About Me

2020/07/20

திகில் பயணம்

 வெண்பனி சூழ்ந்திடும் வெள்ளிடை மலையை
வெருட்டிடும் ஆதவன் வெம்மைக் கதிர்கள்
உருகிடும் பனியால் உறையுது நீரும்
துருவத்தின் குளிர்மையில்  விறைக்குது படகும்

நடுங்கும் குளிரோடையில் துடிக்குது படகும்
தடுமாறும் மனங்களும் தவிக்குது வலியில்
இடுக்கண் தந்திட்ட  இயற்கையின் எழுச்சி
வடுவொன்றைத் தந்தே  வாழ்வாகிப் போனது

மலை தழுவும் அழகு  நீரோட்டமே
விலையில்லா உயிர்களுக்கது மரண போராட்டமாம்
தள்ளாடும் படகும் தாங்கிடும் மாந்தர்
உள்ளத்தின் வலிமை கரையொதுக்கி களிப்பூட்டும்

ஜன்ஸி கபூர்   


2020/07/19

ஆற்றல் கொள்

ஆற்றல்_கொள் அவனிக்குள் அடையாளமாய்/
 ஊற்றாய் மாறியே ஊட்டமிடு வளங்களைத்தான்/
காற்றின்  மொழியுடனே சேற்றிலும் பலனுண்டே/
போற்றுவார் உன்னையே பெண்மையாய் நிமிர்ந்திடு/

ஆளுமை வளர்த்திட்டால் அண்டமும் தலைசாய்க்கும்/
ஆழிப்பேரலையும் அடங்குமே அறிவின் துணையுடன்/
அஞ்சாமல் பணியாற்று மானுடம் பெருமையாகும்/
ஆக்கங்கள் படைத்திடவே சிந்தனையைக் கூராக்கு/

தன்னம்பிக்கை கொண்டெழு திறமைகள் உனதாகும்/
வென்றெடுப்பாய் விருதுகளே சாதனைகள் சரித்திரமே/
சென்ற விடமெல்லாம் முன்மாதிரி நீயன்றோ/
கொண்டாடும் மாந்தரெல்லாம் பின்வருவார் அன்போடு/

வேராகத் தாங்கிடு ஊரே போற்றிடுமே/
போராடும் வாழ்வினிலே வலியும் வல்லமையே/
நாரும் துணைதானே மாலையாய் பிறப்பெடுக்க/
பாருக்கும் தெரியட்டும் ஆற்றலோடு வாழ்ந்திடு/

ஜன்ஸி கபூர் 

நல்வாக்கு


தூய்மை கடைப்பிடித்தால் தேகம் சுகமாகும் 
வாய்மை வாக்கினிலே வாழ்வும் மகிழ்வாகும் 
நேர்மை உழைப்பினிலே மனிதமே பிறப்பெடுக்கும் 
தாய்மை நெஞ்சினிலே அன்பே ஊற்றெடுக்கும் 


ஜன்ஸி கபூர்  



காதலெனும் மலர்வனம்

காதலெனும் மலர்வனத்தின் காத்திருப்பு நாமாக
கசிந் துருகும் அன்பி லிணைந்தே
கனிந்திருக்கும் நறுஞ்சுவைக் கனிகள்
காலத் தேய்விலும் உதிரா நறுமலர்கள்

இதழ் கசியும் கற்கண்டுச் சாறெடுத்தே
இதயம் நனைத்தோம் இன்னுயிர் வருடி
இசைந்திட்ட என் விழியே உன் மொழியாய்
இணைத்திட்டாய் என் பருவச் சுவையினில்
       
மொட்டென நீளும் உன் விரல்கள்
பட்டாலே தேகம் நனைக்கும் பனித்தூறல்
கட்டுடலும் கற்பைச் சிதைக்கா அறமாக
தொட்டுணர்வேன் நானும் காமம் தீண்டாக் காதலால்

ஜாதி மல்லிகை சூழ்ந்திடும் குணமே
சாதி மறந்தே இணைவோம் வாழ்வில்
ஓதி ஒழுகும் நல்லறமே நமதாய்
சோதி ஒளிர்வில் சேர்ந்திருப்போம் நாமே

ஓளி உமிழ்வில் மலரும் மென்மலராய்
ஓர விழி மலர்வாய் என் நிழல் கண்டே
வாசம் வீசும் நறுமணமே – நம்
வாழ்வில் இனி என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர்