"இந்த அநியாயத்த கேட்க ஆருமில்லையா"
காற்றோடும் உரசும் தாயின் அலறலும், வார்த்தைகளில் "இடி" யை இணைத்துக் கொண்ட தந்தையின் வீரமும் நெஞ்சத்தினை பிறாண்டவே கண்களை இறுக்க மூடுகின்றேன். நான் இவ்வுலகத்தில் கண்ட மிக மோசமான மிருகம் அவர்தான். என் சின்ன வயதில் முகிழ்த்த கனவையெல்லாம் அறுத்தெறிந்த வீரர். என் பெற்றோர் இருவரும் குணங்களால் முரண்படும் ஈர் துருவம். ஒருவர் கூறுவதை மற்றவர் குறை, குற்றம் காணும் மானசீக நோயாளிகள். இவர்கள் அடிக்கடி தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் சண்டை பிடிக்கும் போது நானோ மன சறுந்தவளாய் மௌனித்து என் அறைக் கதவைத் தாழித்து விக்கலோடு கரைந்து விடுவேன். இது என் அன்றாட நிகழ்வு
இன்றும் சண்டைதான் பிடிக்கின்றார்கள். மௌனித்துக் கிடப்பதைத் தவிர வேறெதும் தெரியவில்லை.
தந்தையின் பாசத்துக்காய் ஏங்கிய போராட்டங்களெல்லாம் நாளடைவில் அவர் மீதான வெறுப்பாய், விரக்தியாய் மாறிக் கிடப்பதைக் கூட அறியாதவராய் அவர் ...............
எனக்கும் அப்பாவுக்குமிடையிலான இடைவெளி நீள நீள குடும்பத்திலிருந்து மெது மெதுவாக விலகிக் கொள்ளும் பிரமை.......
"சந்தோஷம் எப்படி இருக்கும்"
உணர்வுபூர்வமாக விடை தெரியாத வினாவுக்குள் என் மனம் சிக்குண்டு பல நாட்கள். சந்தோஷங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றக் குடும்பத்தினரைக் காணும் போதெல்லாம் நெஞ்சவெளியின் பசுமையை பொறாமை மயானமாக்கிக் கொண்டிருந்தது..
தலை நரம்புகள் விண்ணென வலிக்க, மனசின் வலி கண்ணீராய் கரைந்து கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.
எத்தனை நாட்கள் தான் இந்த நரக வேதனை.............
நினைவு தெரிந்த காலமுதல் இந்தத் தாய் படும் அவஸ்தையும், கண்ணீரும், புலம்பலும் முடிவுறாத தொடர்கதைகள்.................
என் வாலிப வோரங்களில் வந்த காதல்களில் சுருளாமல் தப்பித்துக் கொண்ட வீரத்தனம் இந்த வில்லங்கத்திற்காகத்தானா...........
கண்களை மூடுகின்றேன்...............மீண்டும் கோரங்களின் அரங்கேற்றம் மனக் கண்ணில் !
"தாயின் தலைமுடிச் சிதறலை தந்தையின் கரங்கள் மூர்க்கத்தனமாகப் பற்றிப் பிடித்து சுவரில் மோதி சிதறிய ரத்தத்துளிகளால் அவர் விரல்களே சிவக்க"
"ஐயோ.......விடுங்கப்பா..........அம்மா பாவம் "
தடுக்க முயன்ற என்னிடம் அவர் ஆத்திரம் திரும்ப, அன்று நானும் உடல் புண்ணாகி காயங்களுடன் அம்மாவுக்கருகில் குற்றுயிராகிக் கிடந்தேன்.....
கதறல் பூச்சியமான நிலையில் இப்பொழுது நாங்களும் ஊமையாகி மரத்துப் போனோம்...
ஒவ்வொரு அழிவிலும் தான் புது விடியல் உருவாக வேண்டும்..அந்த விடியலின் குளிர்ச்சி தந்தையின் மரணத்திலா?
ஆனால் அதற்கிடையில் என் இளமை மனசு கரைந்து விடும். இருந்தும் நானும் முடிவு தெரிந்த பயணத்திற்காக பக்குவப்பட வேண்டியதாயிற்று!
