றியே வரும். அவள் அழகை விழி இமைக்காமல் பார்ப்பதும், யாரும் பார்க்காத போது அவளை என் கரங்களுக்குள் சிறைப்படுத்துவதும்.............."ஹீரா" எனக்குத்தான் என பித்தாகி மோகித்துக் கிடப்பதும் தொடரான உணர்வலைகளாயிற்று..

"வாங்க அண்ணி..........தம்பி"

மாமியின் குரலலையில் நினைவுகள் அறுந்தன..

"என்ன மாப்பிள்ள....ரொம்பத்தான் வெக்கப்படுறீங்க போல"

மாமாவின் சீண்டலை விட, ஹீராவையே என் மனம் உள்வாங்கியது. பார்வையால் அவளைத் துலாவினேன்.."ம்ஹூம்" மனசு ஒரு கணம் குவிந்து சுருங்கியது..

அவள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். அவள் பெரும்பாலும் மாமாவின் அறையிலேயே இருப்பாள்..ஏதேதோ சாட்டுச் சொல்லி மாமாவின் அறைக்குள் மெதுவாக நுழைந்தேன்.

அந்த அழகு தேவதையின் பூவிழி மூடிக்கிடந்தது..என் காலடி அரவம் கேட்டு மெதுவாய் பார்வை திறந்து என்னை ஊடுறுவும் எக்ஸ் கதிராய் அவள் மாற, எங்கள்  விழிகள் சந்தித்துக் கொண்டன......

"ஹீரா"

"மச்சான்"

வேறு வார்த்தைகளை மறந்து போனோம்.

"நீ என் செல்லம்டீ நீ எனக்கு வேணுமடி....உன்ன இன்னைக்கு வீட்ட கூட்டிட்டுப் போகப்போறன்"

உணர்ச்சிவசப்பட்டேன்..அவள்  மை என் கரங்களில் பரவிச் சிலிர்த்தது.

"ராஜா"

எங்கள் தனிமையைக் கிழித்தவாறே மாமா குரல் எழுப்பினார்..ஹீராவைத் தள்ளிவிட்டேன் அப்பால்.....அம்மாவோ தன் கொதிநிலையை உயர்த்தினார்..

"ஐயோ ஐயோ......ஏன்டா இந்தத் திருட்டச் செய்றே......எத்தனை நாளடா இது நடக்குது உன் ஆசையில மண் போட"

அம்மா தன் தோளை விட வளர்ந்த என்னை திட்டத் தொடங்க நானோ, தலை கவிழ்ந்து குற்றவாளியாய் உருகிக் கொண்டிருந்தேன். அம்மாவின் ஆத்திரம் கன்னத்திலும் அடியாய் இறங்கியது..

"அக்கா விடக்கா....சின்னப் பையன்தானே....ஏதோ ஆசைல தப்பு செய்திட்டான், அவன்ர ஆசைய நாம பெரியவங்க தான் தீர்க்கணும்"

மாமா சொல்லச் சொல்ல  அம்மாவின் அடி கூட வலியை மறந்தது..

"ராஜா.........உனக்கு ஹீரா வேணுமா"

மாமா கேட்கக் கேட்க பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

வெட்கத்துடன் நான் கொடுத்த சம்மதத்தில் ஹீராவை என் கையில் இணைத்தார். அந்த ஒரு நொடி என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள். அவளை என் தனிமைக்குள் இழுத்து வந்து முணுமுணுத்தேன்..

"என் வாழ்வு உன்னோடுதான்"

உரிமையாளனாய் புளாங்கிதத்தில்  அவள் மேனியை என் கரங்களால் ஸ்பரிசித்து  என் உணர்வை அவளிடம் புகுத்தி காகிதத்தில் எழுதத் தொடங்கினாள்....

."என் வாழ்வு Pen னோடுதான்"


"ஹீரா.............வேற யாருமல்ல...என் மாமா வைத்திருந்த ஹீரா பென் தான். 

நான் ஆசைப்பட்டது  என் மாமா மகள் "ஹீரா"  வைத்தான் என நீங்க நினைச்சா அதற்கு நான் பொறுப்பல்ல....ஏனென்றால் என் மாமா மகள் அமெரிக்காவில் உயர் படிப்புக்காகச் சென்று மூன்று வருஷமாச்சு..........எனக்கே அவள மறந்து போச்சு.......நீங்க வேற........

எனக்கு இந்த ஹீரா பேனை போதும் !


2012/07/28

தவிக்கும் மனசு



"இந்த அநியாயத்த கேட்க ஆருமில்லையா"

காற்றோடும் உரசும்  தாயின் அலறலும், வார்த்தைகளில் "இடி" யை இணைத்துக் கொண்ட தந்தையின் வீரமும் நெஞ்சத்தினை பிறாண்டவே கண்களை இறுக்க மூடுகின்றேன். நான் இவ்வுலகத்தில் கண்ட மிக மோசமான மிருகம் அவர்தான். என் சின்ன வயதில் முகிழ்த்த கனவையெல்லாம் அறுத்தெறிந்த வீரர். என் பெற்றோர் இருவரும் குணங்களால் முரண்படும் ஈர் துருவம். ஒருவர் கூறுவதை மற்றவர் குறை, குற்றம் காணும் மானசீக நோயாளிகள். இவர்கள் அடிக்கடி தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் சண்டை பிடிக்கும் போது நானோ மன சறுந்தவளாய் மௌனித்து என் அறைக் கதவைத் தாழித்து விக்கலோடு கரைந்து விடுவேன். இது என் அன்றாட நிகழ்வு 

இன்றும் சண்டைதான் பிடிக்கின்றார்கள். மௌனித்துக் கிடப்பதைத் தவிர வேறெதும் தெரியவில்லை.

