About Me

2012/06/09

விடியல்



(சிறுகதை)
-----------------------------
வானத்தைத் துண்டாக்கும் வக்கிரத்தில் இடி காதைப் பிளந்து கொண்டிருந்தது.

"யா அல்லாஹ்"

அச்சத்தின் நாடிப்பிடிப்போடு சஹானாவின் உதடுகள் குவிந்து மடிந்தன. இயற்கையின் அக்கிரமத்தைக் கண்டும் சிறிதளவும் அஞ்சாதவனாய் சோகத்தில் வான் விட்டத்தை அளந்து கொண்டிருக்கும் தன் கணவனை வலியோடு பார்த்தாள்.

"உங்களுக்கு பயமில்லையா உள்ள வாங்கோ"

அவள் குரல் கேட்டு அவன் சிரித்தான்.

" சஹா............இன்னும் நாம வாழணும் என்று நினைக்கிறீயா"

அவன் கேட்டபோது அவள் நெஞ்சு பிளந்தது. அவனைக் கட்டித் தழுவி வெம்மினாள்.

"தெரியலீங்க..........வாழ வழி தெரியலீங்க"

அமிலம் சுரக்கும் விழிகளை கண்ணீரால் கழுவினார்கள் இருவரும்.

"வெட்ட வெளிகளில் இடிகொட்டும் போது நிற்பது ஆபத்து..."

மனவெளிகளில் எப்போதோ சொன்ன விஞ்ஞான ஆசிரியை வந்து போனார். வாழ்க்கையில் நிரப்பப்படும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகும் போது கனவுகள் மட்டுமல்ல வாழ்க்கையின் பிடிப்புக்களும் கூட அற்றுப் போய் விடுகின்றதே!மரணம் கூட அச்சப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு வலிமைகள் எளிமையாகி விடுகின்றன.

எங்கோ தொலைவில் ஒலித்த அதான் ஓசை அவளை வசப்படுத்திய போது கண்கள் பனித்தது. கணவன் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.

"சஹா...அழுகிறீயா" 

அவன் கேட்டபோது அவசரமாக மறுப்புத் தெரிவிக்க முயன்றவள் தோற்றுப் போனாள். நெஞ்சம் விம்மியது. எத்தனை முறைதான் அவர்கள் மாறி மாறி இந்த அழுகையை அழுவதும் அடக்குவதுமாக இருப்பார்கள். எப்படித்தான் மனதை கல்லாக்கி இறுக்கினாலும் பாசத்தை உடைத்தெறிய முடியவில்லை. உம்மா, வாப்பா, அழகான தங்கச்சி பாத்திமா அடுக்கடுக்காய் மனதை நிறைத்துப் போனார்கள்.

வசந்தம் அறுக்கப்பட்ட பொழுதுகள் ஏன் அவர்களுக்கு மட்டும் அனல் பொழுதாக மாறியது. இத்தனைக்கும் அவள் செய்த தவறுதான் என்ன.......
காதலிப்பது தவறா......இல்லை அவள் காதல் தவறா!

இந்த ஆறு மாதங்களாக விடை காணமுடியாத பல வினாக்கள் மட்டுமே அவளுக்குள் சொந்தமாகிக் கொண்டிருக்கின்றன அவனைப் போல!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது..உதிர்ந்து விட்ட ஞாபகங்கள் மட்டும் தான் அவர்களுக்குள் உயிர்ப்பாக இருக்கின்ற சொந்தம்.

அவனைச் சந்தித்த அந்த முதல் சந்திப்பு இன்னும் நெஞ்சுக்குள் சிலிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.....

"கெதர கௌத இன்னே"

உரத்த குரலில் வீட்டுத் தெருக் கதவு படபடக்கும் சப்தத்தில் அவள் விறைத்துப் போனாள். அவள் தங்கையைத் தவிர வீட்டில் யாருமே இல்லை.....பீதிப் பட்டாம் பூச்சிகள் அவளுக்குள் சுதந்திரமாக சிறகடிக்க ஆரம்பித்தாலும் கதவு தட்டப்படும் ஓசை விடுவதாக இல்லை.கதவை மெதுவாகத் திறந்து குரலை மட்டும் வெளியே அனுப்பினாள்.

