About Me

2012/07/30

என் வாழ்வு உன்னோடுதான்



"கிறீச்"

கார் வீதியுடன் உரசி நின்றது. வாசலை எட்டிப் பார்த்த அம்மா பரபரப்பானார்.

"டேய் ......ராஜா.....தம்பி வந்துட்டான்டா.....சீக்கிரம் ரெடியாகுடா"

அம்மாவின் பரபரப்பை விட என் இருதயத்துடிப்போசை மிகையானது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாமாவின் வீட்டில் தான் எமக்கு விருந்து. மாமா என் தாயின் ஒரே தம்பி என்பதால் ராஜ மரியாதை எமக்கு அடிக்கடி கிடைக்கும். மாமாவுக்கு ஒரே பொண்ணு ஹீரா அவள் அழகும், அடக்கமும், அறிவுச் செழுமையும் என்னை விட அதிகமாக இருந்தாலும் கூட அம்மாவின் கற்பனையில் அவளே "என்னவளாகி"  ரகஸியமாகி ஆக்ரமிப்பதும் எனக்குத் தெரிந்தாலும் நானதை வெளிக்காட்டாத நல்ல பிள்ளையாகவே இருந்தேன்.

ஆரம்பத்தில் இந்தப் பயணம் இம்சையாக இருந்தாலும், நாளடைவில் எனக்குள்ளும் ஆர்வம் அதிகரிக்குமளவிற்கு "ஹீரா" என்னை ஆக்கிரமித்துக் கிடந்தாள். அவள் மாமாவின் அன்புச் செல்வம். பளபளக்கும் அவள் வனப்பு மேனியும் நிறமும் என்னை அவள் வசப்படுத்தியது. தினமும் அவளைப் பார்க்க மனசு துடிக்கும். இருந்தும் அதற்கான வாய்ப்பென்னவோ ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.!

மாமா வீட்டுக்குப் போனாலோ என் பார்வை ஹீராவைச் சுற்றி சுற்றியே வரும். அவள் அழகை விழி இமைக்காமல் பார்ப்பதும், யாரும் பார்க்காத போது அவளை என் கரங்களுக்குள் சிறைப்படுத்துவதும்.............."ஹீரா" எனக்குத்தான் என பித்தாகி மோகித்துக் கிடப்பதும் தொடரான உணர்வலைகளாயிற்று..

"வாங்க அண்ணி..........தம்பி"

மாமியின் குரலலையில் நினைவுகள் அறுந்தன..

"என்ன மாப்பிள்ள....ரொம்பத்தான் வெக்கப்படுறீங்க போல"

மாமாவின் சீண்டலை விட, ஹீராவையே என் மனம் உள்வாங்கியது. பார்வையால் அவளைத் துலாவினேன்.."ம்ஹூம்" மனசு ஒரு கணம் குவிந்து சுருங்கியது..

அவள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். அவள் பெரும்பாலும் மாமாவின் அறையிலேயே இருப்பாள்..ஏதேதோ சாட்டுச் சொல்லி மாமாவின் அறைக்குள் மெதுவாக நுழைந்தேன்.

அந்த அழகு தேவதையின் பூவிழி மூடிக்கிடந்தது..என் காலடி அரவம் கேட்டு மெதுவாய் பார்வை திறந்து என்னை ஊடுறுவும் எக்ஸ் கதிராய் அவள் மாற, எங்கள்  விழிகள் சந்தித்துக் கொண்டன......

"ஹீரா"

"மச்சான்"

வேறு வார்த்தைகளை மறந்து போனோம்.

"நீ என் செல்லம்டீ நீ எனக்கு வேணுமடி....உன்ன இன்னைக்கு வீட்ட கூட்டிட்டுப் போகப்போறன்"

உணர்ச்சிவசப்பட்டேன்..அவள்  மை என் கரங்களில் பரவிச் சிலிர்த்தது.

"ராஜா"

எங்கள் தனிமையைக் கிழித்தவாறே மாமா குரல் எழுப்பினார்..ஹீராவைத் தள்ளிவிட்டேன் அப்பால்.....அம்மாவோ தன் கொதிநிலையை உயர்த்தினார்..

"ஐயோ ஐயோ......ஏன்டா இந்தத் திருட்டச் செய்றே......எத்தனை நாளடா இது நடக்குது உன் ஆசையில மண் போட"

அம்மா தன் தோளை விட வளர்ந்த என்னை திட்டத் தொடங்க நானோ, தலை கவிழ்ந்து குற்றவாளியாய் உருகிக் கொண்டிருந்தேன். அம்மாவின் ஆத்திரம் கன்னத்திலும் அடியாய் இறங்கியது..

"அக்கா விடக்கா....சின்னப் பையன்தானே....ஏதோ ஆசைல தப்பு செய்திட்டான், அவன்ர ஆசைய நாம பெரியவங்க தான் தீர்க்கணும்"

மாமா சொல்லச் சொல்ல  அம்மாவின் அடி கூட வலியை மறந்தது..

"ராஜா.........உனக்கு ஹீரா வேணுமா"

மாமா கேட்கக் கேட்க பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

வெட்கத்துடன் நான் கொடுத்த சம்மதத்தில் ஹீராவை என் கையில் இணைத்தார். அந்த ஒரு நொடி என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள். அவளை என் தனிமைக்குள் இழுத்து வந்து முணுமுணுத்தேன்..

"என் வாழ்வு உன்னோடுதான்"

உரிமையாளனாய் புளாங்கிதத்தில்  அவள் மேனியை என் கரங்களால் ஸ்பரிசித்து  என் உணர்வை அவளிடம் புகுத்தி காகிதத்தில் எழுதத் தொடங்கினாள்....

."என் வாழ்வு Pen னோடுதான்"


"ஹீரா.............வேற யாருமல்ல...என் மாமா வைத்திருந்த ஹீரா பென் தான். 

நான் ஆசைப்பட்டது  என் மாமா மகள் "ஹீரா"  வைத்தான் என நீங்க நினைச்சா அதற்கு நான் பொறுப்பல்ல....ஏனென்றால் என் மாமா மகள் அமெரிக்காவில் உயர் படிப்புக்காகச் சென்று மூன்று வருஷமாச்சு..........எனக்கே அவள மறந்து போச்சு.......நீங்க வேற........

எனக்கு இந்த ஹீரா பேனை போதும் !


2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!