தந்தையின் பாசத்துக்காய் ஏங்கிய போராட்டங்களெல்லாம் நாளடைவில் அவர் மீதான வெறுப்பாய், விரக்தியாய் மாறிக் கிடப்பதைக் கூட அறியாதவராய் அவர் ...............

எனக்கும் அப்பாவுக்குமிடையிலான இடைவெளி நீள நீள குடும்பத்திலிருந்து மெது மெதுவாக விலகிக் கொள்ளும் பிரமை.......

"சந்தோஷம் எப்படி இருக்கும்"

உணர்வுபூர்வமாக விடை தெரியாத வினாவுக்குள் என் மனம் சிக்குண்டு பல நாட்கள். சந்தோஷங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றக் குடும்பத்தினரைக் காணும் போதெல்லாம் நெஞ்சவெளியின் பசுமையை பொறாமை மயானமாக்கிக் கொண்டிருந்தது..

தலை நரம்புகள் விண்ணென வலிக்க, மனசின் வலி கண்ணீராய் கரைந்து கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை நாட்கள் தான் இந்த நரக வேதனை.............

நினைவு தெரிந்த காலமுதல் இந்தத் தாய் படும் அவஸ்தையும், கண்ணீரும், புலம்பலும் முடிவுறாத தொடர்கதைகள்.................

என் வாலிப வோரங்களில் வந்த காதல்களில் சுருளாமல் தப்பித்துக் கொண்ட வீரத்தனம் இந்த வில்லங்கத்திற்காகத்தானா...........

கண்களை மூடுகின்றேன்...............மீண்டும் கோரங்களின் அரங்கேற்றம் மனக் கண்ணில் !

"தாயின் தலைமுடிச் சிதறலை  தந்தையின் கரங்கள் மூர்க்கத்தனமாகப் பற்றிப் பிடித்து சுவரில் மோதி சிதறிய ரத்தத்துளிகளால் அவர் விரல்களே சிவக்க"

"ஐயோ.......விடுங்கப்பா..........அம்மா பாவம் "

தடுக்க முயன்ற என்னிடம் அவர் ஆத்திரம் திரும்ப, அன்று நானும் உடல் புண்ணாகி காயங்களுடன் அம்மாவுக்கருகில் குற்றுயிராகிக் கிடந்தேன்.....

கதறல் பூச்சியமான நிலையில் இப்பொழுது நாங்களும் ஊமையாகி மரத்துப் போனோம்...

ஒவ்வொரு அழிவிலும் தான் புது விடியல் உருவாக வேண்டும்..அந்த விடியலின் குளிர்ச்சி தந்தையின் மரணத்திலா?

ஆனால் அதற்கிடையில் என் இளமை மனசு கரைந்து விடும். இருந்தும் நானும் முடிவு தெரிந்த பயணத்திற்காக பக்குவப்பட வேண்டியதாயிற்று!

தான் விடுகின்ற தவறுகளுக்கெல்லாம் எம்மீது காரணம் தேடும் இந்தத் தந்தை என் பாவப்பட்ட வாழ்வின் சேமிப்பு............!

மனம் அடிக்கடி புலம்பத் தொடங்கியது. எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. தனிமையைத் தவிர !

தந்தையின் முழக்கமும், அதனைத் தொடர்ந்து தன் புலம்பலை என்னிடம் கொட்டித் தீர்க்கும் தாயும் என் வாழ்வின் போக்கினை மாற்றி, மனசை வெறுமைப்படுத்தி விட்டனர். பிடிப்பற்ற வாழ்க்கை. மரணம் அண்டும் வரை வாழத்தான் வேண்டும்.........

பெற்றவர்களை உதற முடியவில்லை. என்னையிந்த மாயத்திலிருந்து மீட்கவும் யாருக்கும் துணிவுமில்லை. இறை பிரார்த்தனை மட்டுமே ஆறுதலாய் தோழமையோடு ஒட்டிக் கொள்ள அந்நியப்பட்டுப் போனேன் நிம்மதியான வாழ்விலிருந்து........

"உம்மா"

தந்தையின் கொடுமையால் கதறிக் கொண்டிருந்த தாயின் பார்வை என்மீது விழுந்தது..

"முடியலம்மா...................ரொம்ப தலைவலிக்குது.....நெஞ்சு கூட நோகுற மாதிரி இருக்கு "

வார்த்தைகளை நான் சிரமப்பட்டு கோர்த்த போது, தாய் நடுங்கிப் போய் தன் சோகத்திலிருந்து கழன்று வெளியே வந்தார்.