தான் விடுகின்ற தவறுகளுக்கெல்லாம் எம்மீது காரணம் தேடும் இந்தத் தந்தை என் பாவப்பட்ட வாழ்வின் சேமிப்பு............!
மனம் அடிக்கடி புலம்பத் தொடங்கியது. எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. தனிமையைத் தவிர !
தந்தையின் முழக்கமும், அதனைத் தொடர்ந்து தன் புலம்பலை என்னிடம் கொட்டித் தீர்க்கும் தாயும் என் வாழ்வின் போக்கினை மாற்றி, மனசை வெறுமைப்படுத்தி விட்டனர். பிடிப்பற்ற வாழ்க்கை. மரணம் அண்டும் வரை வாழத்தான் வேண்டும்.........
பெற்றவர்களை உதற முடியவில்லை. என்னையிந்த மாயத்திலிருந்து மீட்கவும் யாருக்கும் துணிவுமில்லை. இறை பிரார்த்தனை மட்டுமே ஆறுதலாய் தோழமையோடு ஒட்டிக் கொள்ள அந்நியப்பட்டுப் போனேன் நிம்மதியான வாழ்விலிருந்து........
"உம்மா"
தந்தையின் கொடுமையால் கதறிக் கொண்டிருந்த தாயின் பார்வை என்மீது விழுந்தது..
"முடியலம்மா...................ரொம்ப தலைவலிக்குது.....நெஞ்சு கூட நோகுற மாதிரி இருக்கு "
வார்த்தைகளை நான் சிரமப்பட்டு கோர்த்த போது, தாய் நடுங்கிப் போய் தன் சோகத்திலிருந்து கழன்று வெளியே வந்தார்.
"ஏன்டீ................என்னை நீயும் கொடுமைப்படுத்துற.......வாடீ டாக்டர்கிட்ட போகலாம்"
தாய் வற்புறுத்தி அன்றைய தினமே என்னை டாக்டரிடம் சேர்க்க, வைத்திய பரிசோதனை முடிவு என் வாழ்வின் விதிக்கு முன்னுரையாய் அமைந்தது......
"டாக்டர் .......என் புள்ளக்கு.........................."
தாய் தன் வார்த்தைகளை முடிக்காமல் விம்மினார்....அவருக்குள்ள ஒரே ஆறுதல் நான்தானே!
அழுது விடுவேனென்று அடம்பிடிக்கும் குரலில் தாய் கேட்கும் போது டாக்டர் மெதுவாக சொல்லுவது எனக்கும் புரிகிறது................
"ஓ........ப்ளட் கான்சரா..............ரொம்ப நோய் தீவிரமாகிட்டுதோ.........இன்னும் கொஞ்ச நாள்ல போய்ச் சேர்ந்திடுவேனோ "
டாக்டர் சொல்லச் சொல்ல உம்மா அழும் சத்தம் கேட்கிறது.
உம்மா அழுகின்றார்.......நானோ சிரிக்கின்றேன்.........
"இனி வாப்பாட கொடுமை இல்ல.....உம்மாட கதறலும் புலம்பலும் நெஞ்சுக்குள்ள இறங்கப் போவதில்லை...........சமூகத்தோட விமர்சனங்களும் நெருங்கப் போவதில்லை "
எனக்கென்று நாளை யாருமே இல்லாத இந்த வாழ்வில் என் தாயின் கண்ணோட போய்ச் சேர்ந்தா ஒரு சொட்டுக் கண்ணீராவது என் இத்தனை நாள் வாழ்வுக்காக கிடைக்கும்.
விழிகளை மீள இறுக்கிப் பொத்துகின்றேன்.............சூடான கண்ணீர் என் கன்ன வரம்பிலிருந்து மெதுவாக கசிகிறது..........
இது ஆனந்தக் கண்ணீரல்ல......அவலக்கண்ணீர்.............
என் இழப்பால் தாய்க்கேற்படும் அவலத்தை நினைந்து திர்ந்த வலிக்கண்ணீர்...
கண்களைத் திறக்க மனமின்றி. மீண்டும் மூடிக் கொள்கின்றேன் விரக்தியாய்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!