"கௌத"

" பண்டா.............இன்னவத"

".இங்க அப்படி யாருமில்ல........நீங்க தவறா வந்திட்டீங்க....ப்ளீஸ் போயிடுங்க"

சிங்களத்தில் பதில் வார்த்தைகள் அவளிடமிருந்து உதிர்ந்தன. அவள் குரல் பதற்றப்பட்ட போதும் அவன் அவளை ரசித்திருக்க வேண்டும். ஆணி அடித்தாற் போல் அதே இடத்தில் நின்றிருந்தான்..

"சீக்கிரம் போங்க. யாராவது வந்தா தப்பா நெனைப்பாங்க"

அலறிய அவளின் அப்பாவித்தனத்தை அவன் ரசித்தான்.

"நான் ஒன்னும் உங்கள விழுங்க மாட்டேன். பயப்படாதீங்க. என் ப்ரெண்ட தேடி வந்தேன். கொஞ்சம் குடிக்க தண்ணீ தாரீங்களா "

"ம் ம்"

அப்போதுதான் அவனை அவளும், அவளை அவனும் பார்த்தார்கள். மின்னல் பார்வை. ஓர் நொடியில் நெஞ்சில் ஆணியடித்தது. ஆண்களைக் கண்டால் அலறும் அவளா அவனிடம் மோகித்தாள். இதுதான் கண்டதும் காதலா .விதியின் கோர விளையாட்டா...

தனக்குள் சிரித்தாள். அந்தச் சிரிப்பே அவனுக்குள் இரசாயன மாற்றத்தை தந்தது. புன்னகைகள் இடமாறின. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கூடவே அவனது தொலைபேசி இலக்கத்தையும் அவள் ரகஸியமாகப் பொத்திக் கொண்டாள்....

மாதங்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. அவள் கனணிக் கற்கை படிக்கும் இடத்திலேயே அவனும் கற்க ஆரம்பித்தான். காதல் நீரோட்டம் யாருமேயறியாது ரகஸியமாய் பசுமையாக அவர்களை வருடத் தொடங்கியது. ஒரு வருட ரகஸியக் காதலால் அவள் அவனிடம் முழுமையாகவே தன்னை ஒப்படைத்திருந்தாள்.

காதலையும் புகையையும் மறைக்க முடியாது என்பார்களே. அவளுள் ஏற்பட்ட மாற்றம் வீட்டில் பதற்றமானது......

"ஏய்....உண்மையைச் சொல்லு.........அவன்கூட உனக்கென்ன பேச்சு, யாரடி அவன் "

தகப்பன் வார்த்தைகளால் சுட்டெறித்த போது,  தாய் வாய் விட்டுப் புலம்பினாள். திட்டினாள்...

"பாவி.....படுபாவி..........மானத்தை இப்படி குழிதோண்டி புதைச்சிட்டீயே! போயும் போயும் ஒரு சிங்களவன் கூட........ச்சீ......உன்ன புள்ளன்னு சொல்லவே வெட்கமா இருக்கு அவன் கூடவே போய்த் தொலையடீ.....எங்க முகத்தில முழிக்காம போ"

அவன் நேசிப்பால் அவள் குடும்பம் அவளை சித்திரவதை செய்தது. தந்தை அவசர அவசரமாக உறவுக்குள் ஓர் மாப்பிளையைத் தேடிப் பிடித்தார். அவசர அவசரமாக நாளும் குறித்தனர். சஹானா துடித்தாள். ரஞ்சித் இல்லாத வாழ்வை கற்பனை பண்ணக் கூட அவளால் முடியவில்லை. அவள் வீட்டுக் கட்டுக்காவலை மீறி அவனைச் சந்திக்க முடியவில்லை. துரும்பாகிப் போனாள். அவள் கல்யாண வேலைகளில் பெற்றோர் தம்மை மறந்த ஓர் பொழுதில் தன் சிறைக்கூடத்தை பிய்த்து வெளியே பறந்தாள்.