"ஏன்டீ................என்னை நீயும் கொடுமைப்படுத்துற.......வாடீ டாக்டர்கிட்ட போகலாம்"

தாய்  வற்புறுத்தி அன்றைய தினமே என்னை டாக்டரிடம் சேர்க்க, வைத்திய பரிசோதனை முடிவு என் வாழ்வின் விதிக்கு முன்னுரையாய் அமைந்தது......

"டாக்டர் .......என் புள்ளக்கு.........................."

தாய் தன் வார்த்தைகளை முடிக்காமல் விம்மினார்....அவருக்குள்ள ஒரே ஆறுதல் நான்தானே!

அழுது விடுவேனென்று அடம்பிடிக்கும் குரலில் தாய் கேட்கும் போது டாக்டர் மெதுவாக சொல்லுவது எனக்கும் புரிகிறது................

"ஓ........ப்ளட் கான்சரா..............ரொம்ப நோய் தீவிரமாகிட்டுதோ.........இன்னும் கொஞ்ச நாள்ல போய்ச் சேர்ந்திடுவேனோ "

டாக்டர் சொல்லச் சொல்ல உம்மா அழும் சத்தம் கேட்கிறது.

உம்மா அழுகின்றார்.......நானோ சிரிக்கின்றேன்.........

"இனி வாப்பாட  கொடுமை இல்ல.....உம்மாட கதறலும் புலம்பலும் நெஞ்சுக்குள்ள இறங்கப் போவதில்லை...........சமூகத்தோட விமர்சனங்களும் நெருங்கப் போவதில்லை "

எனக்கென்று நாளை யாருமே இல்லாத  இந்த வாழ்வில் என் தாயின் கண்ணோட போய்ச் சேர்ந்தா ஒரு சொட்டுக் கண்ணீராவது என் இத்தனை நாள் வாழ்வுக்காக கிடைக்கும்.

விழிகளை மீள இறுக்கிப் பொத்துகின்றேன்.............சூடான கண்ணீர் என் கன்ன வரம்பிலிருந்து மெதுவாக கசிகிறது..........

இது ஆனந்தக் கண்ணீரல்ல......அவலக்கண்ணீர்.............

என் இழப்பால் தாய்க்கேற்படும் அவலத்தை நினைந்து திர்ந்த வலிக்கண்ணீர்...

கண்களைத் திறக்க மனமின்றி. மீண்டும் மூடிக் கொள்கின்றேன் விரக்தியாய்!

2012/07/26

வாழ்க்கைத் துணை


அமைதியான ஆற்றங்கரை ........அருகே விரல் விரித்துக் கொண்டிருக்கும் பரந்த ஆலமரங்கள் இரண்டு காற்றால் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு நின்றன...........அவ் ஆலமரங்களின் வேர்களை நனைத்தவாறு சிறு ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது..

அக்குளிர்மையான நீரோடையின் அருகே வழமை போல் அந்த இரண்டு நட்பு புறாக்களும் சந்தித்துக் கொண்டன...அவர்களின் மடியை ஆலமரக் கிளை தாங்கிக் கொண்டது...

ஆண் புறாவுக்கு பெண் புறா மீது உயிர்........பெண் புறாவுக்கும் ஆண் புறாவே அதன் உலகமாக இருந்தது...பார்ப்பவர்கள் எல்லாம் அவைகளை காதலரென்று கிண்டல் செய்யும் போதெல்லாம் ஆண்புறா சிரிக்கும்........

"இது காதலையும் தாண்டி புனிதமானது. எங்க அன்பை நாங்க காதலுக்குள்ள சிக்க வைக்க விரும்பல........ஏன்னா காதல் வயப்படும் போது எங்க எதிர்பார்ப்பு அதிகரித்து , அன்புக்குள்ள சுயநலம் கலந்திடும் "

ஆண் புறாவின் வார்த்தைகளுடன் முரண்படாத பெண் புறா தன் நண்பனின் கன்னத்தை தன் உதடுகளால் தடவி, தன் அன்பை ஆழப்படுத்தி வெளிப்படுத்தும்.. இது தினமும் நடக்கும் நிகழ்வு.....................

ஆனால் அன்று வழமையான உற்சாகம் குன்றிய நிலையில் ஆண் புறா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது..

அதன் இறக்கையை தன் இறக்கைகளால் தடவிய பெண் புறா தன் குரலில் சோகம் பூட்டி மெதுவாக ஆண்புறாவை நோக்கியது

"ஏன்டா ....சோகமா இருக்கே..............என்னடா ஆச்சு......நீ இப்படி இருந்ததை நான் ஒருநாளும் பார்த்ததில்லையேடா...........என் மனசும் அழுகுது தெரியுமா"

பெண் புறாவின் வார்த்தைகள் தளம்பின.....

"செல்லம்....எனக்கு எங்க வீட்டில  கல்யாணம் பேசுறாங்கடா.......எனக்கேத்த பெண்ண நான்தானடா தெரிவு செய்யணும்....எங்க வீட்டில இப்ப கல்யாணம் வேண்டாமென்று சொன்னா.....நீ யாரையாவது லவ் பண்ணுறீயாடான்னு கேட்குறாங்க......யாரைடா நான் சொல்ல .......அதுதான் மனசு கஷ்டமா இருக்கு"

ஆண் புறா பெருமூச்சு விட்டது..

