2013/04/10
மனைவி அமைவதெல்லாம்
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
வானொலியில் ஜேசுதாஸ் அழகாகப் பாடுகின்றார். பாடலை ரொம்ப சுவாரஸியமாக ரசித்து மூழ்கிக் கிடக்கின்றான் ராஜா.......
"தம்பி நாங்க ரெடிப்பா..........டயம் ஆயிட்டுது"
அம்மா அவசரப்படுத்துகின்றபோதும், அந்த பாட
லின் லயிப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.
வாசலில் கார் வந்து நிற்கின்ற ஓசை மெதுவாக அதிர்கின்ற போது அம்மா இன்னும் பரபரப்பாகின்றாள்.
"டேய் அப்பா வந்தா என்னத்தான்டா ஏசுவார்... சீக்கிரம் வாடா"
அம்மாவின் அவசரம், அப்பாவின் எதிர்பார்ப்பு எதுவுமே அவனிடம் எடுபடவில்லை. மெதுவாக தன்னை ஆயத்தப்படுத்துகின்றான்..
"அம்மா...அண்ணா ரெடியாகிட்டானா"
தங்கையும் தனது பங்கிற்கு குரல் கொடுத்த போது, அதுவரையிருந்த பொறுமை அறுந்தது...
"என்னடி ..ரொம்பதான் அலட்டிக்கிறீங்க.....இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறது எனக்கு...உங்கட அவசரத்திற்காக என் வாழ்க்கையை பலியாக்க மாட்டேன், புரிஞ்சுக்கோ, என் இலட்சிய மனைவிய சந்திக்கப் போறன் இன்னைக்கு"
வாய்க்குள் சிரித்தான் அவன்....
"ம்ம்..பெரிய்ய்ய்ய்ய்......இவரு......உலகத்தில இவரு மட்டும்தான் இலட்சியத்துக்காக கல்யாணம் முடிக்கிற மாதிரி"
அவர்களின் உணர்வலைகளை தந்தையின் குரல் தடுத்து நிற்க, அவனின் பொண்ணு பார்க்கும் பயணம் தொடர்ந்தது..
கார் உரிய இடத்தை நின்ற போது, அவனுக்கு மலைப்பாக இருந்தது. பெரிய இடத்துச் சம்பந்தம்..அப்பா தன் வசதிக்கு ஏற்ற பொண்ணத்தான் தெரிவு செய்திருக்கிறார்.....வருங்காலக் கனவு மெல்ல திரை விரித்தது.
மனசுக்குள் மகிழ்வு முகிழ்க்கும் போது சந்தியா கண்ணீருடன் எட்டிப் பார்த்தாள்.
மூன்று வருட முகநூல் காதல்........!
உயிர் , உணர்வுடன் பிணைந்து பல டயலாக் பேசி, கடைசியில் அவள் ஏழை என்றதும் காணாமல் போன தன் சுயநலம் சற்று வலித்தது.
"சொறீடி....சந்து, எனக்கு வேற வழியில்ல....காதல் கத்தரிக்காயெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது"
கடந்து போன காலத்தை மீண்டும் தனக்குள் வெளிக்கிளம்பாமல் தடுத்தவாறு, மெல்ல தன் தலையை நிமிர்த்தினான்...
தனக்கு தேநீர் கோப்பையை நீட்டிக் கொண்டிருக்கும் வருங்காலத்தை நேரில் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு எகிறிக் குதிக்க................
அவள் பார்வையில் இவன் பார்வை மோதி நின்றபோது..................
"சந்தியா"
அதிர்ந்தான்.....அவளேதான்...
அப்போ........நீ........நீ!
"நானோதான் நீங்க வேணாமென்று சொன்ன அவளேதான், வாழ்க்கையில பணம் வேண்டும்தான் ஆனால் அதுல வெறி இருக்கக்கூடாது. உங்களப் பற்றி அறியத்தான் நான் ஏழைன்னு பொய் சொன்னேன். பணமில்லாதவங்ககிட்ட பாசமோ உணர்ச்சியோ இருக்காதுன்னு நெனைக்கிறீங்களா, "
அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கூறியவள், எல்லோருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் கூறினாள்..........
"அப்பா எனக்கு இவரப் பிடிக்கல"
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
பாடல் எங்கோ ஒலிக்கும் பிரமை!
Subscribe to:
Post Comments (Atom)
அடடா....! இப்படி ஆகி விட்டதே... நல்லது...
ReplyDelete