"ரஞ்சித் உங்களப் பிரிந்து என்னால வாழ முடியாது"

"சஹா உனக்குப் பைத்தியமா........நான் மட்டும் என்னவாம், வா....நாம எங்க வீட்டுக்குப் போகலாம். அம்மாட்ட சொல்லுறேன். அவங்க நம்ம அன்ப புரிஞ்சுக்குவாங்க"

நம்பிக்கையூட்டினான். யார் கண்ணிலும் படாமல் ரஞ்சித் தன் வீட்டுக்கு அவளோடு போன போது அங்கும் போராட்டம் வெடித்தது. இறைவன் சேர்த்து வைத்த உறவை, அன்பை பிரிக்க மனிதர்கள் போராடினார்கள்.

"சஹாவ என்னால மறக்க முடியாது அம்மா"

ரஞ்சித் அழுதான். தாய் அனலானாள். ஊரையும் தன் மதப் பெரியவர்களையும் அழைத்து அவன் இறந்து விட்டானென மரணச் சடங்குகளை நடாத்தினர்.....

ரஞ்சித் உயிரோடு உணர்வுகளால் கொளுத்தப்பட்டான். இருவரும் ஊரை விட்டு வெளியேறினார்கள்....எங்கே போவது....யாரிடம் போவது...........

குடும்பம் காப்பாற்ற தொழிலோ வயதோ அனுபவமோ இல்லாதபோது எப்படி எங்கே வாழ்வைத் தொடங்குவது...........

புதிருக்குள் இருவரும் பதுங்கிக் கொண்டனர். நடோடிப் பயணமாய் ஒவ்வொரு ஊராய் இருப்பிடம் தேடி அலைந்ததில் முழுசாய் மூன்று மாதங்கள் கழிந்தன. அவனிடமிருந்த சொற்ப சேமிப்பு, அவளிடம் ஒட்டியிருந்த நகைநட்டுக்கள் எல்லாம் கரைந்த போதுதான் வாழ்க்கை பற்றிய அச்சம் அவர்களைப் பிண்ணத் தொடங்கியது. தாமாகவே தமக்குள் கணவன் மனைவியாக வாழ்வைப் பகிர்ந்ததில் அவள் வயிறு ஊதிப் பெருத்தது. தாய்மையின் செழிப்பைக் கண்டு ரஞ்சித்தால் பூரிக்கமுடியவில்லை. வறுமை அவர்கள் சந்தோஷத்தை விழுங்கியது. அறிந்தவர் அனுதாபப்பட்டோர் நண்பர்கள் தயவில் சுருண்டு கொண்ட இந்த நாடோடி வாழ்வுக்கும் முடிவு காலம் நெருங்கிய போது ரஞ்சித் அச்சப்பட்டான்.

"சஹா எனக்குப் பயமா இருக்கு. இந்தப் போராட்டத்தில நாம தோத்துடுவோமோன்னு பயமா இருக்கு"

அவன் நம்பிக்கையிழந்த போது அவள் அவனுக்குள் தெம்பூட்டினாள்.

"ரஞ்சித் நாம இப்படி இருக்கிறது நம்மட எதிர்காலத்துக்கு நல்லமில்ல. சட்டப்படி கல்யாணம் செய்யணும். நீங்க எங்க மதத்திற்கு வரணும்"

அவன் அவளின் ஆசைகளை நிராகரிக்க வில்லை. அந்த நல்ல நாளுக்காக காத்திருந்த போதுதான் எதிர்பாராதவிதமாக காதர் மாஸ்டர் அவர்களுக்குள் அறிமுகமானார்.