அதைக் கேட்ட பெண் புறா கலகலவென்று சிரித்தது..........

"டேய் .......லூசாடா நீ.........இதுக்குப் போய்..............கப்பியா இரடா.......யாராச்சும் கிடைப்பாங்க"

பெண் புறாவின் வேடிக்கைச் சீண்டலை ரசிக்கும் மனநிலை ஆண் புறாவுக்குள் எழவில்லை..

"இல்லையடீ......இன்னும் ஒரு வாரத்தில நான் பொண்ணு யாருன்னு சொல்லணும்..இல்லைன்னா அவங்க பார்க்கிற பொண்ணத்தான் கட்டணும்.
என்னை புரிஞ்சு கொண்டவள் நீதான்டீ....என் லட்சியம் உனக்குத் தெரியும் தானே.........நீயோ இப்படி சொன்னா நான் என்னடி செல்லம் பண்ண......இன்னும் ஒரு கிழமைக்குள்ள எனக்கேத்த பொண்ண எப்படியடீ தேட.....நீயே சொல்லடீ!

ஆண் புறாவின் குரலில் இருந்த வருத்தம் பெண் புறாவையும் நோகடித்தது....

"ம்...யோசிப்போம்டா.......இன்னும் 1 கிழமை இருக்கு.......நல்ல முடிவு கிடைக்கும்.....நம்படா.............நம்பிக்கைதான் வாழ்க்கை "

"ம்....ம்"

ஆண் புறா சிறிது மௌனத்தின் பின்னர் மெதுவாகத் தலையாட்டியது..
அவர்களின் மௌனத்தில் சில விநாடிகள் கரைந்து கொண்டிருக்கும் போது திடீரென பெண் புறா ஆற்றுக்குள் குதித்தது...

"செல்லம்........"

ஆண்புறா அதிர்ச்சியில் அலறியவாறு தானும் நீருக்குள் குதித்தது..தன் நண்பியை நீருள் தேடியது. அதன் பார்வைக்குள் அவள் அகப்படவேயில்லை..
நீரின் சலன ரேகை சப்தமின்றி அமைதியாக உறைந்து கிடந்தது

பெருங்காட்டுக்குள் கண்ணைக் கட்டி விட்ட நிலை ஆண்புறாவுக்கு........

இதயம் வெடிப்பதைப் போன்ற உணர்வு.....வாழ்க்கையில் எதையோ இழந்த தவிப்பு முதன்முறையாக மனசுக்குள் முட்டியது

"செல்லம்...................."

வாய் விட்டு கதறியவாறு, அவளை மீண்டும் காண வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கண்களை இறுக மூடி இறைவனிடம் தன் பிரார்த்தனையை ஒப்புவிக்கத் தொடங்கியதுதான் தாமதம்............

"ஏய்"

காதருகே மெல்லிய சலங்கையொலி சலசலக்க ஆண்புறா எதிரே பார்த்தது...
நம்பவே முடியவில்லை..தன் நேசப் பறவை ஈரம் சொட்டச் சொட்ட எதிரில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு ஆரவாரித்தது..

":என்னடி இப்படி பண்ணிட்டே......நான் இன்னைக்கு உனக்காக எவ்வளவு அழுதேன் தெரியுமா..என்ன விட்டுப் போக உனக்கு மனசிருக்காடீ...என்னை அழவைக்கிறதே உனககு வேலையாச்சு "

ஆண்புறா உணர்ச்சி வசப்பட்டு பெண் புறாவைக் கடிந்தது..

"இல்லைடா நாம பேசிக் கொண்டிருந்த போது மரத்தில இருந்த சின்ன அணிலொன்று தண்ணிக்குள்ள விழுந்திடுச்சு. அதுதான் அதைக் காப்பாத்த போனேன்."

பெண் புறாவின் வார்த்தைகளில் வடிந்த இரக்க குணம் ஆண்புறாவின் விழிகளை மேலும் குளமாக்கியது ..மனசோரம் காதலெனும் பதிய மெல்லுணர்வு வருடிச் சென்ற உணர்வு..........பாய்ந்து சென்று பெண்புறாவை இறுகத் தழுவியது .........

பெண்புறாவோ தடுமாறியது....

"டேய் விடடா........உனக்கென்னடா ஆச்சு இன்னைக்கு ...நான் உன் ப்ரெண்டடா..............."

குரல் நெகிழ பெண் புறா கூறியது,

"செல்லம்.......உன் உயிரைக் கூட மதிக்காம அந்த சின்ன உயிரைக் காப்பாத்த நெனைச்ச உன்ன விட, என் வாழ்க்கை, உயிர பத்திரமா யாரடீ பார்த்துக்குவா...அதுதான் என் உசுரை உன்கிட்டயே கொடுக்க முடிவெடுத்திட்டன்...................புரியலியா"

அண் புறா கண்சிமிட்டலுடன் கேட்ட போது பெண் புறா "ம்ஹூம்" இல்லையென தலையாட்டியது..

"ரியூப் லைட் செல்லம்டீ நீ......என் வாழ்க்கையைய நல்லா கவனிச்சுக்க உன்ன விட யாரடீ வருவா. அதுதான் என் வாழ்க்கைத் துணை நீயென்று முடிவெடுத்திட்டேன்...ஐ லவ் யூடீ"

பெண் புறாவின் இறக்கையை தன் அலகினால் மெதுவாகத் தடவியது, பெண் புறாவோ நாணத்தில் தலை சாய்ந்து புன்னகையை மௌனத்தில் நனைத்துக் கொடுத்தது..

"ஐ லவ் யூ "

பெண் புறாவும் இதழசைத்தது.........

"ஹைய்யா...மகராணியார் சம்மதிச்சிட்டாங்க...........இனி டும் டும் டும் தான்"

ஆண் புறா உற்சாகத்துடன் கும்மாளமடிக்க, அங்கே புதிய காதல் உலகமொன்று அவர்களை உள்வாங்கிக் கொண்டது...............





2012/06/09

விடியல்



(சிறுகதை)
-----------------------------
வானத்தைத் துண்டாக்கும் வக்கிரத்தில் இடி காதைப் பிளந்து கொண்டிருந்தது.

"யா அல்லாஹ்"

அச்சத்தின் நாடிப்பிடிப்போடு சஹானாவின் உதடுகள் குவிந்து மடிந்தன. இயற்கையின் அக்கிரமத்தைக் கண்டும் சிறிதளவும் அஞ்சாதவனாய் சோகத்தில் வான் விட்டத்தை அளந்து கொண்டிருக்கும் தன் கணவனை வலியோடு பார்த்தாள்.

"உங்களுக்கு பயமில்லையா உள்ள வாங்கோ"

அவள் குரல் கேட்டு அவன் சிரித்தான்.

" சஹா............இன்னும் நாம வாழணும் என்று நினைக்கிறீயா"

அவன் கேட்டபோது அவள் நெஞ்சு பிளந்தது. அவனைக் கட்டித் தழுவி வெம்மினாள்.

"தெரியலீங்க..........வாழ வழி தெரியலீங்க"

அமிலம் சுரக்கும் விழிகளை கண்ணீரால் கழுவினார்கள் இருவரும்.

"வெட்ட வெளிகளில் இடிகொட்டும் போது நிற்பது ஆபத்து..."

மனவெளிகளில் எப்போதோ சொன்ன விஞ்ஞான ஆசிரியை வந்து போனார். வாழ்க்கையில் நிரப்பப்படும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகும் போது கனவுகள் மட்டுமல்ல வாழ்க்கையின் பிடிப்புக்களும் கூட அற்றுப் போய் விடுகின்றதே!மரணம் கூட அச்சப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு வலிமைகள் எளிமையாகி விடுகின்றன.

எங்கோ தொலைவில் ஒலித்த அதான் ஓசை அவளை வசப்படுத்திய போது கண்கள் பனித்தது. கணவன் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.

"சஹா...அழுகிறீயா" 

அவன் கேட்டபோது அவசரமாக மறுப்புத் தெரிவிக்க முயன்றவள் தோற்றுப் போனாள். நெஞ்சம் விம்மியது. எத்தனை முறைதான் அவர்கள் மாறி மாறி இந்த அழுகையை அழுவதும் அடக்குவதுமாக இருப்பார்கள். எப்படித்தான் மனதை கல்லாக்கி இறுக்கினாலும் பாசத்தை உடைத்தெறிய முடியவில்லை. உம்மா, வாப்பா, அழகான தங்கச்சி பாத்திமா அடுக்கடுக்காய் மனதை நிறைத்துப் போனார்கள்.

வசந்தம் அறுக்கப்பட்ட பொழுதுகள் ஏன் அவர்களுக்கு மட்டும் அனல் பொழுதாக மாறியது. இத்தனைக்கும் அவள் செய்த தவறுதான் என்ன.......
காதலிப்பது தவறா......இல்லை அவள் காதல் தவறா!

இந்த ஆறு மாதங்களாக விடை காணமுடியாத பல வினாக்கள் மட்டுமே அவளுக்குள் சொந்தமாகிக் கொண்டிருக்கின்றன அவனைப் போல!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது..உதிர்ந்து விட்ட ஞாபகங்கள் மட்டும் தான் அவர்களுக்குள் உயிர்ப்பாக இருக்கின்ற சொந்தம்.

அவனைச் சந்தித்த அந்த முதல் சந்திப்பு இன்னும் நெஞ்சுக்குள் சிலிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.....

"கெதர கௌத இன்னே"

உரத்த குரலில் வீட்டுத் தெருக் கதவு படபடக்கும் சப்தத்தில் அவள் விறைத்துப் போனாள். அவள் தங்கையைத் தவிர வீட்டில் யாருமே இல்லை.....பீதிப் பட்டாம் பூச்சிகள் அவளுக்குள் சுதந்திரமாக சிறகடிக்க ஆரம்பித்தாலும் கதவு தட்டப்படும் ஓசை விடுவதாக இல்லை.கதவை மெதுவாகத் திறந்து குரலை மட்டும் வெளியே அனுப்பினாள்.