"தங்கச்சி.......இன்னும் ரெண்டு நாளைக்குள்ள உங்க கல்யாணத்த நம்ம மதப்படி செய்யணும். அதுக்கு முன்னர் தம்பிய நம்ம மதத்திற்கு மாற்றணும். எல்லாம் நல்லபடியா நடக்கும். ஒருபிரச்சினையும் வராம நான் முன்னுக்கு நின்னு உங்க கல்யாணத்த செய்ஞ்சு வைக்கிறன். நடந்தது நடந்து போச்சி. எனக்குத் தெரிஞ்ச நண்பர் வீட்டில உங்கள ரெண்டு நாள் தங்க வைக்கிறன். அப்புறம் மத்தத யோசிப்பம்"

காதர் மாஸ்டரின் வார்த்தைகள் அவள் கண்ணுக்குள்ளிருந்து கண்ணீரைப் பிழிந்தது. முன்பின் அறியாத இந்த சகோதரனை படைத்தவன் தான் வழிகாட்ட அனுப்பி வைத்ததாக நினைத்து உருகி நின்றாள்...

காதர் மாஸ்டர் தான் சொன்னபடியே அவர்களை தன் நண்பர் வீட்டில் தங்க வைத்தார்.

புது சூழல்,  புதிய மனிதர்கள். தாங்கள் குற்றம் செய்ததாக எண்ணி விமர்சனப் பார்வையால் தம்மைத் துளைக்கும் அயலாளர்களை வெட்கத்துடன் தவிர்த்தாள். தவிர்த்தார்கள் !

"டீ......கொழுப்பு பிடிச்சு சிங்களவன் கூட ஓடி வந்திட்டாளாம், மானங் கெட்டதுகள்.....தூ, .......இத விட செத்து போயிருக்கலாம்"

யார் யாரோ அவர்களை சபித்த போது மௌனமாய் அழத்தான் முடிந்தது...

அவர்களைப் பொறுத்தவரை இந்தக் காதல் சமூகக் குற்றம். மதத்திற்கு செய்யும் மகா துரோகம்! சபிக்கிறார்கள். உடுத்த உடுப்புமின்றி, பசிக்கு உணவுமின்றி இருக்கும் போது உதவாதோர் எல்லாம் விமர்சிக்கின்றார்கள்..

"எங்கள் அன்பை, அவர் எனக்காக தன் மதத்தைத் துறக்கும் அந்த அன்பை யாருமே புரிந்து கொள்ளவில்லை . புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
வேண்டாம் எங்களுக்கு யாருமே. காதர் மாஸ்டர் போல் வாழும் ஒரு சிலருள்ள உலகம் எங்களுக்குப் போதும்"

அவள் உணர்வுகள் கொதித்தன.

"தங்கச்சி...........நாளை காலைலதான் உங்களுக்கு சடங்கு செய்யப் போறாங்க.தம்பி நீ பதற்றப்படாம அவங்களுக்கு ஒத்துழைக்கணும் "

வீட்டுக்கார நோனா ராத்தா பழகிய ஒருநாள் பாசத்தை பரிவோடு பரிமாறினார். நாளை ரஞ்சித்துக்கு "சுன்னத்" எடுப்பார்கள். அவனை நினைத்து தனக்குள் சிரித்தாள். அன்பின் முன்னால் அந்த வலியெல்லாம் அவனுக்கு சாதாரணம். அவளுக்கு அது தெரியும். பெருமையோடு பார்த்தாள். அவன் அவளுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தான்.

விடிந்தால்.................அவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் கறை ஓரளாவது அகற்றப்படும். ரஞ்சித்தை நேசத்தோடு பார்த்தாள். நாளை அவன் அவளுக்கு சட்டபூர்வ கணவன். இனி அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. மற்றவர்களைப் போல் அவர்களும் சந்தோஷமாக வாழலாம். அவளுக்காக எல்லாவற்றையும் துறந்து இன்று அவன் மட்டுமே அவள் உலகமாகி..............அந்த உலகம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

அவள் மேனிபட்டு தெறித்த மழையில் சிந்தனை கழன்றது. அவனும் மழை பெய்வது தெரியாமல் தூவாணத்தில் நனைந்து கொண்டிருந்தான்.....