"கௌத"

" பண்டா.............இன்னவத"

".இங்க அப்படி யாருமில்ல........நீங்க தவறா வந்திட்டீங்க....ப்ளீஸ் போயிடுங்க"

சிங்களத்தில் பதில் வார்த்தைகள் அவளிடமிருந்து உதிர்ந்தன. அவள் குரல் பதற்றப்பட்ட போதும் அவன் அவளை ரசித்திருக்க வேண்டும். ஆணி அடித்தாற் போல் அதே இடத்தில் நின்றிருந்தான்..

"சீக்கிரம் போங்க. யாராவது வந்தா தப்பா நெனைப்பாங்க"

அலறிய அவளின் அப்பாவித்தனத்தை அவன் ரசித்தான்.

"நான் ஒன்னும் உங்கள விழுங்க மாட்டேன். பயப்படாதீங்க. என் ப்ரெண்ட தேடி வந்தேன். கொஞ்சம் குடிக்க தண்ணீ தாரீங்களா "

"ம் ம்"

அப்போதுதான் அவனை அவளும், அவளை அவனும் பார்த்தார்கள். மின்னல் பார்வை. ஓர் நொடியில் நெஞ்சில் ஆணியடித்தது. ஆண்களைக் கண்டால் அலறும் அவளா அவனிடம் மோகித்தாள். இதுதான் கண்டதும் காதலா .விதியின் கோர விளையாட்டா...

தனக்குள் சிரித்தாள். அந்தச் சிரிப்பே அவனுக்குள் இரசாயன மாற்றத்தை தந்தது. புன்னகைகள் இடமாறின. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கூடவே அவனது தொலைபேசி இலக்கத்தையும் அவள் ரகஸியமாகப் பொத்திக் கொண்டாள்....

மாதங்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. அவள் கனணிக் கற்கை படிக்கும் இடத்திலேயே அவனும் கற்க ஆரம்பித்தான். காதல் நீரோட்டம் யாருமேயறியாது ரகஸியமாய் பசுமையாக அவர்களை வருடத் தொடங்கியது. ஒரு வருட ரகஸியக் காதலால் அவள் அவனிடம் முழுமையாகவே தன்னை ஒப்படைத்திருந்தாள்.

காதலையும் புகையையும் மறைக்க முடியாது என்பார்களே. அவளுள் ஏற்பட்ட மாற்றம் வீட்டில் பதற்றமானது......

"ஏய்....உண்மையைச் சொல்லு.........அவன்கூட உனக்கென்ன பேச்சு, யாரடி அவன் "

தகப்பன் வார்த்தைகளால் சுட்டெறித்த போது,  தாய் வாய் விட்டுப் புலம்பினாள். திட்டினாள்...

"பாவி.....படுபாவி..........மானத்தை இப்படி குழிதோண்டி புதைச்சிட்டீயே! போயும் போயும் ஒரு சிங்களவன் கூட........ச்சீ......உன்ன புள்ளன்னு சொல்லவே வெட்கமா இருக்கு அவன் கூடவே போய்த் தொலையடீ.....எங்க முகத்தில முழிக்காம போ"

அவன் நேசிப்பால் அவள் குடும்பம் அவளை சித்திரவதை செய்தது. தந்தை அவசர அவசரமாக உறவுக்குள் ஓர் மாப்பிளையைத் தேடிப் பிடித்தார். அவசர அவசரமாக நாளும் குறித்தனர். சஹானா துடித்தாள். ரஞ்சித் இல்லாத வாழ்வை கற்பனை பண்ணக் கூட அவளால் முடியவில்லை. அவள் வீட்டுக் கட்டுக்காவலை மீறி அவனைச் சந்திக்க முடியவில்லை. துரும்பாகிப் போனாள். அவள் கல்யாண வேலைகளில் பெற்றோர் தம்மை மறந்த ஓர் பொழுதில் தன் சிறைக்கூடத்தை பிய்த்து வெளியே பறந்தாள்.

"ரஞ்சித் உங்களப் பிரிந்து என்னால வாழ முடியாது"

"சஹா உனக்குப் பைத்தியமா........நான் மட்டும் என்னவாம், வா....நாம எங்க வீட்டுக்குப் போகலாம். அம்மாட்ட சொல்லுறேன். அவங்க நம்ம அன்ப புரிஞ்சுக்குவாங்க"

நம்பிக்கையூட்டினான். யார் கண்ணிலும் படாமல் ரஞ்சித் தன் வீட்டுக்கு அவளோடு போன போது அங்கும் போராட்டம் வெடித்தது. இறைவன் சேர்த்து வைத்த உறவை, அன்பை பிரிக்க மனிதர்கள் போராடினார்கள்.

"சஹாவ என்னால மறக்க முடியாது அம்மா"

ரஞ்சித் அழுதான். தாய் அனலானாள். ஊரையும் தன் மதப் பெரியவர்களையும் அழைத்து அவன் இறந்து விட்டானென மரணச் சடங்குகளை நடாத்தினர்.....

ரஞ்சித் உயிரோடு உணர்வுகளால் கொளுத்தப்பட்டான். இருவரும் ஊரை விட்டு வெளியேறினார்கள்....எங்கே போவது....யாரிடம் போவது...........

குடும்பம் காப்பாற்ற தொழிலோ வயதோ அனுபவமோ இல்லாதபோது எப்படி எங்கே வாழ்வைத் தொடங்குவது...........

புதிருக்குள் இருவரும் பதுங்கிக் கொண்டனர். நடோடிப் பயணமாய் ஒவ்வொரு ஊராய் இருப்பிடம் தேடி அலைந்ததில் முழுசாய் மூன்று மாதங்கள் கழிந்தன. அவனிடமிருந்த சொற்ப சேமிப்பு, அவளிடம் ஒட்டியிருந்த நகைநட்டுக்கள் எல்லாம் கரைந்த போதுதான் வாழ்க்கை பற்றிய அச்சம் அவர்களைப் பிண்ணத் தொடங்கியது. தாமாகவே தமக்குள் கணவன் மனைவியாக வாழ்வைப் பகிர்ந்ததில் அவள் வயிறு ஊதிப் பெருத்தது. தாய்மையின் செழிப்பைக் கண்டு ரஞ்சித்தால் பூரிக்கமுடியவில்லை. வறுமை அவர்கள் சந்தோஷத்தை விழுங்கியது. அறிந்தவர் அனுதாபப்பட்டோர் நண்பர்கள் தயவில் சுருண்டு கொண்ட இந்த நாடோடி வாழ்வுக்கும் முடிவு காலம் நெருங்கிய போது ரஞ்சித் அச்சப்பட்டான்.

"சஹா எனக்குப் பயமா இருக்கு. இந்தப் போராட்டத்தில நாம தோத்துடுவோமோன்னு பயமா இருக்கு"

அவன் நம்பிக்கையிழந்த போது அவள் அவனுக்குள் தெம்பூட்டினாள்.

"ரஞ்சித் நாம இப்படி இருக்கிறது நம்மட எதிர்காலத்துக்கு நல்லமில்ல. சட்டப்படி கல்யாணம் செய்யணும். நீங்க எங்க மதத்திற்கு வரணும்"

அவன் அவளின் ஆசைகளை நிராகரிக்க வில்லை. அந்த நல்ல நாளுக்காக காத்திருந்த போதுதான் எதிர்பாராதவிதமாக காதர் மாஸ்டர் அவர்களுக்குள் அறிமுகமானார்.

"தங்கச்சி.......இன்னும் ரெண்டு நாளைக்குள்ள உங்க கல்யாணத்த நம்ம மதப்படி செய்யணும். அதுக்கு முன்னர் தம்பிய நம்ம மதத்திற்கு மாற்றணும். எல்லாம் நல்லபடியா நடக்கும். ஒருபிரச்சினையும் வராம நான் முன்னுக்கு நின்னு உங்க கல்யாணத்த செய்ஞ்சு வைக்கிறன். நடந்தது நடந்து போச்சி. எனக்குத் தெரிஞ்ச நண்பர் வீட்டில உங்கள ரெண்டு நாள் தங்க வைக்கிறன். அப்புறம் மத்தத யோசிப்பம்"

காதர் மாஸ்டரின் வார்த்தைகள் அவள் கண்ணுக்குள்ளிருந்து கண்ணீரைப் பிழிந்தது. முன்பின் அறியாத இந்த சகோதரனை படைத்தவன் தான் வழிகாட்ட அனுப்பி வைத்ததாக நினைத்து உருகி நின்றாள்...

காதர் மாஸ்டர் தான் சொன்னபடியே அவர்களை தன் நண்பர் வீட்டில் தங்க வைத்தார்.

புது சூழல்,  புதிய மனிதர்கள். தாங்கள் குற்றம் செய்ததாக எண்ணி விமர்சனப் பார்வையால் தம்மைத் துளைக்கும் அயலாளர்களை வெட்கத்துடன் தவிர்த்தாள். தவிர்த்தார்கள் !

"டீ......கொழுப்பு பிடிச்சு சிங்களவன் கூட ஓடி வந்திட்டாளாம், மானங் கெட்டதுகள்.....தூ, .......இத விட செத்து போயிருக்கலாம்"

யார் யாரோ அவர்களை சபித்த போது மௌனமாய் அழத்தான் முடிந்தது...

அவர்களைப் பொறுத்தவரை இந்தக் காதல் சமூகக் குற்றம். மதத்திற்கு செய்யும் மகா துரோகம்! சபிக்கிறார்கள். உடுத்த உடுப்புமின்றி, பசிக்கு உணவுமின்றி இருக்கும் போது உதவாதோர் எல்லாம் விமர்சிக்கின்றார்கள்..

"எங்கள் அன்பை, அவர் எனக்காக தன் மதத்தைத் துறக்கும் அந்த அன்பை யாருமே புரிந்து கொள்ளவில்லை . புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
வேண்டாம் எங்களுக்கு யாருமே. காதர் மாஸ்டர் போல் வாழும் ஒரு சிலருள்ள உலகம் எங்களுக்குப் போதும்"

அவள் உணர்வுகள் கொதித்தன.