" உள்ளுக்கு வாங்க.........." 

அவள் கையைப் பற்றியிழுத்த போது அவன் லேசாக முறுவலித்தான்...

"பயந்துட்டீயா சஹா......நான் செத்திடுவேனென்று......நம்ம நிராகரிக்கிறவங்க முன்னால நாம வாழ்ந்து காட்டுற வரை உன்ன விட்டு போகமாட்டேன்டா"

அவன் சொல்லச் சொல்ல சிறுகுழந்தையாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். கண்கள் பனித்தன.

அவளுக்கு அவன்........அவனுக்கு அவள்.............அவர்களுக்கு அவர்கள் பிள்ளை.

இந்த வாழ்வை அவர்கள் சந்தோஷமாக தீர்மானித்து விட்டார்கள். ஆனால் யதார்த்த வாழ்வில் வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி பணமாச்சே!

இந்தச் சின்ன வயதில் ஆயிரங் கனவுகளை மனதில் தேக்கி மற்றவர்கள் போல் அவர்களும் வாழ நினைத்தும் அந்த ஆசைகளை விதி அறுத்தெறிந்ததால் இன்று அடுத்தவர் பார்வைக்குள் வேடிக்கைப் பொருளாக மாறியல்லவா வெந்து கொண்டிருக்கின்றார்கள்.

தன் போராட்டக் காதலை ஜெயித்து விட்ட திருப்தியில் அவன் தலைமுடியை கைகளால் மெதுவாகக் கோதி விடுகின்றாள்......

"ஸஹ்ரான் "

அவள் இதழ் ஆசையாய் குவிந்து மூடிய போது ரஞ்சித்தின் உதட்டோரம் லேசான புன்னகைக் கீறல்கள் !

"சஹானா....ம் ம்......நீ எனக்கு வைச்ச பெயர் ரொம்ப அழகா இருக்கு"

கணவன் கண்ணில் மிதக்கும் ஆச்சரியங்களையும் பெருமிதத்தையும் சேமித்தவளாய் தன் கவலைகளை உதிர்த்து நீண்ட நாட்களின் பின் அழகாய் சிரிக்கின்றாள் அவள்.....

அவர்களின் குற்றங்குறைகள் பெய்யும் மழையில் கழுவப்பட்டு புதிதாய் பூக்கும் நாளைய விடியல் தேடி அந்தக் காதல் சிட்டுக்கள் பறக்க தங்களை தயார்படுத்தத் தொடங்கினார்கள்


(வெறும் கற்பனையல்ல இது.........யதார்த்தம் பொறுக்கியெடுத்த நேசத்துடிப்புக்ளின் கரையேற்றம் !)

(2012.06.13 இன்று இந்த காதல் ஜோடியை நாம் இருக்கும் வீட்டில் சந்தித்தேன். முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்ட அவ்விளைஞன் அழகிய மார்க்க பற்றுள்ள இளைஞனாகக் காட்சியளித்தான். அக்குறணையிலுள்ள சில நல்ல முஸ்லிம் மார்க்கச் சகோதரர்களின் உதவியால் அவர்கள் கௌரவமான வாழ்க்கைக்குள் இணைவதற்காக சட்டப்படி திருமணம் செய்யப்பட்டு அவள் பெற்றோரிடம் இருவரும் சேர்க்கப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.............!
அவர்களின் வாழ்க்கையில் இனி என்றும் வசந்தங்கள் நிறையட்டும். வாழ்க்கையில் பிரச்சினை வந்தபோது தற்கொலை எனும்  கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாகச் செயற்பட்டமைக்கு அவர்கள் தன்னம்பிக்கையே காரணமாகும் )
         

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!