"தங்கச்சி...........நாளை காலைலதான் உங்களுக்கு சடங்கு செய்யப் போறாங்க.தம்பி நீ பதற்றப்படாம அவங்களுக்கு ஒத்துழைக்கணும் "

வீட்டுக்கார நோனா ராத்தா பழகிய ஒருநாள் பாசத்தை பரிவோடு பரிமாறினார். நாளை ரஞ்சித்துக்கு "சுன்னத்" எடுப்பார்கள். அவனை நினைத்து தனக்குள் சிரித்தாள். அன்பின் முன்னால் அந்த வலியெல்லாம் அவனுக்கு சாதாரணம். அவளுக்கு அது தெரியும். பெருமையோடு பார்த்தாள். அவன் அவளுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தான்.

விடிந்தால்.................அவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் கறை ஓரளாவது அகற்றப்படும். ரஞ்சித்தை நேசத்தோடு பார்த்தாள். நாளை அவன் அவளுக்கு சட்டபூர்வ கணவன். இனி அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. மற்றவர்களைப் போல் அவர்களும் சந்தோஷமாக வாழலாம். அவளுக்காக எல்லாவற்றையும் துறந்து இன்று அவன் மட்டுமே அவள் உலகமாகி..............அந்த உலகம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

அவள் மேனிபட்டு தெறித்த மழையில் சிந்தனை கழன்றது. அவனும் மழை பெய்வது தெரியாமல் தூவாணத்தில் நனைந்து கொண்டிருந்தான்.....

" உள்ளுக்கு வாங்க.........." 

அவள் கையைப் பற்றியிழுத்த போது அவன் லேசாக முறுவலித்தான்...

"பயந்துட்டீயா சஹா......நான் செத்திடுவேனென்று......நம்ம நிராகரிக்கிறவங்க முன்னால நாம வாழ்ந்து காட்டுற வரை உன்ன விட்டு போகமாட்டேன்டா"

அவன் சொல்லச் சொல்ல சிறுகுழந்தையாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். கண்கள் பனித்தன.

அவளுக்கு அவன்........அவனுக்கு அவள்.............அவர்களுக்கு அவர்கள் பிள்ளை.

இந்த வாழ்வை அவர்கள் சந்தோஷமாக தீர்மானித்து விட்டார்கள். ஆனால் யதார்த்த வாழ்வில் வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி பணமாச்சே!

இந்தச் சின்ன வயதில் ஆயிரங் கனவுகளை மனதில் தேக்கி மற்றவர்கள் போல் அவர்களும் வாழ நினைத்தும் அந்த ஆசைகளை விதி அறுத்தெறிந்ததால் இன்று அடுத்தவர் பார்வைக்குள் வேடிக்கைப் பொருளாக மாறியல்லவா வெந்து கொண்டிருக்கின்றார்கள்.

தன் போராட்டக் காதலை ஜெயித்து விட்ட திருப்தியில் அவன் தலைமுடியை கைகளால் மெதுவாகக் கோதி விடுகின்றாள்......

"ஸஹ்ரான் "

அவள் இதழ் ஆசையாய் குவிந்து மூடிய போது ரஞ்சித்தின் உதட்டோரம் லேசான புன்னகைக் கீறல்கள் !

"சஹானா....ம் ம்......நீ எனக்கு வைச்ச பெயர் ரொம்ப அழகா இருக்கு"

கணவன் கண்ணில் மிதக்கும் ஆச்சரியங்களையும் பெருமிதத்தையும் சேமித்தவளாய் தன் கவலைகளை உதிர்த்து நீண்ட நாட்களின் பின் அழகாய் சிரிக்கின்றாள் அவள்.....

அவர்களின் குற்றங்குறைகள் பெய்யும் மழையில் கழுவப்பட்டு புதிதாய் பூக்கும் நாளைய விடியல் தேடி அந்தக் காதல் சிட்டுக்கள் பறக்க தங்களை தயார்படுத்தத் தொடங்கினார்கள்


(வெறும் கற்பனையல்ல இது.........யதார்த்தம் பொறுக்கியெடுத்த நேசத்துடிப்புக்ளின் கரையேற்றம் !)

(2012.06.13 இன்று இந்த காதல் ஜோடியை நாம் இருக்கும் வீட்டில் சந்தித்தேன். முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்ட அவ்விளைஞன் அழகிய மார்க்க பற்றுள்ள இளைஞனாகக் காட்சியளித்தான். அக்குறணையிலுள்ள சில நல்ல முஸ்லிம் மார்க்கச் சகோதரர்களின் உதவியால் அவர்கள் கௌரவமான வாழ்க்கைக்குள் இணைவதற்காக சட்டப்படி திருமணம் செய்யப்பட்டு அவள் பெற்றோரிடம் இருவரும் சேர்க்கப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.............!
அவர்களின் வாழ்க்கையில் இனி என்றும் வசந்தங்கள் நிறையட்டும். வாழ்க்கையில் பிரச்சினை வந்தபோது தற்கொலை எனும்  கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாகச் செயற்பட்டமைக்கு அவர்கள் தன்னம்பிக்கையே காரணமாகும் )